சென்னை: “திரையுலகில் போதைப்பொருள் பயன்பாடு நீண்ட நாட்களாகவே உள்ளது. சிகரெட் பிடிப்பதும் போதைப் பழக்கம் தான். அதன் அடுத்த கட்டம் தான் போதைபொருள் பயன்பாடு” என இசையமைப்பாளரும், நடிகருமான விஜய் ஆண்டனி தெரிவித்துள்ளார். விஜய் ஆண்டனி நடிப்பில் அடுத்து வெளியாகும் ‘மார்கன்’ படத்தின் புரோமோஷன் விழா மதுரை சின்ன செட்டிகுளத்தில் உள்ள தனியார் மஹாலில் நடைபெற்றது. இதில், படக்குழுவினருடன் விஜய் ஆண்டனி கலந்து கொண்டார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், இயக்குனர் உடனான நட்பின் அடிப்படையில் ‘மார்கன்’ படத்தை தானே தயாரித்துள்ளதாகக் கூறினார்.
மேலும் அவர் கூறுகையில், “திரையுலகில் போதைப்பொருள் பயன்பாடு நீண்ட நாட்களாகவே உள்ளது. சிகரெட், மது, அதன் அடுத்த கட்டம் தான் போதைபொருள் பழக்கம். நடிகர் ஸ்ரீகாந்த் கைது செய்யப்பட்டுள்ளார். விசாரணை நடைபெற்று வருகிறது. அவர் போதை பயன்படுத்தியது தொடர்பாக எனக்கு எதுவும் தெரியாது. நான் நடிக்கும் ‘சக்தி திருமகன்’ திரைப்படத்திற்கு பின்பு அனைத்து நடிகர்களுக்கும் இசையமைக்க திட்டமிட்டுள்ளேன். மேலும் மற்ற நடிகர்களை வைத்து படம் தயாரிக்க இருக்கிறேன்” என்றார்.