சென்னை: திரைப்படத்துறையில் பாலியல் சுரண்டல்கள் முடிவுக்கு வரவேண்டும் என குஷ்பு தெரிவித்துள்ளார். மலையாள திரையுலகில் நடைபெறும் பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் தொடர்பாக சிறப்பு புலனாய்வு குழு விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளது. பாலியல் புகார்கள் விஸ்வரூபம் எடுத்த நிலையில் மலையாள திரைப்பட நடிகர் சங்கம் நேற்று கூண்டோடு கலைக்கப்பட்டது. நடிகைகளின் பாலியல் புகார்களால் மலையாள திரையுலகில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் திரைப்படத்துறையில் பாலியல் சுரண்டல்கள் முடிவுக்கு வரவேண்டும் என குஷ்பு தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள அவர்; திரைத்துறையில், நிலவும் #MeToo பிரச்சனை நெஞ்சை உடைய வைத்தது. இதற்கு உடன்படாமல் கடைசி வரை நிலைத்து நின்று வெற்றி பெற்ற பெண்களுக்கு தன்னுடைய பாராட்டுக்கள். பெண்கள் தங்களின் வாழ்க்கையில் முன்னேற சமரசம் செய்யவேண்டும் என்ற எதிர்பார்ப்பு, பாலியல் வன்கொடுமைகளை சந்திப்பது போன்ற விஷயங்கள் எல்லா துறைகளிலும் உள்ளது. சமீபத்தில் மலையாள திரையுலகில் எழுந்துள்ள பாலியல் புகார்கள் என்னுடைய மனதை உலுக்குகிறது. பாலியல் வன்கொடுமைகளை யாரும் மறைக்க வேண்டியதில்லை.
உங்களின் கண்ணியம், மரியாதையை ஒருபோதும் சமரசம் செய்ய தேவையில்லை. இது போன்ற பிரச்சனைகளில் பாதிக்கப்பட்ட பல பெண்களுக்கு அவர்களின் குடும்பத்தின் ஆதரவு கூட இல்லை என்பதை நாம் அனைவரும் புரிந்துகொள்ளவேண்டும். சுரண்டல் இத்துடன் கண்டிப்பாக நிறுத்தப்படட்டும். பெண்களே, வெளியே வந்து பேசுங்கள். நினைவில் கொள்ளுங்கள், வாழ்க்கையில் உங்களுக்கு எப்போதும் ஒரு தேர்வு இருக்க வேண்டும் அது கண்டிப்பாக NO-ஆக தான் இருக்கவேண்டும். உங்கள் கண்ணியம் மற்றும் மரியாதையில் ஒரு போதும் சமரசம் வேண்டாம்.
ஒரு பெண்ணாகவும், தாயாகவும், இத்தகைய வன்முறையால் ஏற்பட்ட காயங்கள் சதையில் மட்டுமல்ல, ஆன்மாவிலும் ஆழமாக வெட்டப்படுகின்றன. இந்தக் கொடூரச் செயல்கள் நமது நம்பிக்கை, அன்பு, வலிமை ஆகியவற்றின் அடித்தளத்தையே உலுக்குகின்றது. என் தந்தை எனக்கு கொடுத்த பாலியல் தொல்லை பற்றி பேசுவதற்கு எதற்காக இவ்வளவு நேரம் எடுத்துக்கொண்டீர்கள்? என என்னிடம் சிலர் கேட்கிறார்கள். நான் முன்பே இந்த விஷயத்தை பற்றி பேசியிருக்க வேண்டும் என்பதை நான் ஒப்புக்கொள்கிறேன். ஆனால், எனக்கு நடந்தது, என் தொழிலை உருவாக்குவதற்கான சமரசம் அல்ல.
நான் விழுந்தால் என்னைப் பிடிக்க வலிமையான கரங்களை எனக்குத் தருவதாகக் கருதும் நபரின் கைகளில் இருந்து எனக்கு இந்த பிரச்னை ஏற்பட்டது. அனைத்து ஆண்களிடமும், பாதிக்கப்பட்டவருக்கு ஆதரவாக நிற்கவும், உங்கள் அசைக்க முடியாத ஆதரவைக் காட்டவும் நான் உங்களைக் கேட்டுக்கொள்கிறேன். உங்களுக்கு வாழ்க்கையையும் அன்பையும் வழங்கிய பெண்களை மதிக்கவும். வன்முறைக்கு எதிரான போராட்டத்தில் உங்கள் குரல் ஒலிக்கட்டும், இதை அனுபவித்த அனைத்து பெண்களுடனும் நான் நிற்கிறேன். ஒரு தாயாகவும் பெண்ணாகவும் என்று குஷ்பு கூறியுள்ளார்.