புதுடெல்லி: சட்டீஸ்கர், மிசோரமில் இன்று சட்டப் பேரவை தேர்தலுக்கான ேவட்பு மனு தாக்கல் தொடங்கிய நிலையில், அரசியல் கட்சிகள் சுறுசுறுப்படைந்துள்ளன. மத்திய பிரதேசம், ராஜஸ்தான், சட்டீஸ்கர், தெலங்கானா, மிசோரம் ஆகிய 5 மாநிலங்களுக்கான தேர்தல் அட்டவணை, கடந்த சில தினங்களுக்கு முன் வெளியானது. அதன்படி சட்டீஸ்கர் மாநிலத்தில் முதல் கட்ட தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் இன்று தொடங்கியது. பஸ்தார்-துர்க் போன்ற நக்சல்களால் பாதிக்கப்பட்ட 20 சட்டமன்ற தொகுதிகளுக்கு வரும் 20ம் தேதி வரை வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல் செய்யலாம்.
வேட்புமனுக்கள் பரிசீலனை 21ம் தேதியும், 23ம் தேதி வேட்பு மனுவை திரும்பப் பெறலாம். மேற்கண்ட 20 தொகுதிகளுக்கும் நவம்பர் 7ம் தேதி வாக்குப்பதிவு நடைபெறும். அதேபோல் மிசோரம் சட்டமன்றத் தேர்தலுக்கான வேட்பு மனு இன்று தொடங்கி வரும் 20ம் தேதியுடன் முடிவடைகிறது. மாநிலத்தில் உள்ள 40 சட்டசபை தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக வரும் நவம்பர் 7ம் தேதி வாக்குப்பதிவு நடைபெறுவதால், அங்கு தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது.
சட்டீஸ்கரில் முதற்கட்டமாக தேர்தல் நடத்தப்படும் 20 தொகுதிகளில், 39 லட்சத்து 23 ஆயிரத்து 270 வாக்காளர்கள் வாக்குப்பதிவு செய்ய தகுதி பெற்றவர்களாக உள்ளனர். முதற்கட்டமாக 20 சட்டசபை தொகுதிகளுக்கும் 5 ஆயிரத்து 303 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. முதல் கட்ட தேர்தல் நடக்கும் 20 தொகுதிக்கும், பாஜகவுக்கு மிகவும் சவாலானதாக இருக்கும். நக்சல் பாதித்த இந்த 20 தொகுதிகளில் காங்கிரஸ் 19 இடங்களிலும், ராஜ்நந்த்காவ்ன் என்ற ஒரு தொகுதியில் மட்டும் பாஜக வசம் உள்ளது. பழங்குடியின வாக்காளர்கள் இங்கு அதிகமாக உள்ளதால், அவர்களின் வாக்குகளை கவர காங்கிரஸ் மற்றும் பாஜக ஆகிய இரு கட்சிகளும் தீவிர கவனம் செலுத்தி வருகின்றனர்.
மேலும் நக்சல் பாதித்த பகுதிகளில் முதல்கட்ட வாக்குப்பதிவு நடப்பதால், இப்பகுதியில் 150 துணை ராணுவப் படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்த உள்ளனர். முதற்கட்ட வேட்புமனு தாக்கல் தொடங்கப்பட்ட நிலையில், காங்கிரஸ் கட்சி இன்னும் வேட்பாளர்களை அறிவிக்கவில்லை. விரைவில் வேட்பாளர் பட்டியல் வௌியாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேநேரம் பாஜக சில கட்ட வேட்பாளர்களை அறிவித்துள்ளது. மிசோரம் மாநிலத்தின் 40 ெதாகுதிகளில் உள்ள 8,56,868 வாக்காளர்கள், வாக்களிக்கும் உரிமை பெற்றுள்ளனர். மிசோரம் தேசிய முன்னணி (எம்என்எப்), சோரம் மக்கள் இயக்கம் மற்றும் காங்கிரஸ் இடையே மும்முனைப் போட்டி நிலவுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.