ஆன்ட்வெர்ப்: எப்ஐஎச் புரோ லீக் ஆடவர் ஹாக்கி போட்டித் தொடரில், இந்திய அணி தொடர்ந்து 6வது முறையாக தோல்வியை தழுவி ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தி உள்ளது. எப்ஐஎச் புரோ லீக் ஆடவர் ஹாக்கி தொடரில், ஐரோப்பிய நாடுகள் களத்தில் நடக்கும் போட்டிகளில் இந்தியா பங்கேற்று வருகிறது. இதுவரை நடந்த போட்டிகளில், நெதர்லாந்து, அர்ஜென்டினா அணிகளிடம் இந்தியா தோல்வியை தழுவியது. இந்திய அணி, தொடர்ந்து 5 தோல்விகளை சந்தித்த நிலையில், பெல்ஜியம் நாட்டின் ஆன்ட்வெர்ப் நகரில் நேற்று, ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான போட்டியில் மோதியது.
பரபரப்பாக நடந்த போட்டியில், இந்திய அணி வீரர்கள் சஞ்சய் 3வது நிமிடத்திலும், தில்பிரீத் சிங் 36வது நிமிடத்திலும் கோல்களை அடித்தனர். அதற்கு பதிலடியாக ஆஸியை சேர்ந்த டிம் பிராண்ட் போட்டியின் 4வது நிமிடத்திலும், பிளேக் கோவர்ஸ் 5வது நிமிடத்திலும், கூப்பர்ஸ் பர்ன்ஸ் 18வது நிமிடத்திலும் கோல்கள் அடித்து அசத்தினர். அதன் பின் இரு அணிகளாலும் கோல் போட முடியவில்லை. இதையடுத்து, 2-3 என்ற கோல் கணக்கில் இந்தியா, தொடர்ந்து 6வது முறையாக தோல்வியை சந்தித்தது. அடுத்ததாக, வரும் 21ம் தேதி, பெல்ஜியம் அணியுடன் இந்தியா மோதவுள்ளது.