மதுரை: மதுரையில் நடந்த அதிமுக பொதுக்கூட்டத்தில் மாஜி அமைச்சர் செல்லூர் ராஜூ பேசும்போது, ‘‘மக்களுக்காக போராட வேண்டிய கம்யூனிஸ்ட் கட்சிக்கு கொள்கை ஏதுமில்லை. கம்யூனிஸ்ட் கட்சியை கலைத்து விடலாம்’’ என கூறியிருந்தார். இதுதொடர்பாக மதுரை துவரிமானில் நேற்று நடந்த நன்றி அறிவிப்பு கூட்டத்தில் எம்பி சு.வெங்கடேசன் பேசுகையில், ‘‘கம்யூனிஸ்ட்கள் அழிந்து விடுவார்கள் என செல்லூர் ராஜூ சொல்லிக் கொண்டிருக்கிறார். அதிமுகதான் காணாமல் போய்க் கொண்டிருக்கிறது.
செல்லூர் ராஜூவுக்கு நான் சொல்லிக் கொள்வது எல்லாம், பாசிச பாஜவை எதிர்க்காத, எந்த மாநில கட்சியும் கரைந்து காணாமல் போகும். அதுதான் கடந்த அரை நூற்றாண்டு இந்திய அனுபவம். பாஜ அரசு இன்று தமிழ்நாட்டை வஞ்சிக்கிறது. மதுரையை வஞ்சிக்கிறது. எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுவது தற்போது வரை பிரச்னையாகத்தான் உள்ளது. மதுரை மெட்ரோ பணிக்கு பணம் தர மறுக்கிறார்கள். தமிழ்நாட்டுக்கான உரிமைகள் பறிக்கப்படுகிறது. அதனை எதிர்த்து போராடி உங்களது கட்சியை வளர்க்க பாருங்கள்’’ என கூறினார்.