நியுயார்க்: ஃபிபா கிளப் உலகக் கோப்பை கால்பந்து போட்டியில், ரெட் புல் சால்ஸ்பர்க் அணியை, ஸ்பெயினை சேர்ந்த ரியல் மாட்ரிட் அணி அபாரமாக வென்று அடுத்த சுற்றுக்கு முன்னேறி உள்ளது. ஃபிபா கிளப் உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் உலகின் 32 முன்னணி கால்பந்தாட்ட கிளப் அணிகள் பங்கேற்றுள்ளன. அமெரிக்காவின் பல்வேறு நகரங்களில் நடந்து வரும் இப்போட்டிகளில் வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தை தட்டிச் செல்லும் அணிக்கு ரூ. 1080 கோடி பரிசுத் தொகை வழங்கப்படும். குரூப் எச் – பிரிவில் நேற்று நடந்த ஒரு போட்டியில் ஆஸ்திரியாவை சேர்ந்த ரெட் புல் சால்ஸ்பர்க் அணியும், ஸ்பெயினை சேர்ந்த ரியல் மாட்ரிட் அணியும் மோதின.
விறுவிறுப்பாக நடந்த இப்போட்டியில் ரியல் மாட்ரிட் அணியின் நட்சத்திர வீரர் வினிசியஸ் ஜூனியர், ஃபெட்ரிகோ வால்வெர்டே, கோன்சலோ கார்சியா ஆகியோர் தலா ஒரு கோல் அடித்தனர். சால்ஸ்பர்க் அணியால் கடைசி வரை ஒரு கோல் கூட போட முடியவில்லை. அதனால், 3-0 என்ற கோல் கணக்கில் அபார வெற்றி பெற்ற ரியல் மாட்ரிட், காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு முன்னேறியது.
எச் – பிரிவில் நடந்த மற்றொரு போட்டியில் சவுதி அரேபியாவை சேர்ந்த அல் ஹிலால் அணியும், மெக்சிகோவை சேர்ந்த பச்சுகா அணியும் மோதின. இப்போட்டியில், அல் ஹிலால் அணியின் சலேம் அடாவ்சாரி, மார்கோஸ் லியானோர்டோ தலா ஒரு கோலடித்ததால், 2-0 என்ற கோல் கணக்கில் அந்த அணி அபார வெற்றி பெற்றது. குரூப் – ஜியில் நடந்த ஒரு போட்டியில் மொரோக்கோவை சேர்ந்த வைடாட் அணியும், ஐக்கிய அரபு எமிரேட்சை சேர்ந்த அல் அயின் அணியும் மோதின. இப்போட்டியில், அல் அயின் அணி, 2-1 என்ற கோல் கணக்கில் வென்றது. குரூப் ஜி-யில் நடந்த இன்னொரு போட்டியில் இத்தாலியை சேர்ந்த ஜுவன்டஸ் அணியும், இங்கிலாந்தை சேர்ந்த மான்செஸ்டர் சிட்டி அணியும் மோதின.
இப்போட்டியில் மான்செஸ்டர் சிட்டி வீரர்கள் அற்புதமாக ஆடி 5 கோலடித்தனர். அதற்கு பதிலடியாக ஜுவன்டஸ் அணியால் 2 கோல் மட்டுமே அடிக்க முடிந்ததால் அந்த அணி தோல்வியை தழுவியது.