நியுயார்க்: ஃபிபா கிளப் உலகக் கோப்பை கால்பந்து போட்டிகளில் நேற்று, (மான்செஸ்டர்)மேன் சிட்டி, ஜுவன்டஸ், ரியல் மாட்ரிட் அணிகள் அபார வெற்றி பெற்றன. அமெரிக்காவின் பல்வேறு நகரங்களில், உலகப் புகழ்பெற்ற கால்பந்து அணிகள் மோதும், ஃபிபா கிளப் கால்பந்தாட்ட போட்டிகள் நடந்து வருகின்றன. இதில் முதலிடம் பிடித்து சாம்பியன் பட்டம் வெல்லும் அணிக்கு ரூ. 1080 கோடி பரிசுத் தொகை கிடைக்கும். நேற்று நடந்த போட்டி ஒன்றில் குரூப் ஜி-யில் இடம்பெற்றுள்ள மேன் சிட்டி, அல் அயின் அணிகள் மோதின. இப்போட்டியில் துவக்கம் முதல் துடிப்புடன் மிரட்டலாக ஆடிய மேன் சிட்டி அணி வீரர்கள் சீரான இடைவெளியில் கோல்கள் அடித்து அசத்தினர். அதேசமயம் அல் அயின் அணியினர் ஒரு கோல் கூட போட முடியாமல் தவித்தனர்.
போட்டியின் கடைசியில், 6-0 என்ற கோல் கணக்கில் மேன் சிட்டி அணி அபார வெற்றி பெற்றது. மற்றொரு போட்டியில், குரூப் எச்-ல் இடம்பெற்றுள்ள ரியல் மாட்ரிட், பச்சுகா அணிகள் மோதின. இப்போட்டியில், ஆதிக்கம் செலுத்திய ரியல் மாட்ரிட் அணி, 3-1 என்ற கோல் கணக்கில் பச்சுகா அணியை வீழ்த்தியது. மற்றொரு போட்டியில், குரூப் ஜி-யில் இடம்பெற்றுள்ள ஜுவன்டஸ், வைடாட் ஏசி அணிகள் பங்கேற்றன. இப்போட்டியில் சிறப்பாக ஆடிய ஜுவன்டஸ் அணி வீரர்களின் வேகத்துக்கு ஈடு கொடுக்க முடியாமல் வைடாட் அணியினர் திணறினர். போட்டியின் இறுதியில், 4-1 என்ற கோல் கணக்கில் ஜுவன்டஸ் அணி அபார வெற்றி பெற்றது.