சா பாலோ: ஃபிபா உலகக் கோப்பை கால்பந்து போட்டிகளில் 1930ம் ஆண்டு முதல் உலகக் கோப்பை போட்டிகளுக்கு தகுதி பெற்ற ஒரே அணி என்ற சாதனையை பிரேசில் அரங்கேற்றி உள்ளது. சர்வதேச கால்பந்து சங்கங்களின் கூட்டமைப்பான ஃபிபா நடத்தும் உலகக் கோப்பை கால்பந்து போட்டிகள் உலகின் முக்கியத்துவம் வாய்ந்த போட்டிகளாக கருதப்படுகின்றன. இப்போட்டிகள், வரும் 2026, ஜூன் 11 முதல் ஜூலை 19ம் தேதி வரை நடைபெற உள்ளன. இவற்றை, அமெரிக்கா, கனடா, மெக்சிகோ ஆகிய 3 நாடுகள் நடத்த உள்ளன. இதுவரை நடந்த போட்டிகளில் 32 அணிகள் மட்டுமே விளையாடி வந்தன. மாறாக, 2026ம் ஆண்டு நடக்கும் உலகக் கோப்பை கால்பந்து போட்டிகளில் 48 அணிகள் மோதவுள்ளன.
அமெரிக்கா, மெக்சிகோ, கனடா ஆகிய நாடுகள் போட்டிகளை நடத்துவதால், அவை போட்டிகளில் பங்கேற்பதை உறுதி செய்து விட்டன. தவிர, மேலும் 45 அணிகளை தேர்வு செய்வதற்காக, உலகம் முழுவதும் பல்வேறு நாடுகளில் தகுதிச் சுற்றுப் போட்டிகள் நடந்து வருகின்றன. இதுவரை, ஜப்பான், நியுசிலாந்து, அர்ஜென்டினா ஈரான், உஸ்பெகிஸ்தான், தென் கொரியா, ஜோர்டான், பிரேசில், ஈகுவடார், ஆஸ்திரேலியா ஆகிய நாடுகள் உலகக் கோப்பை போட்டிகளில் பங்கேற்க தகுதி பெற்றுள்ளன. இவற்றில் பராகுவே அணிக்கு எதிராக, கடந்த 10ம் தேதி நடந்த போட்டியில், 1-0 என்ற கோல் கணக்கில் அபார வெற்றி பெற்ற பிரேசில், உலகக் கோப்பை கால்பந்து போட்டி, 1930ம் ஆண்டு துவங்கியது முதல் தொடர்ந்து தகுதி பெற்ற ஒரே அணி என்ற சாதனையை படைத்துள்ளது.