வத்திராயிருப்பு: மழை எச்சரிக்கையால் சதுரகிரி மலைக்கோயிலில் பிரதோஷ நாளான நேற்று குறைவான பக்தர்களே சுவாமி தரிசனம் செய்தனர். மதுரை மாவட்டம், சாப்டூர் அருகே மேற்குத்தொடர்ச்சி மலையில் அமைந்துள்ள சதுரகிரி சுந்தரமகாலிங்கம் மலைக்கோயிலில் ஐப்பசி மாத பிரதோஷம் மற்றும் பவுர்ணமியை முன்னிட்டு நேற்று முதல் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டனர். முன்னதாக, மழை பெய்தால் சுவாமி தரிசனம் ரத்து செய்யப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. எனவே பிரதோஷ நாளான நேற்று பக்தர்கள் வருகை குறைவாகவே இருந்தது.
தாணிப்பாறை அடிவாரத்தில் காலை 6 மணி முதல் வனத்துறையினர் பக்தர்களின் உடமைகளை சோதனை செய்து மலையேற அனுமதித்தனர். கோயிலுக்கு செல்லும் வழியில் உள்ள நீரோடைகளில் பக்தர்கள் குளிக்கக்கூடாது என அறிவுறுத்தப்பட்டது. பகல் 12 மணி வரை மட்டுமே பக்தர்கள் மலையேற அனுமதிக்கப்பட்டனர். பிரதோஷத்தை முன்னிட்டு சுவாமிக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. வரும் 16ம் தேதி வரை பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள் எனவும், மழை பெய்தால் மலையேற அனுமதி கிடையாது எனவும் வனத்துறையினர் தெரிவித்தனர்.