சென்னை:தமிழ்நாடு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் நேற்று சென்னை, ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் உள்ள தமிழ்நாடு அரசு பன்னோக்கு உயர்சிறப்பு மருத்துவமனையில், கருவுறுதலுக்கு முன் மற்றும் பிறப்பிற்கு முந்தைய கருவின் தன்மையறியும் தொழில்நுட்ப முறைகள் செயல் திட்டத்தை மேம்படுத்தும் வகையில் திறன் மேம்பாட்டு பயிற்சி முகாமை தொடங்கி வைத்தார். அப்போது அவர் பேசியதாவது: திமுக அரசு பொறுப்பேற்ற சமயத்தில் குழந்தை பாலின விகிதம் என்பது 1000 ஆண் குழந்தைகளுக்கு 931 பெண் குழந்தைகள் எனும் விகிதம் இருந்தது.
அரசு எடுத்து வரும் பல்வேறு நடவடிக்கைகள் மூலம் 940 பெண் குழந்தைகள் என்று வந்திருக்கிறது. உலகளவில் தற்போது வரை 91,583 கோவிட் தொற்றுகள் பதிவாகி உள்ளன. இந்திய அளவில் 1,800 கோவிட் தொற்றுகள் கண்டறியப்பட்டுள்ளது. மேலும், தமிழ்நாட்டில் மே மாதத்தில் 293 கோவிட் தொற்றுகள் பதிவாகி உள்ளன. அதில் 148 பேர் தற்போது கண்காணிப்பில் உள்ளனர். தமிழ்நாட்டில் நாள்தோறும் கோவிட் தொற்றுகள் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வு துறையால் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகிறது.
பொதுமக்கள் கூட்ட நெரிசலான இடங்களில் முகக்கவசம் அணிவது, இருமும் போதும், தும்மும் போதும் சரியான சுகாதார வழிமுறைகளை கடைபிடித்தல் மற்றும் கை சுத்தம் பேணுவது அவசியம். காய்ச்சல், சுவாச மண்டலத்தில் தொற்றிற்கான அறிகுறிகள் உள்ளவர்கள் குறிப்பாக இணைநோயினால் பாதிக்கப்பட்டவர்கள் அருகிலுள்ள மருத்துவரை அணுகி உரிய சிகிச்சை மேற்கொள்ள வேண்டும். தமிழ்நாடு அரசு தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறது, எனவே பொதுமக்கள் அச்சப்பட தேவையில்லை.
இந்தாண்டு டெங்கு பாதிப்பால் இதுவரை 4 உயிரிழப்புகள் மட்டுமே ஏற்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார். இந்த நிகழ்ச்சியில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் செந்தில்குமார், தேசிய நலவாழ்வு குழும இயக்குநர் அருண்தம்புராஜ், பொது சுகாதாரம் மற்றும் நோய்த்தடுப்பு மருந்துத்துறை இயக்குநர் செல்வவிநாயகம், மருத்துவக்கல்வி மற்றும் ஆராய்ச்சி இயக்குநர் சங்குமணி, மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் இயக்குநர் ராஜமூர்த்தி மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.