தர்மபுரி: கருவின் பாலினம் கண்டறிந்து கூறிய 3 பேர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர். தர்மபுரி மாவட்ட கலெக்டர் சாந்தி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: தர்மபுரி மாவட்டத்தில் பாலின விகிதம் மிகவும் குறைவாக இருப்பதால், அதனை அதிகரிக்க செய்யும் பொருட்டு, கலெக்டர் வழிகாட்டுதல் மற்றும் அறிவுரைபடி, தர்மபுரி மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் இணை இயக்குநர் தலைமையிலான குழுவினர், கருவில் இருக்கும் குழந்தை ஆணா, பெண்ணா என கண்டறிந்து கூறும் கும்பலை தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.
இந்த கும்பலை கண்காணித்து, கடந்த பிப்ரவரி 2ம்தேதி தர்மபுரி மாவட்டம், நல்லம்பள்ளி அருகே பரிகம் கிராமத்திலும், ஜூன் 28ம்தேதி பென்னாகரம் அருகே நெக்குந்தி கிராமத்திலும், கடந்த ஜூலை 25ம்தேதி பெரம்பலூர் மாவட்டம் செங்குணம் கிராமத்திலும், கடந்த 13ம்தேதி பாலக்கோடு மாரண்ட அள்ளி சீங்கேரி கூட்ரோடு கிராமத்திலும் பிடித்து காவல் துறையிடம் ஒப்படைக்கப்பட்டது. அதனடிப்படையில், கள்ளக்குறிச்சி மாவட்டத்தை சேர்ந்த முருகேசன்(45), சின்னராஜ்(29) மற்றும் தர்மபுரி மாவட்டம் இலக்கியம்பட்டியை சேர்ந்த கற்பகம்(39) ஆகியோர், குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளனர். தர்மபுரி மாவட்டத்தில் கருவில் இருக்கும் குழந்தை ஆணா, பெண்ணா என கண்டறிந்து தெரிவிப்பது தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது. இக்குற்றத்தில் ஈடுபடும் நபர்கள் எவராயினும், அவர்கள் மீது உடனடியாக குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கடுமையாக நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு கலெக்டர் தெரிவித்துள்ளார்.