புதுடெல்லி: பண்டிகை காலத்தையொட்டி கடந்த ஆண்டு முக்கிய விமான நிலையங்களில் கூட்ட நெரிசல் ஏற்பட்டது. இதன் காரணமாக பயணிகள் பல மணி நேரம் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. இந்நிலையில் பயணிகளுக்கு ஏற்படும் இதுபோன்ற அசவுகரியங்களை தவிர்க்க ஒன்றிய விமான போக்குவரத்து துறை அமைச்சகம் நடவடிக்கை எடுத்துள்ளது. இது தொடர்பாக அமைச்சகம் வௌியிட்டுள்ள அறிக்கையில், “வரவிருக்கும் பண்டிகை காலத்தில் விமான நிலையத்தில் ஏற்படும் நெரிசலை சமாளிப்பதற்காக, அக்டோபர் மற்றும் நவம்பர் மாதத்திற்குள் இரண்டு கட்டங்களாக கூடுதல் சிஐஎஸ்எப் வீரர்களை பணியில் ஈடுபடுத்துவது உட்பட அமைச்சகம் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது. இது தவிர குடியேற்ற பிரிவில் கூடுதல் ஊழியர்களை நியமிப்பது அக்டோபரில் தொடங்கும். விமான நிலைங்களில் பாதுகாப்பு உள்கட்டமைப்பிற்கு ஆதரவு அளிக்கும் வகையில் கூடுதல் எக்ஸ்ரே இயந்திரங்கள், செக் இன் கவுன்டர்கள் மற்றும் சுய பேக்கேஜ் டிராப் வசதி ஏற்பாடு செய்யப்படும்” என குறிப்பிடப்பட்டுள்ளது.