புதுடெல்லி: அத்தியாவசிய உரங்கள் பற்றாக்குறை காரணமாக தவிக்கும் விவசாயிகளுக்கு உதவுவதற்கு அரசு நடவடிக்கை எடுக்கவில்லை என்று மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல்காந்தி குற்றம்சாட்டியுள்ளார். மக்களவை எதிர்க்கட்சி தலைவரான ராகுல்காந்தி தனது பேஸ்புக் பதிவில்,‘‘இந்தியா ஒரு விவசாய நாடு. விவசாயிகள் நமது பொருளாதாரத்தின் முதுகெலும்பு. ஆனால் இந்த முதுகெலும்பு வெளிநாட்டு சார்பு காரணமாக வளைந்து கொண்டு இருக்கிறது. இந்தியா 80 சதவீத சிறப்பு உரங்களை சீனாவில் இருந்து இறக்குமதி செய்கிறது.
80 சதவீதம் சிறப்பு உரங்கள் சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்படுகின்றது. இப்போது சீனா விநியோகத்தை நிறுத்தி விட்டது. இது முதல் முறையல்ல. நாடு முழுவதும் விவசாயிகள் யூரியா மற்றும் டிஏபி போன்ற அத்தியாவசிய உரங்களின் பற்றாக்குறையால் போராடி வருகின்றனர். இப்போது சிறப்பு உரங்களின் சீன நெருக்கடி உருவாகி வருகின்றது. இந்த விநியோகம் எந்த நேரத்திலும் நிறுத்தப்படலாம் என்பதை அறிந்திருந்தும், அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. உள்நாட்டு உற்பத்தியை ஊக்குவிக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டபோது, அவர்கள் எந்த கொள்கையையும்,திட்டத்தையும் உருவாக்கவில்லை. விவசாயி தனது சொந்த மண்ணிலும் கூட மற்றவர்களை சார்ந்து இருப்பாரா? விலைமதிப்பற்ற நேரத்தையும் நல்ல பயிர்களையும் இழந்து கடனிலும், விரக்தியிலும் மூழ்கியிருக்கும் விவசாயிகள் ‘யாருடன், யாருடைய வளர்ச்சிக்காக’என்று கேட்கிறார்கள்” என்று குறிப்பிட்டுள்ளார்.