சென்னை: கனமழை எச்சரிக்கை காரணமாக நாளை (நவ.30) பல்வேறு மாவட்டங்களுக்கு பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கபப்ட்டுள்ளது. தென்மேற்கு வங்கக்கடலில் நிலவிவரும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், ஃபெஞ்சல் என்ற புயலாக, இன்றுக்குள் மாறும் என்று வானிலை ஆய்வு மையம் ஏற்கனவே கணித்திருந்தது. புயல் எச்சரிக்கை காரணமாக சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் விழுப்புரம் ஆகிய ஆகிய மாவட்டங்களில் கடந்த சில நாட்களாகவே விட்டுவிட்டு மிதமானது முதல் கனமழை பெய்து வருகிறது. சென்னை உள்ளிட்ட மாவட்டங்கள் மட்டுமின்றி டெல்டா மாவட்டங்களான திருவாரூர், தஞ்சாவூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களில் கனமழை வெளுத்து வாங்கியது.
ஃபெஞ்சல் புயல் நாளை பிற்பகல் கரையைக் கடக்கும் என இந்திய வானிலை ஆய்வு மைய தென் மண்டல தலைவர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார். வடமேற்கு திசையில் நகர்ந்து நாளை காரைக்கால்-மாமல்லபுரம் இடையே ஃபென்ஜால் புயல் கரையைக் கடக்கும். புயல் கரையைக் கடக்கும் போது ஒருசில இடங்களில் 90 கி.மீ. வேகத்தில் காற்று வீசக்கூடும். வட தமிழக கடலோர மாவட்டங்களில் மணிக்கு 70 கி.மீ. வேகத்தில் காற்று வீசும். சென்னை, புறநகர் பகுதிகளிலும் நாளை ஓரிரு இடங்களில் அதிகனமழைக்கு வாய்ப்பு உள்ளது எனக் குறிப்பிட்டுள்ளார்.
கனமழை எச்சரிக்கை காரணமாக நாளை (நவ.30) பல்வேறு மாவட்டங்களுக்கு பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, நாகை, கடலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, ராணிப்பேட்டை, மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. திருவாரூர் மாவட்டத்தில் நாளை அனைத்து பள்ளிகளும் செயல்படும் என்று மாவட்ட ஆட்சியர் சாருஸ்ரீ அறிவித்துள்ளார்.