பழநி: திண்டுக்கல் மாவட்டம், பழநி தெற்குவீதியை சேர்ந்தவர் சுகுமார் (45). பைனான்சியர். இவரது நண்பர்கள் நாராயணசாமி (44), துர்க்கைராஜ் (45). சில நாட்களுக்கு முன்பு நாராயணசாமி வீட்டில் நண்பர்கள் இருவரும் வந்து மது அருந்தியுள்ளனர். இவர்களுடன் அதே பகுதியை சேர்ந்த ராணி சித்ரா (40) என்ற பெண்ணும் மது அருந்தினார். சில நாட்களுக்கு பிறகு சுகுமாருக்கு போன் செய்த நாராயணசாமி, துர்க்கைராஜ் ஆகியோர் ராணி சித்ராவுடன் ஒன்றாக அமர்ந்து மது அருந்தியதை வீடியோ எடுத்து வைத்திருப்பதாகவும், ரூ.10 லட்சம் தராவிட்டால் வீடியோவை உனது குடும்பத்திற்கும், சமூக வலைத்தளங்களிலும் பதிவேற்றம் செய்து விடுவோம் எனவும் கூறி மிரட்டினர்.
இதுகுறித்து சுகுமார், பழநி டவுன் போலீசில் புகார் அளித்தார்.
போலீசார் நடத்திய விசாரணையில், நாராயணசாமி, துர்க்கைராஜ் ஆகியோர் பைனான்ஸ் அதிபர்கள், ரியல் எஸ்டேட் தொழில் செய்பவர்கள் என பணம் சரளமாக புழங்கும் நபர்களை குறிவைத்து, நட்புறவு ஏற்படுத்தி, ராணி சித்ராவை பழக வைத்து, மிரட்டி பணம் பறிக்கும் செயலில் ஈடுபடுவது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் ராணி சித்ரா, நாராயணசாமி, துர்க்கைராஜை கைது செய்தனர். கைதான ராணி சித்ரா, பெண் போலீசாக பணியாற்றி ராஜினாமா செய்தவர் என்பதும், கருத்து வேறுபாட்டால் கணவரை பிரிந்து வாழ்பவர் என்பதும் குறிப்பிடத்தக்கது. மேலும், செல்போனில் அரசியல்வாதிகள், தொழிலதிபர்கள் உள்பட முக்கிய பிரமுகர்களின் எண்களும் இருந்ததாக கூறப்படுகிறது. எனவே, போலீசார் பணம் பறிகொடுத்தவர்களிடம் ரகசிய விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்.