சேலம்: பெண் அதிகாரி குறித்து செல்போன் ஸ்டேட்டசில் அவதூறு தெரிவித்த சேலம் எஸ்.பி.க்கு டிஐஜி மெமோ கொடுத்து விசாரணை நடத்தி வருகிறார். சேலம் மாவட்ட எஸ்பியாக இருப்பவர் சிவக்குமார். இவர், கடந்த சில நாட்களுக்கு முன்பு தனது செல்போன் ஸ்டேட்டசில் மாநகர துணை கமிஷனர் லாவண்யா குறித்து ஒரு தகவல் வைத்திருந்தார். இது காவல்துறை அதிகாரிகளிடையே பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து துணை கமிஷனர் லாவண்யா, மாநகர போலீஸ் கமிஷனர் விஜயகுமாரியிடம் புகார் தெரிவித்தார். இந்த நிலையில் சேலம் சரக டிஐஜி ராஜேஸ்வரி, சேலம் மாவட்ட எஸ்பி சிவக்குமாருக்கு மெமோ ஒன்று கொடுத்துள்ளார். அதில், ‘பெண் துணை கமிஷனர் குறித்து பொய்யான தகவலை வெளியிட்டு அவருக்கு மன உளைச்சலை ஏற்படுத்தியுள்ளீர்கள். உங்கள் மீது துறை ரீதியான நடவடிக்கையை ஏன் எடுக்கக் கூடாது’ என்று கேட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்த விவகாரம் தொடர்பாக சேலம் சரக டிஐஜி ராஜேஸ்வரி, கோவை மேற்கு மண்டல ஐஜி சுதாகர் ஆகியோர் விசாரணை நடத்தி வருகின்றனர்.