பழநி: பழநி அருகே, பெட்ரோல் குண்டு வீசி, பெண் தொழிலாளியை கொலை செய்த கள்ளக்காதலனை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர். திண்டுக்கல் மாவட்டம், பழநி அருகே உள்ள அழகாபுரியைச் சேர்ந்தவர் விஜயா (38). கட்டிடத் தொழிலாளி. இவருக்கு 2 மகள்கள் உள்ளனர். பழநி சுற்றுவட்டாரப் பகுதியில் விஜயா கட்டிட வேலைக்குச் சென்று வந்தார். இந்நிலையில், கடந்த 5 நாட்களுக்கு முன் வீட்டில் தனது மகள்களுடன் விஜயா தூங்கிக் கொண்டிருந்தார். அன்று நள்ளிரவில் மர்மநபர் ஒருவர் வந்து கதவை தட்டியுள்ளார். தூக்க கலக்கத்துடன் விஜயா கதவைத் திறந்துள்ளார். அப்போது வாசலில் நின்றிருந்த மர்மநபர், விஜயா மீது பெட்ரோல் குண்டை வீசிவிட்டு தப்பிச் சென்றார். விஜயா மீது தீப்பற்றி எரிந்தது. வலி தாங்க முடியாமல் அலறினார். அக்கம்பக்கத்தினர் ஓடி வந்து தீயை அணைத்து விஜயாவை மீட்டு, பழநி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.
இது குறித்து தகவலறிந்த பழநி தாலுகா போலீசார் மருத்துவமனையில் விஜயாவிடம் விசாரித்தபோது, தன்னை கொல்லும் நோக்கத்தில் கள்ளக்காதலன் குப்புச்சாமி (36) என்பவர் பெட்ரோல் குண்டு வீசியதாக தெரிவித்தார். இதையடுத்து, போலீசார் தலைமறைவான குப்புசாமி மீது கொலை முயற்சி வழக்குப்பதிவு செய்தனர். இதற்கிடையே, மருத்துவமனையில் சிகிச்சை பலனளிக்காமல் விஜயா நேற்று பரிதாபமாக இறந்தார். இதையடுத்து கொலை வழக்காக பதிவு செய்து, பழநி அருகே வண்டிவாய்க்கால் பகுதியில் பதுங்கியிருந்த குப்புசாமியை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.