புதுடெல்லி: ஒன்றிய அரசு மருத்துவமனைகளில் புதிய பாதுகாப்பு விதிகள் அமல்படுத்த வேண்டும் என்று ஒன்றிய சுகாதார அமைச்சகம் அறிவுறுத்தல்களை வழங்கி உள்ளது. கொல்கத்தா பெண் மருத்துவர் பலாத்கார கொலை சம்பவத்தை தொடர்ந்து, அங்குள்ள மருத்துவமனை தாக்கப்பட்டது. இந்நிலையில் ஒன்றிய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள அனைத்து மருத்துவமனைகளும், புதிய பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு ஒன்றிய சுகாதார அமைச்சகம் அறிவுறுத்தி உள்ளது. இதுகுறித்து ஒன்றிய சுகாதார அமைச்சகம் வெளியிட்ட சுற்றறிக்கையில், ‘ஒன்றிய அரசின் கட்டுப்பாட்டில் இருக்கும் அனைத்து மருத்துவமனைகளின் நுழைவு வாயில் மற்றும் வெளியேறும் இடங்களில் தீவிர கண்காணிப்பை உறுதி செய்ய வேண்டும்.
இரவில் பணிபுரியும் பெண் மருத்துவ நிபுணர்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்குதல் வேண்டும். இரவில் பணிபுரியும் பெண் மருத்துவர்களை ஜோடிகளாகவோ அல்லது குழுக்களாகவோ பணியில் நியமிக்க வேண்டும். அவர்களின் ஷிப்டுகளின் போது வளாகத்திற்குள் உரிய பாதுகாவலர்களுடன் அழைத்துச் செல்ல வேண்டும். அவர்களின் இரவு நேர பணிகளின் போது போக்குவரத்து ஏற்பாடுகளை ெசய்து தர வேண்டும். மருத்துவமனையின் அனைத்து பகுதிகளிலும் சிசிடிவி கேமராக்களை நிறுவ வேண்டும். அவசரநிலைகளுக்கு ஏற்ற வகையில் முன்ெனச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். அதற்காக மருத்துவமனைக்குள் கட்டுப்பாட்டு அறை ஒன்றை நிறுவ வேண்டும். மருத்துவமனைக்குள் அங்கீகரிக்கப்பட்ட பணியாளர்கள் மட்டுமே அனுமதிக்க வேண்டும்.
மருத்துவமனை ஊழியர்கள், நோயாளிகள் மற்றும் பார்வையாளர்களை எளிதில் அடையாளம் காணும் வகையில், அவர்களுக்கு அடையாள அட்டைகள் வழங்கப்பட வேண்டும். அனைத்து மருத்துவமனை ஊழியர்களும் பணியின் போது தங்கள் அடையாள அட்டைகளைக் காண்பிக்க வேண்டும். மேலும் பார்வையாளர்கள் அனைவரையும் கண்காணிக்க உரிய ஏற்பாடுகள் செய்யப்பட வேண்டும். மருத்துவமனை வளாகத்தில் உரிய கண்காணிப்பு, ரோந்து பணிகளை மேற்கொள்ள வேண்டும். மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் பணியாளர்கள் உட்பட அனைத்து மருத்துவமனை ஊழியர்களும், பாதுகாப்பு அச்சுறுத்தல்களை திறம்பட எதிர்கொள்ள அவர்களுக்கு உரிய பயிற்சியளிக்க வேண்டும். உள்ளூர் காவல்துறை மற்றும் அவசர சேவை பிரிவுகளுடன் ஒருங்கிணைந்து பணியாற்ற வேண்டும்’ போன்ற விதிமுறைகளை வகுத்துள்ளது.