தர்மபுரி: ெபற்றோர் பார்த்த மாப்பிள்ளை பிடிக்காததால், தனியார் மருத்துவமனையில் பெண் டாக்டர் ஊசி போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். தர்மபுரி மாவட்டம், ஹரிகரநாத கோயில் தெருவை சேர்ந்தவர் பச்சியப்பன் மகள் மோனிகா(27). இவர் பிலிப்பைன்சில் எம்பிபிஎஸ் முடித்து விட்டு, கடந்த 2 ஆண்டுகளாக தர்மபுரி டவுனில் தனியார் மருத்துவமனையில் டாக்டராக பணியாற்றி வந்தார். இந்நிலையில், நேற்று முன்தினம் மருத்துவமனைக்கு இரவு பணிக்கு சென்றார். நள்ளிரவு தனி அறையில் தூங்கியுள்ளார். நேற்று அதிகாலை 2 மணிக்கு, புறநோயாளி பிரிவுக்கு நோயாளிகள் வந்ததால், செவிலியர்கள் மருத்துவரின் அறைக்கு சென்று கதவை தட்டினர். ஆனால், டாக்டர் மோனிகா கதவை திறக்கவில்லை. ஜன்னல் வழியாக பார்த்தபோது, குளுக்கோஸ் போடும் ஊசியை கையில் செலுத்திய நிலையில், அவர் மயங்கி கிடந்தார்.
உடனடியாக கதவை உடைத்து சென்று அவரை மீட்டனர். அதே மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி டாக்டர் மோனிகா பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து தர்மபுரி டவுன் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தினர். முதல் கட்ட விசாரணையில், டாக்டர் மோனிகாவிற்கு அவரது பெற்றோர் திருமணம் செய்ய ஏற்பாடு செய்துள்ளனர். அவர்கள் பார்த்த மாப்பிள்ளையை தனக்கு பிடிக்கவில்லை என்று தோழிகளிடம் கூறியுள்ளார். இதனால் மனஉளைச்சலில் இருந்த மோனிகா, தவறான மருந்தை ஊசியில் செலுத்தி தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. அவரது கைப்பையில், 40 தூக்கமாத்திரைகளும் இருந்துள்ளது.