இந்தூர்: ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை குறித்து விளக்கி கூறிய கர்னல் சோபியா குரேஷி குறித்து மத்தியபிரதேச பழங்குடியினர் விவகாரத்துறை அமைச்சர் குன்வர் விஜய் ஷா, “பஹல்காமில் தாக்குதல் நடத்திய பாக்.சகோதரி மூலம் அவர்களுக்கு பதில் அளிக்கப்பட்டது” என்று பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியது. இதுகுறித்து மத்தியபிரதேச உயர் நீதிமன்றம் தானாக முன்வந்து வழக்கு பதிவு செய்ததுடன், விஜய் ஷா மீது முதல் தகவல் அறிக்கை தாக்கல் செய்யும்படி மாநில காவல்துறைக்கு உத்தரவிட்டது. இந்த சூழலில் மத்தியபிரதேசம் இந்தூர் மாவட்ட காங்கிரஸ் சேவாதள செயல் தலைவர் விவேக் கண்டேல்வால் சார்பில் இந்தூர் மாவட்டத்தின் முக்கிய இடங்களில், “சர்ச்சைக்குரிய அமைச்சர் குன்வர் விஜய் ஷாவை காணவில்லை. அவரை கண்டுபிடித்து தருபவர்களுக்கு ரூ.11,000 வெகுமதி தரப்படும்” என ஒட்டப்பட்டுள்ள சுவரொட்டிகளால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து விவேக் கண்டேல்வால் கூறுகையில், “அமைச்சர் விஜய் ஷாவை எங்கேயும் பார்க்க முடிவதில்லை. அமைச்சரவை கூட்டங்களில் கூட அவரை காண முடியாததால் இந்த சுவரொட்டிகளை வைத்துள்ளோம்” என்றார்.
* சிறப்பு குழு விசாரணை தொடக்கம்
மத்தியப்பிரதேச அமைச்சர் விஜய் ஷாவின் சர்ச்சைக்குரிய கருத்து குறித்து உச்சநீதிமன்றம் 3 பேர் கொண்ட சிறப்பு விசாரணை குழு அமைப்பதற்கு உத்தரவிட்டது. மேலும் வருகிற 28ம் தேதிக்குள் முதல் தகவல் அறிக்கையை சமர்ப்பிக்கவும் உத்தரவிட்டது. இதனை தொடர்ந்து சிறப்பு விசாரணை குழு கடந்த வியாழன்று விசாரணையை தொடங்கியுள்ளதாக அந்த குழு உறுப்பினர் தெரிவித்தார்.