வெலிங்டன்: நியூசிலாந்தின் பிரபல பெண் பாடி – பில்டர் ரேசெல் சேஸ் திடீரென இறந்தது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். நியூசிலாந்து நாட்டின் பாடி – பில்டரும், உடற்பயிற்சி ஆர்வலருமான ரேசெல் சேஸ் (41) என்பவர், சமூக வலைதளங்களில் 14 லட்சம் பின்தொடர்பவர்களை கொண்டவர். ஐந்து குழந்தைகளின் தாயான ரேசெல் சேஸ், உடற்பயிற்சி தொடர்பான வீடியோக்களை சமூக வலைதளங்களில் வெளியிடுவார். இந்நிலையில் அவர் மர்மமான முறையில் இறந்தார். அவரது மரணம் குறித்து நியூசிலாந்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் குறித்து போலீஸ் அதிகாரிகள் கூறுகையில், ‘ரேசெல் சேஸின் மரணம் குறித்து விசாரிக்கப்படுகிறது. பிரேத பரிசோதனை அறிக்கை கிடைத்த பின்னரே இறுதி முடிவு அறிவிக்கப்படும்’ என்று தெரிவித்தனர்.
இந்நிலையில் ரேசெல் சேஸின் மூத்த மகள் அன்னா சேஸ் வெளியிட்ட பதிவில், ‘அன்பான இதயம் கொண்ட எனது தாய், எங்களுக்கு சிறந்த ஆலோசனைகளை வழங்குவார். சிறந்த லட்சியவாதியான அவர், உலகின் பலருக்கும் வழிகாட்டியாக இருந்தார். எனது தாயின் மறைவால் வாடுகிறேன்’ என்று குறிப்பிட்டுள்ளார். முன்னதாக கடந்த 14 ஆண்டுகளுக்கு முன் கிரிஸ் சேஸ் என்பவரை ரேசெல் சேஸ் திருமணம் செய்து கொண்டார். போதைப்பொருள் கடத்தல் வழக்கில் கிரிஸ் சேஸ் சிக்கியதால், அவர் தற்போது சிறையில் உள்ளார். இந்த நிலையில் ரேசெல் சேஸ் திடீரென இறந்தது, அவரது ரசிகர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.