காசா: ஹமாஸ் இயக்கத்தினர் முதன்முறையாக தங்களது கட்டுப்பாட்டில் உள்ள பிணைய கைதி ஒருவரின் காணொளியை வெளியிட்டு இருக்கிறார்கள். அக்டோபர் 7ம் தேதி காசா முனையில் இருந்து அதிரடியாக இஸ்ரேலுக்குள் நுழைந்த ஹமாஸ் இயக்கத்தினர் கண்மூடி தனமாக தாக்குதல்களை நடத்தினர். இதில் ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் கொல்லப்பட்டனர். இஸ்ரேலில் இருந்து நூற்றுக்கு மேற்பட்டோரை ஹமாஸ் படையினர் பிணைய கைதிகளாக பிடித்து சென்றனர். அவர்களின் விவரங்கள் எது வெளியிடப்படாத நிலையில், தன்னுடைய பிடியில் இருக்கும் பிணைய கைதி ஒருவரின் காணொளியை ஹமாஸ் இயக்கத்தினர் வெளியிட்டு இருக்கிறார்கள்.
அந்த வீடியோவில் மியா ஷெம் என்ற 21 வயது இளம்பெண் இருக்கிறார். இஸ்ரேலில் ஹமாஸ் தாக்குதல் நடத்திய முதல் நாளான அக்டோபர் 7-ம் தேதி நடைபெற்ற விழா ஒன்றின் போது இளம்பெண் மியா ஷெம் ஹமாஸ் படையினர் சிறை பிடித்தனர். அப்போது நடத்தப்பட்ட தாக்குதலில் வலது கையில் ஏற்பட்ட காயத்திற்கு காசா முனை பகுதியில் அவருக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. ஹமாஸ் வெளியிட்டு இருக்கும் ஒரு நிமிட வீடியோவில் மியா ஷெம் சிகிச்சை பெறும் காட்சிகளும் அவருடைய நிலையை விவரிக்கும் காட்சிகளும் இடம் பெற்று இருகின்றன.