கொல்கத்தா: கொல்கத்தாவில் உள்ள ஆர்.ஜி. கர் மருத்துவ கல்லூரியில் முதுகலை பயிற்சி பெண் டாக்டர் ஒருவர் பலாத்காரம் செய்து கொலை செய்யப்பட்டுள்ளார். இந்த சம்பவம் தொடர்பாக சஞ்சய் ராய் என்பவனை கைது செய்து உள்ளனர்.இந்த கொலை வழக்கை கொல்கத்தா உயர்நீதிமன்றம் உத்தரவின்படி சிபிஐ விசாரிக்க தொடங்கியுள்ளது.
பெண் டாக்டர் கொலையை கண்டித்து டாக்டர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.ஆர்.ஜி.கர் மருத்துவமனையில் நேற்றுமுன்தினம் நள்ளிரவிலும் போராட்டம் நீடித்தது. ஏராளமான பெண்களும் கலந்து கொண்டனர். அப்போது ஒரு கும்பல் மருத்துவமனையின் அவசர சிகிச்சை பிரிவுக்குள் புகுந்து அங்கிருந்த கருவிகளை அடித்து உடைத்தனர். நிலைமை கைமீறி சென்றதால் போலீசார் முதலில் தடியடி நடத்தினர். கும்பல் கலையாததால் கண்ணீர் புகை குண்டுகளை வீசி கலைத்தனர். இந்த சம்பவத்தில் மருத்துவமனைக்கு வெளியே இருந்த 2 வாகனங்களை போராட்டக்காரர்கள் தீ வைத்தனர்.சில போலீசாருக்கும் காயம் ஏற்பட்டது.
மேற்கு வங்க சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர் சுவேந்து அதிகாரி,‘‘மம்தா பானர்ஜியால் அனுப்பப்பட்ட ரவுடிகள் தான் தாக்குதலில் ஈடுபட்டுள்ளனர் என குற்றம் சாட்டினார். இதனிடையே மருத்துவமனை வன்முறை தொடர்பாக 9 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.