ஓசூர்: கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் சானசந்திரம் பகுதியில் வசித்து வருபவர் மகேஸ்வரன்(58). இவர் வனத்துறையில் வேலை பார்த்து வருகிறார். இவரது மகள் கிருத்திகா(25), பல் மருத்துவம் படித்துள்ளார். கடந்த ஒன்றரை மாதத்திற்கு முன்பு, ஓசூர்-தேன்கனிக்கோட்டை சாலையில், தனியார் பல் மருத்துவமனையில் கிருத்திகா பணிக்கு சேர்ந்தார். இந்த மருத்துவமனையை டாக்டர் அன்புசெல்வன் (38) என்பவர் நடத்தி வருகிறார். ஏற்கனவே திருமணமான இவரை, கருத்து வேறுபாடு காரணமாக மனைவி பிரிந்து சென்று விட்டதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், நேற்று முன்தினம், டாக்டர் அன்புசெல்வன் ஓசூர் பத்தலப்பள்ளி பகுதிக்கு டூவீலரில் கிருத்திகாவை அழைத்து சென்றார். அங்கு தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு கட்டாயப்படுத்தி உள்ளார். அப்போதும், கிருத்திகா மறுப்பு தெரிவித்ததால், ஆத்திரமடைந்த அன்புசெல்வன், அவரை சரமாரியாக தாக்கினார். பின்னர், அவரை வீட்டில் விட்டு விடுவதாக கூறி, தனது மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றார். அங்கு கிருத்திகாவின் செல்போன், செயின், பிரேஸ்லெட் ஆகியவற்றை வாங்கி வைத்துக் கொண்டு, மீண்டும் அவரை சரமாரியாக தாக்கியுள்ளார். மேலும், அவரை முட்டி போட வைத்தும் தாக்கியதாக கூறப்படுகிறது.
இதை கண்டு சக டாக்டர்கள் மற்றும் நர்சுகள் அவரை தடுக்க முயன்றனர். இதனிடையே, கிருத்திகாவின் செல்போன் சுவிட்ச் ஆப் என வந்ததால், பதறிப்போன அவரது தாய் அனிதா, மகளை தேடி அவர் வேலை செய்யும் மருத்துவமனைக்கு வந்தார். அப்போது தான் அவருக்கு தனது மகள் தாக்கப்பட்டது தெரியவந்தது. பின்னர், படுகாயமடைந்த கிருத்திகாவை மீட்டு, ஓசூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தார். இது குறித்து ஓசூர் டவுன் போலீசார் விசாரித்து வருகின்றனர்.