Saturday, December 2, 2023
Home » வெட்டி சாய்க்கப்படும் மரங்கள் வனத்துறைக்கு சொந்தமான 100 ஏக்கர் நிலம் ஆக்கிரமிப்பு? கலெக்டர் நடவடிக்கை எடுக்க கோரிக்கை

வெட்டி சாய்க்கப்படும் மரங்கள் வனத்துறைக்கு சொந்தமான 100 ஏக்கர் நிலம் ஆக்கிரமிப்பு? கலெக்டர் நடவடிக்கை எடுக்க கோரிக்கை

by Karthik Yash

கும்மிடிப்பூண்டி: கும்மிடிப்பூண்டி அருகே சாணாபுத்தூர் ஊராட்சியில் வனத்துறைக்கு சொந்தமான 100 ஏக்கர் நிலங்களில் மரங்கள் வெட்டி சாய்க்கப்பட்டுள்ளன. தனிநபர்கள் ஆக்கிரமிப்பு செய்வதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. எனவே, கலெக்டர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஊராட்சி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். கும்மிடிப்பூண்டி அடுத்த சாணாபுத்தூர் ஊராட்சியில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கிராம மக்கள் வசித்து வருகின்றனர். இங்கு 500 ஏக்கர் பரப்பில் மிளகாய், காராமணி, நெல், உள்ளிட்ட பல்வேறு விதமான பயிர்களை விவசாயிகள் விவசாயம் செய்து வருகின்றனர். இந்த ஊராட்சி உட்பட்ட பகுதியில், சுமார் 150 ஏக்கர் பரப்பளவில் வனப் பகுதி அமைந்துள்ளது. இந்த வனப்பகுதி நிலம் தற்போது வரை, 100 ஏக்கருக்கு மேல் தனி நபர்களால் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு, வனப்பகுதியில் உள்ள செம்மரம், தேக்கு, சவுக்கு உள்ளிட்ட விலை உயர்ந்த மரங்களும், முந்திரி, மாமரம், பலாமரம் என பலன் தரும் மரங்களும் அழிக்கப்பட்டு பல கோடி ரூபாய் அரசுக்கு இழப்பு ஏற்பட்டுள்ளது என கூறப்படுகிறது.

இதுதொடர்பாக, அப்பகுதி மக்களும் சுற்றுச்சூழல் பாதுகாப்பாளர்களும், சமூக ஆர்வலர்களும் மாதர்பாக்கத்தில் அமைந்துள்ள வனத்துறை அதிகாரிகளிடமும், திருவள்ளூரில் உள்ள மாவட்ட வன அலுவலரிடமும் பலமுறை புகார் தெரிவித்தும் உள்ளனர். இருப்பினும், வனத்துறை அதிகாரிகள், வனப்பகுதிகளை பாதுகாப்பதற்கு பதிலாக ஆக்கிரமிப்பாளர்களுக்கு ஆதரவாக செயல்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. வனத்துறை இடத்தில் ஆக்கிரமிப்பாளர்கள் மா, பலா, வாழை போன்ற கனி தரும் மரங்களை தனிநபர்கள் வளர்த்து வருகின்றனர்.

இதில், கிடைக்கும் லாபத்தில் வன துறையினருக்கு சரிபாகம் வழங்கப்படுவதாகவும் கூறப்படுகிறது. மேலும், வனப்பகுதியில் வெட்டப்படும் விலை உயர்ந்த செம்மரம், தேக்கு, சவுக்கு உள்ளிட்டவைக்கு கடும் கிராக்கி உள்ளதால், வனத்துறை அதிகாரிகளே தனி நபர்களோடு சேர்ந்து இரவோடு இரவாக மரங்களை வெட்டி விற்பனைக்கு உதவுவதாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன் கொண்டமாநல்லூர் பகுதியைச் சேர்ந்த ஒருவர் வனத்துறைக்கு சொந்தமான நிலத்தில் உள்ள மரங்களை அத்துமீறி நுழைந்து வெட்டி நில அபகரிப்பில் ஈடுபட்டுள்ளார்.

இது தொடர்பாக வனத்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்ததாகவும் கூறப்படுகிறது. இதேபோல், வனத்துறைக்கு சொந்தமான நிலங்கள் அபகரிப்பு குறித்து சமூக வலைதளங்களில் புகைப்படங்களும், வீடியோக்களும் வெளிவந்தது. ஆனால், இச்சம்பவம் தொடர்பாக வனத்துறை அதிகாரிகள் எவ்வித மேல் நடவடிக்கையும் எடுக்கவில்லை. நில ஆக்கிரமிப்பாளர்களுக்கு ஆதரவாகவே வனத்துறையினர் செயல்பட்டு வருகின்றனர். அதேபோல், மீதமுள்ள சுமார் 50 ஏக்கர் பரப்பளவு கொண்ட நிலமும் பராமரிப்பின்றி மரங்கள் அழிக்கப்பட்டு வருகிறது. எனவே, மாயமான பல கோடி ரூபாய் மதிப்பிலான செம்மரம், தேக்கு, சவுக்கு உள்ளிட்ட விலை உயர்ந்த மரங்களை கணக்கெடுக்க வேண்டும். இந்த, சம்பவங்களில் தொடர்புடையவர்கள் மீது குற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என சாணாபுத்தூர் மற்றும் சுற்றுவட்டார பகுதி மக்கள் திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் பிரபுசங்கருக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

You might be intrested in

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2023 – Designed and Developed by Sortd.Mobi

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?