Thursday, February 29, 2024
Home » கால்களைப் பிடியுங்கள் காரியம் ஆகும்

கால்களைப் பிடியுங்கள் காரியம் ஆகும்

by Kalaivani Saravanan

விஸ்வாமித்திரர், வேள்வியைக் காப்பதற்காக தசரதனிடம் போய் ‘‘உன்னுடைய மகன் ராமனை என்னோடு அனுப்பு’’ என்று கேட்கின்றார். இங்கே ஒரு நுட்பம் இருக்கின்றது. பொதுவாக, பகவானை வேள்விகளைக் காப்பவன் என்று சொல்வார்கள். யாகத்தை `சம்ரக்ஷணம் செய்பவன்’ (யாகத்தை காப்பவன்) என்று சொல்வார்கள்.

`யஜ்ஞேன யஜ்ஞம் அயஜந்த தேவாஸ் தானி
தர்மன்னி ப்ரதமான்ய ஆசன்
தே ஹ நாகம் மஹிமானாஹ் ச சந்த
யத்ர பபூர்வே ஸாத்யாஹ் ஸந்தி தேவாஹ்’

– என்கிறது புருஷ சூக்தம்.

ஸ்ரீமுஷ்ணத்தில் இருக்கக்கூடிய வராகப் பெருமாள், உற்சவருக்கு `யக்ஞ வராகர்’ என்றே பெயர். எந்த ஹோமங்கள், எந்த யாகங்கள் செய்வதாக இருந்தாலும்கூட, அந்த யாகங்கள் நிறைவேறும்படியாகம் செய்பவரும் பகவான்தான். இதை உணர்ந்துதான் தசரதனிடம், ‘‘உன்னால் என்னுடைய வேள்வியைக் காக்க முடியாது. இதைக் காக்கக் கடமைப்பட்டவன், உன்னுடைய மகனாகிய, சாட்சாத் மகாவிஷ்ணுவின் அம்சமான ராமன்தான். அதனால், அவனை அனுப்பு’’ என்று சொல்கின்றார்.

‘‘மறைமுனிவன் வேள்வி காக்க நடந்து’’ என்ற வரியில் ‘‘நடந்து’’ என்கின்ற வார்த்தை முக்கியம். ராமாயணம் முழுக்க, பகவான் நடக்கிறான். விஸ்வாமித்திரரோடு வேள்வி காக்க நடக்க ஆரம்பித்தவன் தன்னுடைய திருவடி ஜோதிக்குச் செல்கின்ற வரை நடக்கின்றான். நடக்கின்றான்.

நடந்து கொண்டே இருக்கின்றான். ஆழ்வாரும் ‘நடந்த கால்கள் நொந்தவோ’’ என்று பாடுகிறார். நடப்பது என்பது, கால்கள் செய்யும் வேலை. ராமாயணம் என்பது திருவடியின் சிறப்பை சொல்லும் காப்பியம். ராமாயணம் என்பது சரணாகதி சாஸ்திரம். சரணாகதியை கையில் செய்ய முடியாது, திருவடியில்தான் செய்ய வேண்டும். அதனால், நடந்து என்கின்ற வார்த்தை மிகவும் முக்கியமாக, ஆழ்வார்கள் சொன்னார்கள், கம்பன் ராமனை நடத்தையில் நின்றுயர் நாயகன் என்று காட்டுகின்றார்.

`நடையின் நின்று உயர் நாயகன் தோற்றத்தின்
இடை நிகழ்ந்த இராமாவதாரப் பேர்த்
தொடை நிரம்பிய தோம் அறு மாக்கதை
சடையன் வெண்ணெய்நல்லூர்வயின் தந்ததே.’

ஒருமுறை தவத்திரு குன்றக்குடி அடிகளார், தன்னுடைய சீடர்களிடம் பேசிக்கொண்டிருக்கும் பொழுது, ஒரு கேள்வியைக் கேட்டாராம். ‘‘பசுமாடு, எருமை, ஆடுகள் போன்ற விலங்குகளை எல்லாம் கால்நடைகள் என்று சொல்லுகின்றோமே, காரணம் தெரியுமா?’’ உடனே சீடர்கள், ‘‘அவைகள் எல்லாம் நான்கு கால்களினால் நடந்து செல்கின்றன. கால்களால் நடந்து செல்வதால் அவைகள் கால்நடைகள்’’ அடிகளார் சிரித்துக் கொண்டே கேட்டாராம். ‘‘அப்புறம் மனிதன் மட்டும் என்ன தலையினாலா நடந்து செல்லுகின்றான்? அவனை ஏன் கால்நடை என்று சொல்வது கிடையாது?’’

இப்படிக் கேட்டவுடன், சீடர்கள் இதற்கு மேல் என்ன பதில் சொல்வது என்று தெரியாமல் அவரையே பார்த்துக் கொண்டிருக்க, அடிகளார் அற்புதமான ஒரு பதிலைச் சொன்னாராம். ‘‘எல்லோரும் கால்களில் நடப்பவர்கள்தான். ஆனால், மனிதன் கால்களால் மட்டும் நடக்கக் கூடாது. அவன் ஒழுக்கத்தினால் நடக்க வேண்டும். அதனால்தான் ஒழுக்கத்தை ‘‘நடத்தை’’ என்கின்ற சொல்லினாலே நாம் குறிப்பிடுகின்றோம். அவர் நடத்தை சரியில்லை என்று சொன்னால், ஒழுக்கம் சரியில்லை என்று பொருள்.

காரணம், ஒழுக்கம் உடையவருடைய நடையில் கம்பீரமும், நளினமும், வீரமும், தியாகம் முதலிய பண்புகளும் இருக்கும். அப்படி, ராமபிரான் ஒழுக்கத்தின் வழியிலே வாழ்ந்ததினாலே, கம்பன் ராமனை குறிப்பிடும்போது, “நடத்தையில் நின்று உயர் நாயகன்’’ என்று குறிப்பிடுகின்றார். ஆழ்வார்கள் ‘‘நடந்து’’ என்கிற பதத்தை அமைத்தார்கள். காரணம், ராமாயணம் என்பது சரணாகதி சாஸ்திரம். அபயப் பிரதான சாஸ்திரம். ராமபிரானின் கைகள் எல்லாம் மறக் கருணையை காட்டுகின்றன. ராமபிரானுடைய திருவடிகள் அறக்கருணையைக் காட்டுகின்றன.

விஸ்வாமித்திரரோடு நடந்து சென்றவன், தாடகையை வதம் செய்கின்றான். அந்த தாடகையோடு வந்து எதிர்த்தவர்களையும் வதம் செய்கின்றான். இங்கேயும் ஒரு அற்புதமான விஷயத்தைப் பார்க்கலாம். ஆழ்வார்கள், ‘‘வந்து எதிர்த்த தாடகை தன் உரத்தைக் கீறி’’ என்று தாடகை வதத்தைக் குறிப்பிடுகின்றார்கள். ராமன், விஸ்வாமித்திரர் வேள்வியை, வில்லும் கையுமாக நின்று காவல் காத்துக் கொண்டிருக்கின்றான். தாடகை எங்கே இருக்கிறாள் என்பது தெரியாது. அதை பற்றியும் அவன் கவலைப் படவில்லை. ஆனால், அவி சொரிந்து செய்யும் வேள்வியை, ரத்தத்தைச் சொரிந்து அழிப்பதற்காக வந்து எதிர்க்கிறாள் தாடகை.

வீட்டில் பூச்சி நெருப்பில் வந்து விழுவது போல அவள் தானே தன்னுடைய முடிவைத் தேடிக் கொள்கிறாள். விஸ்வாமித்திர மகாமுனிவரிடம், ‘‘ஒரு பெண்ணைக் கொல்வதா?’’ என்று ராமன் கேட்கின்ற பொழுது விஸ்வாமித்திரர் சொல்லுகின்றார்;

‘‘சமூகத்துக்குக் கேடு செய்கின்றவர்கள் பெண்ணாக இருந்தால் என்ன? ஆணாக இருந்தால் என்ன? அதிலே பேதாபேதங்கள் பார்க்க வேண்டிய அவசியம் கிடையாது. தீமைகளிலே பெண் செய்தால் ஒரு தீமை, ஆண் செய்தால் ஒரு தீமை என்றெல்லாம் கிடையாது. கத்தியால் எடுத்து வெட்டுகின்ற பொழுது பெண் வெட்டினாலும் கொலைதான். ஆண் வெட்டினாலும் கொலைதான். எனவே தீமையை எதிர்க்கும் போது இந்த பேதா பேதங்கள் பார்க்க வேண்டிய அவசியம் கிடையாது. அதனை களையத்தான் வேண்டும்’’ என்று சொல்ல, ராமன் பாணம் போடுகின்றான். தாடகை கீழே விழுகின்றாள்.

இந்த இடத்தில், ராம பாணத்தினால் தாடகை மாண்டு போனாள் என்று மட்டும் எழுதி முடித்திருக்கலாம். ஆனால், கம்பன் ஒரு அற்புதமான கருத்தை இந்த இடத்திலே சொல்லுகின்றார். ராமன் அம்பு மிக விரைவாகச் சென்று, தாடகையின் மார்பில் தைத்து, வெளியே வந்ததாம். இது எப்படி இருக்கிறது என்று சொன்னால், நல்லோர்கள் நல்ல வார்த்தையைச் சொல்லுகின்ற பொழுது, பயன்படுத்திக்கொள்ளத் தெரியாத புல்லர்கள், இந்த காதிலே வாங்கி அந்த காதிலே விட்டுவிடுவது போல, பாணம் இந்த பக்கமாக நுழைந்து அந்தப் பக்கமாக போய்விட்டதாம்.

`சொல் ஒக்கும் கடிய வேகச்
சுடு சரம். கரிய செம்மல்.
அல் ஒக்கும் நிறத்தினாள்மேல்
விடுதலும். வயிரக் குன்றக்
கல் ஒக்கும் நெஞ்சில் தங்காது.
அப்புறம் கழன்று. கல்லாப்
புல்லார்க்கு நல்லோர் சொன்ன
பொருள் என. போயிற்று அன்றே!’

நல்ல விஷயங்களை ஒரு காதிலே வாங்கி மறு காதிலே அனுப்பாமல், மனதிலே தேக்கிக்கொள்ள வேண்டும். இப்பொழுது, தாடகை வதம் முடிந்துவிட்டது. அதற்கு பிறகு மறுபடியும் நடக்கின்றான். அங்கே ஒரு கல்லின் மீது இவனுடைய கால் துகள் படுகிறது. கல் பெண்ணாகிறது. அந்தப் பெண்தான் அகலிகை.

தொகுப்பு: தேஜஸ்வி

You may also like

Leave a Comment

five − one =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2023 – Designed and Developed by Sortd.Mobi