புதுடெல்லி: அடுத்த ஆண்டு முதல் 10ம் வகுப்புக்கு ஒரே கல்வியாண்டில் 2 பொதுத் தேர்வுகள் நடத்த சிபிஎஸ்இ ஒப்புதல் வழங்கி உள்ளது. இதில் பிப்ரவரி மாதம் நடத்தப்படும் முதல் பொதுத் தேர்வை மாணவர்கள் கட்டாயம் எழுத வேண்டும். புதிய தேசிய கல்விக் கொள்கை பரிந்துரையின்படி, மாணவர்கள் தேர்வை பயமின்றி எதிர்கொள்ள, 10ம் வகுப்பு பொதுத் தேர்வை ஒரே கல்வியாண்டில் 2 முறை நடத்த சிபிஎஸ்இ கடந்த பிப்ரவரியில் வரைவு அறிக்கை வெளியிட்டது.
இது குறித்து பெற்றோர், மாணவர்களின் கருத்துக்கள் கேட்டறியப்பட்டன. இந்நிலையில், வரும் 2026ம் ஆண்டு முதல் 10ம் வகுப்புக்கு 2 முறை பொதுத் தேர்வு நடத்த சிபிஎஸ்இ தற்போது ஒப்புதல் வழங்கி உள்ளது. இது குறித்து சிபிஎஸ்இ தேர்வு கட்டுப்பாட்டாளர் சன்யம் பரத்வாஜ் நேற்று அளித்த பேட்டியில் கூறியதாவது: முதல் கட்டமாக பிப்ரவரி மாதமும், 2ம் கட்டமாக மே மாதத்திலும் பொதுத் தேர்வு நடத்தப்படும். இரண்டு கட்டங்களுக்கான தேர்வு முடிவுகள் முறையே ஏப்ரல் மற்றும் ஜூன் மாதங்களில் அறிவிக்கப்படும்.
முதல்கட்ட தேர்வை மாணவர்கள் கட்டாயம் எழுத வேண்டும். மாணவர்கள் தேர்வுகளை தீவிரமாக எடுத்துக் கொள்வதையும், பொதுத் தேர்வுகளின் முக்கியத்துவத்தை பேணுவதையும் உறுதி செய்வதற்காக இது கட்டாயமாக்கப்படுகிறது. 2ம் கட்ட தேர்வு அவர்களின் விருப்பத்தை பொறுத்தது. இந்த முறையில், தனித்தனியாக துணைத் தேர்வுகள் நடத்தப்படாது. தங்கள் மதிப்பெண்ணை மேம்படுத்த விரும்பும் மாணவர்கள் 2ம் கட்ட தேர்வை எழுதலாம்.
இதில் அதிக மதிப்பெண் பெறும் எந்த தேர்வின் மதிப்பெண்ணையும் மாணவர்கள் தக்க வைத்துக் கொள்ளலாம். ஒரு மாணவர் முதல் பொதுத் தேர்வில் 3 அல்லது அதற்கு மேற்பட்ட பாடங்களுக்கு தேர்வு எழுதவில்லை எனில், அவர் 2வது பொதுத் தேர்வு எழுத அனுமதிக்கப்பட மாட்டார்.
அத்தகைய மாணவர்கள் அதற்கடுத்த ஆண்டு பிப்ரவரியில் நடக்கும் பொதுத் தேர்வை எழுத வேண்டும். அறிவியல், கணிதம், சமூக அறிவியல் மற்றும் மொழிப்பாடங்கள் ஆகியவற்றில் ஏதேனும் 3 பாடங்களில் மாணவர்கள் தங்கள் செயல்திறனை மேம்படுத்திக் கொள்ள அனுமதிக்கப்படுவார்கள். குளிர் பிரதேசங்களில் உள்ள பள்ளி மாணவர்கள் இரண்டில் ஏதாவது ஒரு தேர்வை எழுதலாம். இவ்வாறு அவர் கூறி உள்ளார்.