Sunday, July 14, 2024
Home » சிறகை விரி, சிகரம் தொடு.

சிறகை விரி, சிகரம் தொடு.

by Porselvi
Published: Last Updated on

நம்பிக்கை என்பதை சுவாசக் காற்றாக கொண்டு முயற்சிச் சிறகுகளை முடிவில்லாமல் அசைத்துக்கொண்டே இருங்கள். ஒவ்வொரு விடியலும் நம்பிக்கையோடு தான் விடிகிறது. அந்த நம்பிக்கையை நாம் தான் உழைப்பாக மாற்றி உயர வேண்டும்.ஒரு மரக்கிளையில் பறவை ஒன்று அமர்ந்திருக்கின்றது.காற்று வேகமாக வீசத் தொடங்கியது, அந்த பறவை பதற்றம் இல்லாமல் இருந்தது.ஏனென்றால் அது மரக்கிளையை நம்பி அமரவில்லை, தன்னுடைய சிறகுகளை நம்பியே அமர்ந்திருந்தது.மரத்தின் கிளைகள் காற்றுக்கு ஒடிந்து விழுந்தாலும்,பறவை பயப்பட போவதில்லை, அது தனது சிறகுகளின் வலிமையை நம்பியே உயிர் வாழ்கிறது.உயரஉயர பறக்கிறது.அதுபோல நமது திறமையை, ஆற்றலை,பண்பு நலன்களை நம்பி தொடங்கும் எந்தச் செயலும் வெற்றியாக மலரும்.மற்றவர்களின் கரங்களை மட்டுமே முழுமையாக நம்பி விடக்கூடாது.அவர்களை துணையாக, தோழமையாகக் கொள்வதில் தவறில்லை, முழுமையாக நம்புவதுதான் தோல்வியின் தொடக்கமாக மாறுகிறது.

ஆகவே உங்களுடைய கனவுகளை நனவாக்கும் அற்புத சக்தி உங்களிடம் இருக்கிறது என்று நம்பத் தொடங்குங்கள். பின்னர் அவற்றை பயன்படுத்த முயற்சிகளை மேற்கொள்ளுங்கள். தோல்விகள் நேர்ந்தாலும் துவண்டு போகாமல் மீண்டும் தன்னம்பிக்கையோடு எழுந்து நில்லுங்கள்.இந்த உலகமே கைவிட்டாலும்… உங்களை நீங்கள் கைவிட்டு விடாதீர்கள். ஏனெனில் அப்போதுதான் முயற்சிகளில் உயிரோட்டம் இருக்கும். இதற்கு உதாரணமாய் இந்த சாதனைப் பெண்மணியை சொல்லலாம்.எவரெஸ்ட் சிகரத்தின் முன் 21,500 அடி உயரத்தில் இருந்து ஸ்கைடைவ் செய்த ‘முதல் பெண்மணி’என்ற பெருமையை பெற்றார்வர் தான் ஷீத்தல் மகாஜன்.அதன்மூலம் வட, தென் துருவங்கள் மற்றும் எவரெஸ்ட் சிகரத்தின் மீது ஸ்கை டைவ் செய்த ‘உலகின் முதல் பெண்’ என்ற உலக சாதனையை படைத்து உள்ளார் ஷீத்தல் மகாஜன்.

ஷீத்தலுக்கும் சாகசங்களுக்கும் பிரிக்கமுடியாத பந்தமுள்ளது.சேலை அணிந்து ஸ்கை டைவிங்,பிரதமருக்கு பிறந்தநாள் வாழ்த்து பதாகை ஏந்திய ஸ்கை டைவிங் என ஸ்கை டைவிங்கில் சில வித்தியாசமான முயற்சிகளை மேற்கொண்டுள்ளார்.அது மட்டுமல்ல,அண்டார்டிகாவின் நார்த் போலில், மைனஸ் 37 டிகிரி செல்சியஸில் எந்தவிதமான பயிற்சியும் இல்லாமல், ‘பாரா ஜம்ப்’ செய்தார். இதுபோன்று ஷித்தல் நிகழ்த்தியுள்ள சாகச ஸ்கை டைவிங் பட்டியல் சற்றே நீண்டது. இதுவரை 25 தேசிய சாதனைகள்,இரண்டு ஆசிய சாதனைகள், மற்றும் எட்டு உலக சாதனைகளை படைத்து பிரம்மிக்க செய்துள்ளார்.அவரைப் பாராட்டி 2014ம் ஆண்டு பத்ம விருதும் வழங்கப்பட்டுள்ளது. சமீபத்தில் இந்த பட்டியலில்,இன்னும் சில சாதனைகளை இணைத்துள்ளார்.

எவரெஸ்ட் சிகரத்தின் முன் 21,500 அடி உயரத்தில் ஹெலிகாப்டரில் இருந்து குதித்த ‘உலகின் முதல் பெண்மணி’ என்ற பெருமையைப் பெற்று அனைவருக்கும் வியப்பை ஏற்படுத்தி உள்ளார்.மகாராஷ்டிரா மாநிலத்தின் புனே நகரைச் சேர்ந்த ஷீத்தல், அவரது தோழியின் சகோதரரான கமல்சிங் ஓபரை ஒருமுறை சந்தித்தார்.இந்திய விமானப்படை அதிகாரியான அவர், ஸ்கை டைவிங் செய்யப் போவதாக ஷீத்தலிடம் தெரிவித்தார்.அதுநாள் வரை ஸ்கை டைவிங் என்றால் என்ன என்பதே அவருக்கு தெரியாது. கமல் சிங்கின் சாகசத்தை நேரில் கண்ட நாளிலிருந்து, ஸ்கை டைவிங் மீது ஆர்வமும், ஈர்ப்பும் கொண்டார்.ஆனால் அதனை குடும்பத்தினரிடம் தெரிவித்து அதற்கான சம்மதம் பெறுவது பெரும் சிரமமாக இருந்துள்ளது. இதற்கிடையே, கமல்சிங் வட மற்றும் தென் துருவங்கள் மீது ஸ்கை டைவ் செய்த ‘முதல் இந்தியர்’ ஆனபோது அவரின் புகைப்படம் செய்திதாளின் முதல் பக்கத்தில் இடம்பெற்றிருந்தது. அதனை பார்த்த பிறகு ஷீத்தல், ஸ்கை டைவிங் மேற்கொள்வதில் தீவிரமாக இறங்கினார்.அவரது ஆர்வத்தை கமல்சிங் புரிந்து கொள்ளும் வரை அவரை விடாது துரத்தினார் ஷீத்தல்.

தொடர்முயற்சியின் பலனாய் கமல்சிங், ஸ்கை டைவிங் நிகழ்ச்சிகள் சிலவற்றிற்கு ஷீத்தலை அழைத்து சென்றுள்ளார். இறுதியாய், 2004ம் ஆண்டில் வட துருவத்தில் முதன் முதலில் ஸ்கை டைவிங் செய்தார். அதுவும் எவ்வித பயிற்சியும் இல்லாமல் பறந்துள்ளார்.இதற்கான நிதியினை டாடா மோட்டார்ஸில் பணிபுரியும் அவரது தந்தை,நிறுவனத்தில் ஒரு பாதி பெற்றார்.மீதி தொகையை கடனாக பெற்று தனது மகளின் இலக்கை நிறைவேற்ற உறுதுணையாக இருந்தார்.ஒரு பெண், நீ ஏன் இதைச் செய்ய விரும்புகிறாய், ‘உன்னால் இதைச் செய்ய முடியாது’வீண் முயற்சி போன்ற ஏளனங்கள்,அவமானங்கள் தொடர்ந்து அனைத்து பக்கங்களிலிருந்தும் எழுந்தது. ‘என்னால் இதைச் செய்ய முடியும்’ என்பதை உலகுக்கு நிரூபிக்க விரும்பினார் ஷீத்தல் மகாஜன்.அதன் பின் அவர் நிகழ்த்தியவையெல்லாம் வரலாறாக மாறியது.அவரை வீண் முயற்சி என்று சொன்னவர்கள் எல்லாம் இப்போது விடா முயற்சி என்று புகழ்ந்து பேசுகிறார்கள்.எவரெஸ்ட் சிகரத்தின் முன் ஸ்கை டைவிங் செய்வதற்கு 65 லட்சத்துக்கும் மேலாக செலவாகும் என்பது பெரும் தடையாக ஷீத்தல் மகாஜனுக்கு மாறியது.

அதற்காக, அவர் 200க்கும் மேற்பட்ட நிறுவனங்களை அணுகி,சில ஸ்பான்சர்ஷிப்களைப் பெற்றார்.2025ம் ஆண்டு சாம்பியன்ஷிப் போட்டிக்கான இந்திய அணியை வழிநடத்த வேண்டும் என்பதே எனது கனவு.விண்வெளியில் ஸ்கை டைவ் செய்த முதல் பெண்மணியாக இருக்க விரும்புகிறேன்.அடுத்த இரண்டு ஆண்டுகளில் இதை அடைவேன் என்கிறார் நம்பிக்கையுடன் ஷீத்தல்.ஸ்கைடிவிங்கை விளையாட்டாகவோ அல்லது சாகசமாகவோ மேற்கொள்ள விரும்புபவர்கள் நீங்கள் என்றால், முதலில் நீங்கள் உங்கள் பயத்தை துரத்தி,துணிச்சலை மனதில் இடம்பெறச் செய்ய வேண்டும். அதுதான் உங்களை சாதனையாளராக உருவாக்கும் என்கிறார் மகாஜன்.ஷீத்தலின் வாழ்க்கை நமக்கு உணர்த்துவது என்னவென்றால், நீங்கள் உங்கள் இலக்கை அடைய வேண்டுமென்றால்,முதலில் அதை முடியும் என்று நம்புங்கள்.முடியும் என்று நம்பி முயற்சிச் சிறகுகளை விரித்து அசைத்துக் கொண்டே இருங்கள்.நிச்சயம் நீங்களும் சிகரத்தைத் தொடுவீர்கள்.

 

You may also like

Leave a Comment

13 − seven =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi