சென்னை: முற்போக்கு சிந்தனையாளர் பேரவையின் நிறுவனத் தலைவர் தாம்பரம் நாராயணன் தலைமையில் வழக்கறிஞர் ஜெயமுருகன் உள்ளிட்ட 100க்கும் மேற்பட்டவர்கள் காங்கிரசில் இணையும் நிகழ்ச்சி சென்னை சத்தியமூர்த்தி பவனில் நேற்று நடந்தது. பின்னர் தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை அளித்த பேட்டி: தோல்வியடைய போகிறோம் என்று உணர்ந்து கொண்டு வெறுப்பு,கலவர அரசியலில் மோடியும், பாஜவினரும் ஈடுபட்டு வருகின்றனர்.
இதனை தேர்தல் ஆணையம் வேடிக்கைப் பார்க்கிறது. ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி பிரசாரத்திற்கு செல்லுமிடமெல்லாம் பெரும் கூட்டம் கூடுகிறது. இதைப் பார்த்து அச்சம் கொள்ளும் மோடி, மலிவான அரசியலில் ஈடுபட்டு வருகிறார். காமராஜர் பள்ளிக் கல்வியைக் கொண்டு வந்தார். கலைஞர் உயர்கல்வியை வலிமைப்படுத்தினார். பாஜவினருக்கு கல்வியைப் பற்றி பேச எந்த தகுதியும் கிடையாது.
காங்கிரஸ் மாவட்ட தலைவர் ஜெயக்குமார் மரணம் தொடர்பாக காவல்துறை பல குழுக்களை அமைத்து விசாரணை மேற்கொண்டு வருகிறது. மகளிர் இலவச பேருந்து திட்டம் ஒரு முற்போக்கு திட்டம். இதையும் பிரதமர் மோடி குறை சொல்கிறார். மு.க.ஸ்டாலின் ஆட்சிதான், காமராஜரின் ஆட்சி. எங்கெல்லாம் நல்லாட்சி நடக்கிறதோ, அதெல்லாம் காமராஜர் ஆட்சிதான். இவ்வாறு அவர் கூறினார்.