Sunday, July 13, 2025
Home ஆன்மிகம் துன்பமில்லா இடமும் உண்டோ?

துன்பமில்லா இடமும் உண்டோ?

by Porselvi

ஏழை பணக்காரன் என்று வித்தியாசம் இல்லாமல் அனைவருக்கும் துன்பமானது வந்தே தீரும். இந்த துன்பத்தில் இருந்து யாரும் தப்பிக்க முடியாது. துன்பம் இல்லாதவர்கள் இந்த உலகத்தில் உண்டோ? ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமான துக்கங்கள். மனிதனின், ஜீவாத்மாவின் மிக பெரிய குறி – நோக்கம் (aim) இந்த துன்பத்தில் இருந்து விடுபடுவது எப்படி? என்பதே…சுகத்திற்குள்ளும் துக்கமே மனிதன் நினைக்கிறான், நான் எப்போதும் சுகமாக இருக்க வேண்டும்.

யாராவது நான் சுகமில்லாது துக்கமாக இருக்க வேண்டும் என்று நினைக்கிறார்களா? தூங்கும் போது, இரவில் தலைவலிக்கிறது என்று வைத்துக்கொள்வோம். நாம் என்ன நினைப்போம். காலையில் எழுந்தவுடன் மருத்துவரை சந்திக்க வேண்டும். இவ்வளவுதானே நினைப்போம். மாறாக, எனக்கு தலைவலிக்கிறது. அது பிரைன் எமேரேஜாக (Brain Hemorrhage) இருக்கும். இப்படி பெரிய துன்பமாக வரவேண்டும். சிறியசிறிய துன்பங்கள் வரக் கூடாது. என்று யவராது நினைப்பதுண்டோ? இப்படி நினைக்க யாருக்காவது ஆசை வருமோ? இல்லையே…

அனைத்து ஜீவ ராசிகளுக்கும் துன்பம் என்பது பொதுவானது. துக்கத்தில் இருக்கும் அனைத்து ஜீவராசிகளின் பிரயத்தனம் (முயற்சி) துன்பமே இல்லாது எப்படி சுகத்தோடு வாழ்வது என்பதுதான். ஆச்சரியமான விஷயம் என்ன தெரியுமா..! துக்கமில்லாத சுகம், இந்த உலகத்துலேயே கிடையாது. இன்னும் விளக்கமாக சொல்லவேண்டும் என்று சொன்னால், நீங்கள் சுகம் என்று நினைத்து (அது எந்த ஒரு சுகமாகவும் இருக்கலாம்) அதை எடுத்துக் கொண்டு வந்தால், அதினுள் ஒரு துக்கம் (துன்பம்) இருந்தே இருக்கும்.

சுகத்தை பிந்தொடரும் துன்பம்

இப்போ கடைகளில் Buy One Get One என்று உள்ளதே அதுபோல், ஒன்றுக்கு ஒன்று இலவசம். எது எடுத்தாலும் அதற்கு ஒன்று இலவசம். சுகம் என்று ஒரு ஐட்டத்தை வீட்டிற்கு எடுத்துக் கொண்டு வந்தால், நமக்கே தெரியாது துக்கமானது, அந்த சுகத்தை Follow செய்து கொண்டு வந்துவிடுகிறது. இதற்கு எதுவேண்டுமானாலும் உதாரணமாக சொல்லலாம்.வீடுகட்டி அதில் சந்தோஷமாக இருக்கலாம் என்ற எண்ணத்தில் வீடுகட்டி குடியேறுகிறோம். ஆனால், அதன் பிறகுதான் கதவுகள் சரியில்லை, மின் சப்லே சரியில்லை, தண்ணீர் வசதி குறைபாடு, வீட்டை சுற்றி மழைநீர் இப்படி சொல்லிக் கொண்டே போகலாம். கல்யாணம்கூட அப்படிதான். திருமணம் நடந்தால் நல்லபடியாக வாழ்வு அமையும் என்று நினைத்துக் கொள்கிறோம். ஆனால், அதன் பிறகே பிரச்னைகள் ஒவ்வொன்றாக முளைக்கும்.

திருமணம் நடைபெறவில்லை என்றால் ஒரே பிரச்னைதான் இருக்கும். அதுயென்ன தெரியுமா? “கல்யாணம் நடக்கவில்லை.. கல்யாணம் ஆகவில்லை’’ என்ற ஒரே ஒரு பிரச்னை. ஆனால், கல்யாணம் நடந்த பிறகு பிரச்னை ஆரம்பமாகும். ஒரு பிரச்னைக்கு நூறு பிரச்னை. நூறு பிரச்னையை சமாளிக்க ஐநூறு பிரச்னை. அந்த ஐநூறு பிரச்னைகளை சமாளிக்க ஆயிரம் பிரச்னை என்று பிரச்னை வளர்ந்துக் கொண்டே போகும்.

வண்டி வாங்கினாலும் பிரச்னை, வாங்காமல் இருந்தாலும் பிரச்னை. கார் வாங்கினாலும் பிரச்னை, வாங்காமல் இருந்தாலும் பிரச்னை. ஆக, வாழ்வில் துன்பமே இருக்கக் கூடாது. இது சாத்தியமா?மூன்று லோகங்களில் துக்கம் இல்லைதுக்கமே இல்லாத சுகம் மட்டுமே இருக்கும், மூன்றே மூன்று லோகங்கள் உள்ளன.

1) அனந்தாசனம்,
2) ஸ்வேத தீபம்,
3) வைகுண்டம்.
இதற்கு அதிகாரம் படைத்தவர், ஜனார்த்தனன் (பகவான்). இந்த துக்கமில்லா சுகம் மட்டுமே இருக்கும் லோகங்களை மனிதனுக்கு இறைவன் கொடுத்தால் உண்டு, இல்லையென்றால் இல்லை. இந்த லோகங்களுக்கு மனிதன் செல்ல, பகவானை நித்யம் பூஜை, ஆராதனைகளை செய்யவேண்டும். பகவானை தெரிந்துகொள்ள வேண்டும். பகவானை உபாசனை செய்ய வேண்டும்.
1) ஸ்ரவணம்,
2) கீர்த்தனம்,
3) ஸ்மரணம்,
4) பாத சேவனம்,
5) அர்ச்சனம்,
6) வந்தனம்,
7) தாஸ்யம்,
8) ஸக்யம்,
9) ஆத்ம நிவேதனம்.

என்று சொல்லி, “என்னால் (மனிதன்) எதுவும் இல்லை ஸ்வாமி… உன்னால்தான் அனைத்தும். இந்த உலகத்தில் இருக்கும் அனைத்து ஜீவன்களும் உன்னுடையது’’ என்று சொல்லி, இறைவனிடத்தில் சரணாகதி ஆகவேண்டும். இறைவனிடத்தில் பக்தி வேண்டும். அதற்கு ஒன்பது படிகளை கடந்து செல்ல வேண்டும். அந்த ஒன்பது படிகள்தான், மேலே கூறியவை
(ஸ்ரவனா…கீர்த்தனா…ஸ்மரனா..) ஆகும்.

(மீதம் அடுத்த இதழில்…)

ஜி.ராகவேந்திரன்

 

You may also like

Leave a Comment

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi