உலகப் பந்தை உருளவிட்ட உன்னத மனிதர்கள் யாவருமே பயமற்றவர்கள். புத்தர் அங்குல்மால் என்கிற கொலைகாரனை நோக்கி அலட்சியமாக நடந்தார், எதற்கும் அஞ்சவில்லை.நேதாஜி சுபாஷ் சந்திர போஸின் துணிவு பற்றிய செய்தி ஒன்று படித்து அசந்து போனேன், உலகையே ஆட்டிப்படைத்த முரட்டு ஹிட்லர் முன்பு உட்காரவே பலரும் பயப்படுவார்கள். காரணம் அவர் வீரன் என்பதால் அல்ல, எதற்கும் அஞ்சாதவர் என்பதால். அவர் முன்பு கம்பீரமாக கைகுலுக்கிவிட்டு அமர்ந்தார் நேதாஜி, சிறிதும் தயக்கம் இன்றி நீங்கள் எழுதியிருக்கிற ‘மெயின் கேம்ப்’ என்ற புத்தகத்தில் இந்தியாவை பற்றி தவறாக புரிந்து கொண்டு எழுதி உள்ளீர்கள். அது தவறானது,ஆதாரம் இன்றி எழுதி இருக்கிறீர்கள் முதலில் அவற்றை நீக்கி விடுங்கள் என்று உறுதிப்படச் சொன்னார். இதுதான் அஞ்சாமையின் அடையாளம், நெஞ்சுறுதி.
சுவாமி விவேகானந்தர் அமெரிக்காவில் இருந்தபோது அதன் செல்வச் செழிப்பையும், சுகபோகங்களையும் கண்டு மலைக்கவும் இல்லை, களிக்கவும் இல்லை, இந்தச் செழிப்பு இந்தியருக்கில்லையே, இந்தியா வளம் பெறுதல் என்று? என்றே வருந்தினார். கட்டிலில் உறங்க மறுத்து தரையில் படுத்துக் கொண்டார். அவர் தத்துவ உரைகளைக் கேட்டு பல்கலைக்கழகங்கள் தத்துவத்துறை பேராசிரியராக அவரை பணியமர்த்த அழைத்த போது ஈர்க்கப்படாமல், இந்தியா திரும்புவதிலேயே குறியாக இருந்தார்.இன்றைக்கு தமிழ்நாட்டில் செய்ய முடியாத செயல் செய்தவரை,’அவன் பெரிய எம்டன்’ என்பார்கள். அந்த எம்டன் கப்பலைக் கொண்டு இந்தியாவில் பிரிட்டிஷ்காரர்களை கலங்கச் செய்து மீண்டும் ஜெர்மனி திரும்பிய மாவீரர்.ஜெர்மனியில் ராணுவ மரியாதையுடன் வரவேற்கப்பட்ட இந்திய தமிழர். சுதந்திரக் கொடி பறக்கும் கப்பலில் தான் இந்தியா திரும்ப வேண்டும் என்ற அவர் கனவு அந்த காலத்தில் நனவாகவில்லை. ஆனால் அவரது அஸ்தி இந்தியக் கொடி பறந்த கப்பலில் இந்தியா வந்தது.’இறந்துவிட்டால் என்னை ஜெர்மனியில் புதைக்க வேண்டாம். எரித்து என் சாம்பலை இந்தியாவில் கரையுங்கள் என்று அவர் மனைவியிடம் தெரிவித்த விருப்பத்தின்படி தாய் மண்ணில் கர்மனை ஆற்றிலும், குமரிக்கடலிலும் அவரது அஸ்தி கரைக்கப்பட்டது.
வடக்கே பகத்சிங் பிறந்த ஊரில் உள்ள மண்ணை கர்ப்பிணிப் பெண்கள் வயிற்றில் பூசிக்கொள்ளும் வழக்கம் இருக்கிறது.இப்போதுதான் பிறக்கக்கூடிய குழந்தை வீரனாக பிறக்கும் என்ற நம்பிக்கை. பகத்சிங் என்பதன் பொருள் அதிர்ஷ்டக்காரர் என்று சொல்கிறார்கள். 24 வயதில் தூக்குக் கயிற்றை மகிழ்ச்சியாக மாலை போல் சூடிக்கொண்ட துணிவுடைய அவன் பிறந்த மண்ணில் பிறந்த நாம் யாவரும் அதிர்ஷ்டக்காரர்கள் தான், இவர்கள் எல்லோருமே அச்சம் விட்டவர்கள், உச்சம் தொட்டவர்கள் இதற்கு உதாரணமாய் இந்த சாதனை பெண்மணியையும் சொல்லலாம்.முதலில் இந்தியாவின் எல்லை காவல் படை என்றால் என்னவென்று சுருக்கமாக பார்த்துவிடலாம். இது பாகிஸ்தான் மற்றும் பங்களாதேஷ் எல்லைகளில் செயல்படும் இந்தியாவின் எல்லை பாதுகாப்பு அமைப்பாகும். இந்தியாவின் எல்லைகளின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காகவும், அது தொடர்பான செயல்பாடுகளுக்காகவும் உருவாக்கப்பட்டிருக்கிறது.இதில் ஸ்னைப்பர் என்பவர் அடிப்படையில் துப்பாக்கி பயன்படுத்தும் இராணுவ,பாரா மிலிட்டரி, காவல்துறை வீரர் ஆவார். மறைந்திருந்து துல்லியமாக இலக்குகளைத் தாக்கும் துப்பாக்கிச் சூட்டில் பயிற்சி பெற்றவர் இவர். ஸ்னைப்பிங் துப்பாக்கிகளில் டெலஸ்கோப்பும் இணைக்கப்பட்டிருப்பதால் அவை தொலைதூரத்தில் இருந்து துல்லியமாக இலக்குகளை குறிப்பிட்ட புள்ளியில் தாக்கும் ஆற்றல் உடையன.இந்திய எல்லைப் பாதுகாப்புப் படையில் சப் இன்ஸ்பெக்டராகப் பணியாற்றி வருபவர் சுமன் குமாரி. இந்த அமைப்பின் முதல் பெண் ஸ்னைப்பர் என்ற பெருமையை இவர் பெற்றிருக்கின்றார். சமீபத்தில் இந்தூரில் இருக்கும் CSWT என்ற மத்திய பயிற்சி நிறுவனத்தில் மிகக் கடுமையான எட்டு வார ஸ்னைப்பர் பயிற்சி முடித்திருக்கின்றார். இன்ஸ்பெக்டர் கிரேட் என்ற தகுதியை இதன் மூலம் சுமன் அடைந்திருக்கிறார். பயிற்சி பெற்ற அனைவருக்கும் இந்த தகுதி கிடைத்துவிடாது, பயிற்சிக் காலத்தில் பல நிலைகளிலும் முன்னிலை வகித்ததற்காக சுமனுக்கு கிடைத்த பரிசு இது.திறமை மற்றும் நிபுணத்துவத்துக்கு இது ஒரு சான்றாகும்.
கமாண்டோ பயிற்சிக்கு அடுத்தபடியாக மிகவும் கடுமையானது இந்த ஸ்னைப்பர் பயிற்சி. மிக அதிக அளவில் மனம் மற்றும் உடல் வலிமை தேவைப்படும் பயிற்சி இது. சூழ்நிலைக்கு தக்கவாறு தம்மை மறைத்துக் கொண்டு எதிரிக்கு மிக அருகில் நெருங்கி, எதிரி அறியாமல் தாக்குதல் நடத்தவும் நேரிடும். பல ஆண் வீரர்களும் இந்த பயிற்சியின் கடினத்தன்மையை உணர்ந்து அதில் சேர்வதை தவிர்ப்பார்கள். ஆனால் பயிற்சியின் பல நிலைகளிலும் சுமன் முதலாவதாக இருந்தார்.அவரது கடின உழைப்பு மன உறுதி மற்றும் கற்றுக் கொள்ளும் ஆர்வம் ஆகியன அவர் முன்னணியில் இருந்ததற்கு உதவின.பெண்கள் அனைத்துப் பிரிவுகளிலும் பங்கேற்கும் படையாக எல்லைக் காவல் படை உருவாகி வருகிறது. இதன் ஒரு அங்கமாக கடுமையான பயிற்சிக்கு பிறகு எல்லை காவல் படையின் முதல் பெண் ஸ்னைப்பர் தோன்றுகிறார் என்ற செய்தி குறிப்பை எல்லை காவல் படை வெளியிட்டு இருக்கிறது. ஆயுதங்கள் ஏந்திய போரிலும் சுமன் குமாரி தனது திறமைகளை வெளிப்படுத்தி இருக்கிறார்.
ஹிமாச்சல் பிரதேசத்தின் மாண்டி மாவட்டத்தைச் சேர்ந்த எளிமையான குடும்பத்தில் இருந்து வந்தவர் சுமன். நாட்டுக்கு உழைக்க வேண்டும் என்ற எண்ணத்தில் 2021 ஆம் ஆண்டு எல்லை பாதுகாப்புப் படையில் சேர்ந்திருக்கிறார் சுமன். இவரது தந்தை எலக்ட்ரீஷியனாகப் பணிபுரிகிறார், தாயார் இல்லத்தரசி, சுமனின் ஆர்வத்திற்கு பக்கபலமாக இருவரும் விளங்குகிறார்கள். சுமன் குமாரியின் துணிச்சல் மிக்க இந்த முடிவு.இதர பெண் வீரர்களுக்கு இந்தப் பயிற்சியை மேற்கொள்ள உத்வேகம் அளித்திருக்கிறது. சுமன் குமாரியின் சாதனை பல பெண்களுக்கும் தன்னம்பிக்கையும், தங்களால் சாதிக்க முடியும் என்ற மன உறுதியும் அளித்திருக்கிறது. எனவே வாழ்க்கையில் வெற்றி பெற அச்சமின்மை அவசிய குணம், இவரைப் போலவே அச்சம் விட்டு உச்சம் தொடு.