Thursday, July 18, 2024
Home » களறிக்கறி இல்லாமல் கல்யாணமே நடைபெறாது – காயல் சமையல் குறித்து ஃபாயிஷா காதர்!!!

களறிக்கறி இல்லாமல் கல்யாணமே நடைபெறாது – காயல் சமையல் குறித்து ஃபாயிஷா காதர்!!!

by Porselvi

பாய் வீடு என்றாலே பிரியாணிதான் பேமஸ். ஆனா காயல்பட்டினத்தினை பொறுத்தவரை களறிக்கறி தான் ஃபேமஸ் என்கிறார் காயல் சமையலில் பட்டையை கிளப்பி வரும் ஃபாயிஷா காதர். கடற்கரை நகரமான காயல்பட்டினம் பகுதியில் இவரது மசாலாக்கள் ரொம்பவுமே பிரபலம். தற்போது இவர் திருப்பூரில் வசித்து வந்தாலும் இவரது மசாலாக்கள் உலகம் முழுவதும் பயணிக்கிறது என்கிறார் ஃபாயிஷா காதர். காயல்பட்டினம் களறிக்கறி மற்றும் களறி மசாலா குறித்தும் தமது சிறு தொழில் அனுபவங்கள் குறித்தும் நம்மிடையே பகிர்ந்ததிலிருந்து..

களறிக் கறி மற்றும் களறி மசாலா குறித்து சொல்லுங்களேன்?

களறிக் கறி என்பது எங்களது காயல்பட்டினம் பகுதியின் பிரதானமான மற்றும் ஃபேமஸான ஒரு உணவு. எங்கள் பகுதியில் நடக்கும் எந்த விசேஷங்களும் களறிகறி இல்லாமல் முடிவுறாது. கறியில் வாழைக்காய் போட்டு செய்வதை தான் களறிக்கறி என்பார்கள். கறியில் வாழைக்காயா? என ஆச்சர்யமாக கேட்பவர்களுக்கு எங்களது களறி மசாலாவை சேர்த்து கறி மற்றும் வாழைக்காயுடன் களறி மசாலாவை தயாரித்து ஒரு முறை சுவைத்து பாருங்கள், பிரியாணியைக்கூட விட்டுவிடுவீர்கள் . இதற்கு சீரகம் சோம்பு போன்ற சரிவிகித அளவுடன் செய்தால் தான் சுவை கூடுதலாக இருக்கும். களறி மசாலாவை மட்டன் சிக்கன் சேர்த்து செய்தால் மிகுந்த சுவையுடன் இருக்கும். இதற்கு தேங்காய் எண்ணெய் அல்லது நெய் பயன்படுத்தி தயாரிப்பதே இதன் தனிச்சிறப்பு. இதனை வெளியில் வாங்குவதை விட நாமே சரிவிகித அளவுடன் தயாரித்தால் என்ன என்கிற சிந்தனையில் உதித்தது தான் இந்த மசாலா தயாரிக்கும் எண்ணம். அதன் பிறகு நானே அதனை தயாரித்து பயன்படுத்தியதோடு கேட்பவர்களுக்கும் தயாரித்து விற்பனை செய்ய ஆரம்பித்தேன்.

அதற்கான வரவேற்பு எப்படி இருந்தது?

முதலில் நான்கு பொருட்களோடு தான் எனது மசாலா தொழிலை ஆரம்பித்தேன். தற்போது இருபத்தியைந்திற்கும் மேற்பட்ட பொருட்களை தயாரித்துவிற்பனை செய்கிறேன். உணவுத்தொழிலை பொறுத்தமட்டில் எங்கெல்லாம் சுவையான பொருட்கள் கிடைக்கிறதோ அதற்கெல்லாம் நல்ல வரவேற்பு கிடைக்கிறது என்பதுதான் உண்மை. பேச்லர்ஸ் பலர் எங்களது மசாலாக்கள் மூலம் நல்ல உணவினை தயாரித்து உண்பதாக சொல்வது மகிழ்ச்சியாக இருக்கிறது. தற்போது பேஸ்புக் , இன்ஸ்டாகிராம், யூட்யூப் போன்ற சமூக வலைத்தளங்களின் மூலமே அதிக ஆதரவு கிடைத்து வருகிறது. வாட்சாப் குழுக்கள் மூலமும் விற்பனை நடைபெறுகிறது. வெளிநாடுகளுக்கு செல்லும் உறவினர்கள் கணிசமான அளவு மசாலா பொருட்களை இங்கிருந்து வாங்கி எடுத்துச் செல்கிறார்கள். தற்போது எங்களது மசாலாக்கள் பல நாடுகளிலும் மணம் வீசி வருகிறது. எங்களின் பொருட்களின் தரமே அதற்கான விற்பனை வாய்ப்பினை பெருமளவு ஏற்படுத்தி தருகிறது.

உங்கள் பொருட்களின் தனிச்சிறப்பு என்ன?

எங்கள் தயாரிப்புகள் நெய் மற்றும் தேங்காய் எண்ணெய் மூலமே தயாரிப்போம். ஒவ்வொரு பொருட்களையும் பார்த்து பார்த்து தான் செய்கிறோம்.எங்களது மூலப் பொருட்களில் அனைத்தையுமே முதல்தர பொருள் மூலம் மட்டுமே பயன்படுத்தி தயாரித்து வருகிறோம். எந்த விதமான கலர்களையோ பிரிசர்வேட்டிவ்களையோ பயன்படுத்துவதில்லை. மிளகாய் வத்தல் என்று எடுத்து கொண்டாலே அதில் பல வகைகள் உண்டு. கறி மசாலா, சாம்பார் பொடி, களறி மசாலா, மீன் குழம்புக்கென வேறுவேறு வகையான மிளகாய் களை பயன்படுத்தி தயாரிக்கிறோம். கூடுமானவரை ஆர்கானிக் பொருட்களை வாங்கி நன்றாகச்சுத்தம் செய்து வெயிலில் உலர்த்தி பதமாக தயாரித்து நாங்களே பாக்கெட் செய்து விற்பனை செய்கிறோம். மற்றொரு எங்கள் மசாலாப் பொடியின் பாக்கெட்டில் இருக்கும் கோட்டினை ஸ்கேன் செய்தாலே அதற்கான சமையல் செய்முறைகளையும் காணலாம். அதே போன்று எங்கள் பேக்கிங் கூட எக்கோ ப்ரண்ட்லிதான். பேப்பர் கவர்களில் ஜிப்லாக் வைத்திருப்பதால் அதன் அரோமா அப்படியே ப்ரெஷ்ஷாக இருக்கும்.

என்னென்ன பொருட்களை தயாரிக்கிறீர்கள்?

எங்களில் ஒரு வயது குழந்தைக்கான சத்து மாவு முதல் தொண்ணூறு வயதான பாட்டி சாப்பிடக்கூடிய மசாலாக்கள் வரை விற்பனை செய்கிறார். எங்களின் மசாலாக்கள் அனைத்துமே தரநிர்ணய சான்றிதழ்கள் பெற்றது. அதனால் இதை தைரியமாக சாப்பிடலாம் மற்றவர்களுக்கும் பரிந்துரை செய்யலாம். களறி மசாலா (மட்டன்/சிக்கன்) தவிர கறி மசாலா , காயல் பெப்பர் மசாலா, புளியாணம் பொடி( ரசம் பொடி), மருந்து சோறு பொடி, மீன் குழம்புப்பொடி, அரபியன் பிரியாணி மசாலா, சாம்பார் குழம்புப் பொடி, நன்னாரி சுக்கு பொடி, கவா பொடி, ஹெல்ட் மிக்ஸ், ஏபிசி மால்ட், பீட்ரூட் மால்ட், கருப்பு உளுந்து களி மிக்ஸ், மாப்பிள்ளை சம்பா களி மிக்ஸ், காயல் கீரைப்பொடி, மசாலா மாசி, காயல் மஞ்சள் வாடா பரு மாவு, பேய் எள்ளு,முடவாட்டுக்கால் கிழங்கு, சிக்கன் 65 மசாலா , தந்தூரி மசாலா ,சாட் மசாலா, தனி மிளகாய்த்தூள் என பல்வேறு பொருட்களை தயாரித்து விற்பனை செய்கிறேன். இந்த தயாரிப்புகள் எங்களுக்கு பல கஸ்டமர்களை உருவாக்கித் தந்தது என்பது பெருமிதமாக உள்ளது.

பேய் எள்ளு என்பது என்ன? அது எங்கு கிடைக்கும்?

அழிவின் விளிம்பில் உள்ள ஒரு எள் தான் இந்த பேய் எள்ளு. இரும்பு்ச்சத்து அதிகம் கொண்டது. நமது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க கூடியது. பேய் எள்ளு மலை வாழ் மக்களிடம் மட்டுமே கிடைக்கக்கூடியது. நான் திருப்பத்தூர் அருகிலுள்ள ஏலகிரி மலைப்பகுதியில் வசிக்கும் மலைவாழ் மக்களிடம் வாங்கி வருகிறேன். மலைவாழ் மக்கள் இதனை சட்னி அரைத்து உண்பார்கள். நான் இதனை பொடியாக தயாரித்து ஒரு சிட்டிகை குழம்பில் சேர்த்து பயன்படுத்தி வருகிறேன். உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தக் கூடிய பலவகையான சத்துக்கள் நிறைந்தது. அதேபோன்று அப்பகுதி மலைவாழ் மக்களிடம் முடவாட்டுக்கால் கிழங்கும் வாங்கி விற்பனை செய்கிறேன். இதுவும் பல்வேறு விதமான நோய்களை குணப்படுத்தும் ஆற்றல் கொண்டது.

உங்கள் மருந்துப்பொடி குறித்து சொல்லுங்கள்?

இதன் பேர்தான் மருந்து பொடி ஆனால் மிகவும் சுவையானதாக இருக்கும். வயதுக்கு வந்த பெண்கள் குழந்தை பெற்ற பெண்கள், ஒழுங்கற்ற மாதவிடாய் இருக்கும் பெண்கள் போன்றவர்களுக்கு இந்த மருந்துப் பொடியை சூடான சாதத்தில் கலந்து தருவார்கள். இதனால் நல்ல உடல் ஆரோக்கியத்தை பெறமுடியும் என்பது எங்கள் காயல்பட்டினத்தில் வழக்கத்தில் உள்ள நம்பிக்கை.

உங்கள் மசாலா தொழிலில் எதிர்கால திட்டங்கள் என்ன?

இதுவரை அறுபதுக்கும் மேற்பட்ட பெண்களுக்கு மசாலா தொழில் குறித்த செய்முறை வகுப்பினை எடுத்துள்ளேன். அவர்கள் என்னிடம் கற்றுக்கொண்டு தங்களது கிராமத்தில் விற்பனை செய்து அசத்தி வருகிறார்கள். இன்னும் எதிர்காலத்தில் நிறைய பேருக்கு மசாலா தொழில் குறித்து சொல்லித்தர வேண்டும். நிறைய பெண் தொழில்முனைவோரை உருவாக்க வேண்டும் என்பதே எனது லட்சியம் . தற்போது ஆன்லைன் மூலமாகவும் பலருக்கு வகுப்புகள் எடுத்தும் வருகிறேன். வெற்றிக்குத்தான் எல்லை இருக்கிறது ஆனால் முயற்சிகளுக்கு எல்லையே கிடையாது, தொடர்ந்து முயன்று கொண்டே இருந்தால் வெற்றி நிச்சயமாக நமது வசப்படும். குறிப்பாக பெண்கள் எது குறித்தும் கவலைகொள்ளாமல், சோர்வடைந்து போகாமல் , தைரியமாக துணிந்து இறங்கினால் இந்த தொழிலில் மட்டுமல்ல எத்துறையிலும் சாதிக்கலாம் என்கிறார் காயல் சமையலில் அசத்தி வரும் ஃபாயிஷா காதர்.
– தனுஜா ஜெயராமன்

You may also like

Leave a Comment

15 − nine =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi