காட்டுமன்னார்கோவில்: காதல் விவகாரத்தில் மகளை கழுத்தறுத்து கொடூரமாக கொலை செய்த தந்தை போலீசில் சரணடைந்தார். கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் அருகே மணலூர் ஊராட்சிக்கு உட்பட்ட டி.மடப்புரம் கிராமத்தை சேர்ந்தவர் அர்ஜுனன் (57) கூலி தொழிலாளி. இவருக்கு மனைவியும் 2 மகன்கள் மற்றும் ஒரு மகள் உள்ளனர். மகள் அபிதா (27) காட்டுமன்னார்கோவிலில் உள்ள அரசு உதவிபெறும் பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வந்தார். அவருக்கு திருமணம் முடிக்க கடந்த 2 ஆண்டுகளாக அர்ஜுனன் வரன் பார்த்து வந்துள்ளார்.இந்நிலையில், அபிதாவுக்கு வேறு ஒருவருடன் காதல் ஏற்பட்டுள்ளது. இதற்கு தந்தை அர்ஜுனன் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். அதனையும் மீறி அபிதா அந்த இளைஞருடன் பேசி வந்ததாக கூறப்படுகிறது.
இதனால் ஆத்திரமடைந்த தந்தை அர்ஜுனன் நேற்று வீட்டில் இருந்தபோது அபிதாவிடம் காதல் விவகாரம் குறித்து கேட்டு சண்டை போட்டுள்ளார். இதனால் இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டு முற்றியது. இதில் ஆத்திரமடைந்த அர்ஜுனன் பேனா கத்தியால் மகள் அபிதாவின் கழுத்தை கொடூரமாக அறுத்துள்ளார். இதனால் அபிதா ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதைத்தொடர்ந்து, அர்ஜுனன் அருகில் இருந்த பாத்திரத்தில் கையை கழுவிட்டு அங்குள்ள டாஸ்மாக் கடையில் மது அருந்தி உள்ளார். போதை அதிகமானதும் அருகே உள்ள புத்தூர் காவல் நிலையத்துக்கு சென்று தனது மகளை கொலை செய்ததாக கூறி சரண் அடைந்தார்.