‘‘வரும் தேர்தலில் குறிப்பிட்ட தொகுதியை குறி வைத்து சீட்டு வாங்கிடலாம் என ஜாதகம் பார்த்து அதிர்ந்து போன இலை கட்சி நிர்வாகி மவுனமாகி விட்டாராமே..’’ எனக்கேட்டபடி வந்தார் பீட்டர் மாமா. ‘‘டெல்டாவை சேர்ந்த இலை கட்சி நிர்வாகி ஒருவர், வரும் சட்டமன்ற தேர்தலில் அந்த குறிப்பிட்ட தொகுதியில் போட்டியிடுவதில் மிகுந்த ஆர்வமாக இருக்கிறாராம்.. ஆனால், அந்த தொகுதியை இலை கட்சியின் முக்கிய நிர்வாகிகளும் குறி வைத்துள்ளார்களாம்.. தலைமையிடம் பேசி, அந்த தொகுதியை வாங்கி விடலாம் என்பதில் இலை கட்சி நிர்வாகி நம்பிக்கையில் உள்ளாராம்.. இந்தநிலையில், நண்பர் ஒருவரின் யோசனையை கேட்டு, இலை கட்சி நிர்வாகி சில நாட்களுக்கு முன்பு ஜாதகம் பார்த்தாராம்.. இதில், அந்த ெதாகுதியில் போட்டியிட்டால், பின்னடைவுதான் ஏற்படும் என ஜோசியர் தெரிவித்துவிட்டாராம்.. இதனால் அதிர்ச்சி அடைந்த இலை கட்சி நிர்வாகி, அங்கிருந்து அவசர அவசரமாக புறப்பட்டு விட்டாராம்.. ெதாடர்ந்து, யாரிடமும் பேசாமல் மவுனமாக இருந்து வருகிறாராம்..’’ என்றார் விக்கியானந்தா.
‘‘தந்தை-மகன் மோதல் விவகாரத்தில் வழக்கை காட்டி டெல்லி தூதுவர் வந்து தந்தையை மிரட்டிட்டு போன விஷயம் தெரியுமா..’’ என்றார் பீட்டர் மாமா. ‘‘மாம்பழ கட்சியில் தந்தைக்கும் மகனுக்கும் இடையே ஏற்பட்டுள்ள மோதல் விவகாரம் சாதாரணமாக முடிவுக்கு வராது என்ற நிலையே ஏற்பட்டிருக்காம்.. 80 ஆயிரம் கிராமங்களுக்கு கால்நடையாக சென்றே கட்சியை வளர்த்தேன்.. ஆனால் ஒரே நாளில், எனக்கு தெரியாமலேயே மலராத கட்சியுடன் கூட்டணி சேருவதற்காக என்னை ஓரம்கட்ட நினைத்தால் அது ஒருபோதும் நடக்காதுன்னு தந்தை சொல்லிட்டாராம்.. தந்தை தானே என நினைத்த தனயன் ஆடித்தான் போயிட்டாராம்.. என்றாலும் பல்வேறு கட்ட சமரச பேச்சுவார்த்தை நடந்தும் உடனடியாக எந்த நன்மையும் கிட்டலையாம்.. இந்த பிரிவுக்கு டெல்லி மலராத கட்சிதான் முக்கிய காரணமாக இருக்குதாம்.. இலைக்கட்சியை மிரட்டி தங்களின் வலையில் சிக்க வைத்ததோடு மட்டுமல்லாமல் மாம்பழ கட்சியையும் வழக்கை ஒன்றை காட்டி மிரட்டினாங்களாம்.. இதனால தந்தையிடம் கூட சொல்லாமல் முடிவு செய்தது தெரிந்தவுடன், தலைவர் பதவியை பறிச்சிட்டாராம்..
இதனால டெல்லிக்கு மட்டுமல்லாது, மகனுக்கே அதிர்ச்சி வைத்தியம் கொடுத்தாராம் தந்தை.. மலராத கட்சியுடன் கூட்டணி வேண்டாம் என கூறியும் எனது காலை பிடித்த மகனும் மருமகளும் கதறிய காட்சியை தந்தை வெளிப்படையா சொல்லிட்டாராம்.. இதனால கோபம் அடைந்த டெல்லி, எங்களுக்கு பெருத்த அவமானத்தை தேடிக்கொடுத்ததுக்கு சரியான பாடத்தை கற்பிற்போம் என சொல்லி அதன்படியே கட்சியில் பெரும் பிளவை ஏற்படுத்தியதாக மாம்பழ கட்சிக்காரங்க சொல்றாங்க.. மாம்பழ கட்சியை இலைக்கட்சி கூட்டணிக்கு அனுப்பி விடாமல் தங்களுடன் வைத்துக்கொள்ள டெல்லி ரொம்பவே தீவிரமாக இருக்குதாம்.. இந்த நிலையில் டெல்லியின் தூதுவராக ஆடிட்டர் ஒருவரை தோட்டத்துக்கு அனுப்பி வச்சதாம்.. அவரும் நிறுவனரை சந்திச்சி, மலராத கூட்டணிக்கு வந்தே ஆகணுமுன்னு சிரிச்சிக்கிட்டே சொன்னதோடு மகனின் வழக்கு விவகாரத்தை காட்டி மிரட்டியதாகவும் கூறப்படுது.. என்றாலும் நிறுவனர் எதற்கும் பிடிகொடுக்கலையாம்.. இதனால ஏமாற்றத்தோடு டெல்லி தூதுவர் சென்றிருக்காரு..
அதே நேரத்துக்கு முன்னதாக பனையூரில் இருந்து தோட்டத்துக்கு மகனும் போயிருக்காரு.. எப்போதும் இல்லாத வகையில் தந்தை ரொம்பவே கோபமாகத்தான் இருந்தாராம்.. எடுத்த வேகத்திலேயே 20 ஆண்டுகளாக சொல்லிவரும் நடைபயணம் சென்று தினந்தோறும் மக்களையும், தொண்டர்களையும் சந்திச்சு கட்சியை வலுப்படுத்தணும்.. தலைவராக இருந்து தேர்தல் வேலையை நான் பார்த்துக்கொள்கிறேன் என்றாராம்.. தலைவராக நானே இருக்கிறேன் என மகன் கூறியதை தந்தை நிராகரிச்சிட்டாராம்.. இதனால மிகுந்த வெறுப்புடன் சோகத்துடன் மகன் வெளியேறி போயிட்டாராம்..’’ என்றார் விக்கியானந்தா.‘‘ரெண்டு முதல்வர்களை கொடுத்த தொகுதியில் போட்டியிட இலைக்கட்சி நிர்வாகிகள் மோதிக்கொள்வதால் மூன்றாவது நபருக்கு கொடுத்து விடலாம் என செல்வாக்கான ஆள தேடும் வேட்டை நடக்காமே..’’ எனக்கேட்டார் பீட்டர் மாமா.
‘‘ஹனிபீ மாவட்டத்தில் பட்டி என முடியும் தொகுதி ரெண்டு முதலமைச்சர்களை தமிழ்நாட்டிற்கு தந்திருக்கிறது.. இலைக்கட்சியின் நிறுவனரும், அம்மையாரும் இந்த தொகுதியில் எம்எல்ஏவாக இருந்திருக்காங்க.. வரும் சட்டமன்ற தேர்தலில் இலைக்கட்சியின் சார்பில் போட்டியிட இருவரிடையே கடும் ேபாட்டி ஏற்பட்டுள்ளதாம்.. ஒருவரையொருவர் காலி செய்யும் குள்ளநரி வேலையில் இருவரும் இறங்கி விட்டனராம்.. கடந்த தேர்தலில் போட்டியிட்ட அண்ணனிடம் தோற்றுப்போன ஒன்றிய பதவியுள்ள தம்பி, இந்த முறை எப்படியாவது மீண்டும் சீட் பெற்று களத்தில் நிற்க வேண்டுமென ரொம்பவே தீவிரமாக உள்ளாராம். இதே தொகுதிக்கு மாவட்ட முக்கிய நிர்வாகியான தீபாவளி பலகாரம் பெயர் கொண்டவர், தனக்கு சீட் கேட்டு தலைமைக்கு நெருக்கமானவர்களை சரிகட்டும் வேலையில் தீவிரமாக ஈடுபட்டுள்ளாராம்.. சமீபத்தில் கட்சி தலைமையில் இருந்து ஆய்வு கூட்டத்திற்கு வந்தபோது, ஒன்றிய நிர்வாகி, பலகாரக்காரருக்கு தொகுதியில் போதிய ஆதரவு இல்லை எனக்கூறி அவர் மீது ஏகப்பட்ட குற்றச்சாட்டுகளை அள்ளி வீசி இருக்கிறார்..
பதிலுக்கு பலகாரக்காரர் தரப்பினரும் ஒன்றிய நிர்வாகி மீது புகார்களை தட்டி விட்டிருக்காங்க.. இதனால் தொகுதியை பேசாமல் 3வது நபருக்கு கொடுத்து விடலாம் என முடிவு செய்து, யாருக்கு செல்வாக்கு இருக்கிறது என தேடுதல் வேட்டை தொடங்கி விட்டதாம்..’’ என்றார் விக்கியானந்தா. ‘‘ஊழியர்களிடமே கறார் காட்டும் மின்துறை பெண் அதிகாரி ஒருத்தர் பணியாளர்கள் உதவியுடன் டிரான்ஸ்பார்மரை பதுக்கிட்டாராமே..’’ என்றார் பீட்டர் மாமா. ‘‘மிஸ்டர் பத்தூர் மாவட்டத்துல பிரியாணி பேமஸ் ஊருக்கு மிக அருகாமையில் புரம் என முடியும் ஊரில் கரண்ட் ஆபிஸ் இருக்கு.. புறநகருடன் அதிக அளவில் இன்டஸ்ட்ரீஸ் மற்றும் கிராமங்கள் கொண்ட இங்கு மின்துறை பெண் அதிகாரி உரிய வகையில் வேலை செய்வதில்லையாம்.. கொடுக்க வேண்டியதை கொடுத்தா தான் வேலை என சக ஊழியர்களிடமே கறார் காட்டுறாராம்..
இதில்லாம துறை சார்பில் மக்கள் பயன்பாட்டிற்கு வழங்கிய டிரான்ஸ்பார்மர்களை மேடம் சில பணியாளர் உதவியுடன் தனியா ஒரு இடத்தில் பதுக்கி வைத்திருக்காங்களாம்.. மேலதிகாரி வரைக்கும் கம்ப்ளைண்ட் போனதில் தற்போது ஒரு சிலவற்றை மிஸ்டர் பத்தூர் ஆபீசுக்கு அனுப்பி இருக்காங்க.. சில டிரான்ஸ்பார்மர்களை தனியார் இடத்திற்கு அனுப்பி செம்பு காயில் மாற்றி வேலை செய்து, காசு பாக்க அங்க அனுப்பி இருக்காங்க.. மக்கள் புகாரை கண்டுக்கிறதில்ல.. இவரின் மெத்தனப்போக்கால் பொதுமக்களுடன் சேர்ந்து இப்போ அலுவலக ஊழியர்களும் அவதிப்படுவதாக பேச்சு ஓடுகிறது..’’ என்று முடித்தார் விக்கியானந்தா.