நன்றி குங்குமம் தோழி
“என்ன தங்கம் இன்னிக்கு உன் வீட்டுக்காரர் வருகிறாரா? மீன் குழம்பு வாசம் ஊரை தூக்குது?”
“ஆமாக்கா, வாரத்துல ஆறு நாள் திருப்பூர்ல தனியா பொங்கி சாப்பிடறாரு. இன்னிக்கு நம்ம மகாதானபுரத்துல சாப்பிட்டு தூங்கினார்னா, நாளைக்கு ஞாயிற்றுக்கிழமை ஓடியே போயிடும். திங்கட்கிழமை விடியல்ல கிளம்பிடுவாரு.’’ “சீக்கிரம் சமையலை முடி. நல்ல மனுஷன்தான். ஆனா, அவர் கோபம் பொல்லாதது. என்னடியம்மா அப்படி ஒரு கோபம்?”
“அவரை ஒன்றும் சொல்லாதேக்கா. பாவம். எம்.ஏ. படிச்சவருக்கு எட்டாவது படிச்சவளைக் கட்டி வைச்சுட்டாங்க. ரெண்டு பசங்களை வளர்த்து ஆளாக்க ரொம்ப கஷ்டப்பட்டுட்டாரு. பெரியவன் இன்ஜினீயரிங் கடைசி வருஷமும், சின்னவன் +1ம் முடிக்கப் போறாங்க. வேலையும் கஷ்டம். ‘சூப்பர்வைசர்’ வேலை என்றால் சும்மாவா? அதட்டி வேலை வாங்கணும். கம்பெனியில் எந்தப் பிரச்னை என்றாலும், முதலாளி இவரைதான் திட்டுவாரு. எல்லார் வீட்டிலும் புருஷன் பொண்டாட்டி ரெண்டு பேரும் சம்பாதிச்சு குடும்பம் நடத்துவாங்க. நான்தான் அதுக்கு லாயக்குப்படல. ஊர் உலகத்துல, ஆம்பளைங்க கெட்ட பழக்கங்களினால் பணத்தை அழிச்சு, குடும்பத்தையும் அழிக்கிறாங்க. இவர் அப்படியா? ெகாஞ்சம் கோபப்பட்டாதான் என்ன…?”
“எப்பவும் ஒன்னும் இல்லாத விஷயத்துக்கு அவர் உன்னை கூப்பாடு போடறதை ஊர் அறியும். உன்னை திட்டுவதை கூட புரிஞ்சுக்க முடியாது. ஆனா, பெத்த குழந்தைங்க கிட்டயும் சிடு சிடுன்னு இருக்காரே. அவருக்கு பிடிச்சதைதான் சமைக்கணும், அவர் விருப்பப்படி தான் உடை போடணும், அவர் சொல்றதை தான் படிக்கணும்னு இப்படி ஒரு முரட்டு பிடிவாதமா இருக்காரே! அதைதான் சொன்னேன்” என்றவாறே கிளம்பினாள் பக்கத்து வீட்டு அமுதம்.
பெரிய பையன் முருகன் அதைக் கேட்டவாறே உள்ளே நுழைந்தான். “ஆமாம்மா, அப்பா உன்னை திட்டிக்கிட்டே இருக்கிறது மனசுக்கு ரொம்ப கஷ்டமா இருக்கு”.
“முருகா, ஒரே ஆளா உழைக்கும் போது கோபம் வர தான்டா செய்யும். நீங்க முன்னேறணும்னு தானே அப்பா கஷ்டப்படறாரு. அதையெல்லாம் விடு. கல்லூரிக்கு ேபான காரியம் என்னாச்சு? அதை சொல்லு மொதல்ல…” “சந்தோஷமான விஷயம்தான்ம்மா.
கேம்பஸ் இன்டர்வியூல செலக்ட் பண்ணியிருக்காங்க. கடைசி பரீட்சையை முடிச்சுட்டு கிளம்பணும். சம்பளம் ரூ.40,000/- நாங்க அங்கே போய் ஒரு வீடு பார்த்து தங்கி, நாங்களே சமையல் மற்றும் எல்லா வேலைகளையும் பகிர்ந்துக்கலாம்னு இருக்கோம்மா…”தங்கத்திற்கு ஆனந்தக் கண்ணீர் சுரந்தது. பேச்சு வராமல் தடுமாறினாள். பையன் தலை எடுத்துட்டான். நம்ம புருஷனுக்கு கை கொடுப்பான். அவரும் இனி எல்லார் வீட்டு அப்பா மாதிரி பசங்க கிட்ட அன்பா இருப்பார். அது போதும் நமக்கு, பலவாறு சிந்தித்தவளிடம் முருகன், “இதோ பாரும்மா ஆஃபர் லெட்டர்” என்று காண்பித்து, அவள் கால்களில் விழுந்து வணங்கினான்.
“இங்கே என்ன டிராமா நடக்குது?” திடீரென்று அருகில் கேட்ட அப்பாவின் குரலில் திடுக்கிட்ட முருகன், அப்பாவிடம் கடிதத்தை நீட்டினான்.அதை வாங்காமல், “என்ன விஷயம்? அதை முதலில் சொல்லு” அதட்டினான் இன்பன்.“முருகனை பெரிய கம்பெனிக்காரங்க சென்னையில் வேலைக்கு சேரச் சொல்லியிருக்காங்களாம்.”“ஏய், உன்னை கேட்டேனா? தற்குறி, தற்குறி, போய் சோத்தை வைக்கிற வேலையைப் பாரு. நான் குளிச்சுட்டு வரேன். என்னடா, புருஷங்காரன் வாரத்துல ஒரு நாள் வரானே, அவனை கவனிக்கலாம்னு இல்லாம, வந்துட்டா பேச…” சொன்னவாறே குளியலறைக்குள் சென்றான்.
அப்போது அங்கே வந்த சின்ன மகன் சரவணன், அப்பாவின் பயணப்பையை பார்த்து, “என்னம்மா, விஸ்வாமித்திரர் வந்துட்டாரா?” என்று கேட்டான்.“மெதுவாடா, அப்பா குளிக்கிறாரு. நீங்க அப்பா கூட சாப்பிடுங்க.”“அய்யய்யே, இப்படி உறிஞ்சி சாப்பிடாதே, உள்ளங்கையில் சோறு படாம சாப்பிடுன்னு நூறு குறை சொல்வாரு. நான் அப்புறம் சாப்பிட்டுக்கிறேன்.”“அண்ணா, இன்டர்வியூ என்னாச்சு?” என்று முருகனிடம் கேட்டான் சரவணன்.
“சென்னை ேபாஸ்ட்டிங்டா. சம்பளம் ரூ.40.000/-”‘‘சரவணா, அப்பாவே இப்பதான் ரூ.20,000/- சம்பளம் வாங்கறார். இவனுக்கு இப்பவே இவ்வளவு சம்பளமா? ஊர்ல நாளைக்கு விஷயம் தெரிஞ்சா, எல்லாம் பிரமிச்சுடுவாங்க.”“என்ன பெருமையா இருக்கு?” இன்பனின் குரலில் மூவரும் திடுக்கிட்டனர்.சடாரென்று அங்கிருந்து சமையல் அறைக்கு நகர்ந்து, தட்டு, டம்ளர்கள், சமைத்த உணவுகளை தங்கமும், முருகனும் கொணர்ந்தனர்.தட்டுகளை வரிசையாக தங்கம் வைக்க, டம்ளர்களில் தண்ணீரை ஊற்றினான் முருகன்.
கீழே அமர்ந்த இன்பனின் அருகில் முருகனும் அமர்ந்தான்.“சரவணா, நீயும் உட்காருடா, எனக்கு வேலை முடியும்.”அம்மா சொல்ல, அப்பாவின் எதிரில் மறுக்க முடியாமல் அமர்ந்தான் சரவணன்.சாதத்தை மூவருக்கும் பரிமாறி விட்டு, அயிரை மீன் குழம்பை கணவனின் தட்டில் ஊற்றினாள் தங்கம். கணவனுக்கு வாய்க்கு வாய் மீன் வேண்டும் என்பதால், மீன்களையும் அள்ளி வைத்தாள். கணவன் தட்டில் கை வைக்கப் போவதைப் பார்த்து, “இருங்க, குழம்பு சூடாயிருக்கும், பார்த்து” என்று அவசரம் அவசரமாக கூறி முடிப்பதற்குள், சோற்றின் மேல் இன்பன் கை வைத்து விட, சூடான உணவு கையை சுட்டு விட்டது. கையை உதறியவன், “ சூடாயிருக்குன்னு சொல்ல மாட்டியா?” என்று கை ெகாள்ளும் அளவுக்கு குழம்புடன் சோற்றை எடுத்து, தங்கத்தின் முகத்தில் வீசியெறிந்தான்.
துடிதுடித்தாள் தங்கம். குழம்பின் காரம் கண்ணில் பட்டு, கண் காந்தியது. சட்டென்று போய் கண்களில் நீரை அடித்து கழுவினாள். கண் எரிச்சல் இருந்தாலும், சமாளித்துக் கொண்டு அவர்கள் சாப்பிடும் இடத்திற்கு வந்தாள். மகன்கள் இருவருக்கும் அப்பாவின் செயல் கோபத்தை அளித்தாலும், அப்பாவை எதிர்த்து பேசி பழக்கமில்லாததால், பொறுமையாக அமைதி காத்தனர். அதற்குள் முருகன் தனக்கும் தம்பிக்கும் குழம்பை ஊற்றினான். தங்கம் அவர்கள் அனைவருக்கும் வறுத்த மீன் துண்டுகளை வைத்தாள்.
“அம்மா, சாப்பாடு நல்லாயிருக்கும்மா. அதிலும் இந்த மீன் குழம்பு இருக்கே… அதில் உன்னை அடிச்சுக்க ஆளே இல்லையம்மா” சரவணன் கூற, தங்கத்தின் முகம் மலர்ந்தது. உடனே இன்பன், “சாப்பிடும் போது என்ன பேச்சு? தட்டை பார்த்து சாப்பிடு” என்று கர்ஜிக்க, சோற்றை நான்கு வாயில் அள்ளி போட்டுக் கொண்டு எழுந்தனர் சரவணனும், முருகனும்.வீட்டு முன்புறத்தில் பரந்து விரிந்திருந்த காலியிடத்தில், அனைவருக்கும் படுக்கையை விரித்து, தலையணையை வைத்தாள் தங்கம். பிறகு கணவனுக்கு வெற்றிலை பாக்கை மடித்துக் கொடுத்தாள்.பிறகு, தானும் உள்ளே சென்று சாப்பிட்டு, பாத்திரங்களை கழுவி, சமையல்அறையை சுத்தப்படுத்தி விட்டு வந்தாள்.சுற்றிலும் மரங்கள் இருந்ததால், ‘குளுகுளு’ என்றிருந்தது.
“முருகா, இப்ப சொல்லுடா உன் வேலை விவரங்களை…”“இன்னிக்கு கேம்பஸ் இன்டர்வியூல, என்னையும் சேர்த்து நாலு பேரை தேர்ந்தெடுத்திருக்காங்கப்பா. சென்னை டி.சி.எஸ்.ல ஒன்றாம் தேதி சேரணும். 40,000 ரூபாய் சம்பளம்.”இன்பனின் முகம் சுருங்கியது.“சென்னைல ஹாஸ்டல் ஏற்பாடுகளை பண்ண 2,3 நாள் ஆகும். என்னால் லீவு போட்டு வர முடியாது. நீ பக்கத்துல திருப்பூர்ல என்னை மாதிரியே கார்மென்ட்ல வேலை பார்த்துக்கோ…”கணவன் கால்களை பிடித்து விட்டுக் கொண்டிருந்த தங்கம், “அவன் படிப்புக்கு ஏத்த நல்ல வேலைங்க. கார்மென்ட்ல எல்லாம் அவன் வேலை பார்த்து கஷ்டப்பட வேண்டாங்க. எப்படியாவது அவனை அவன் சொல்ற வேலையிலேயே சேர்த்துடுங்க” என்றாள். அவள் கையிலிருந்த தன் காலை உருவி, எட்டி உதைத்தான் இன்பன். தங்கம் அப்படியே தெறித்து மல்லாந்து விழுந்தாள்.
வெகுண்டான் முருகன். “நிறுத்துங் கப்பா… இது என்ன மூர்க்கம்? இனி அம்மா உங்களிடம் இப்படி அடிபடுவதை பொறுத்துக்க முடியாது.”சரவணன் ஆக்ரோஷத்துடன் “அண்ணா, நாம் அம்மாவையும் கூட்டிக்கிட்டு சென்னைக்கு போயிடலாம். அப்பா இங்கேயே இருக்கட்டும். என்னையும் அங்கேயே ஸ்கூல்ல சேர்த்துடு. தனியா அவஸ்தைப்பட்டால்தான் அவருக்கு புத்தி வரும்.”
கோபத்துடன் பாய்ந்தாள் தங்கம். “டேய், அப்பாவை விட்டுட்டு நான் என்னிக்கும் எங்கும் வரமாட்டேன். நமக்காகவே உழைக்கிறவர்டா அவர். மொதல்ல அப்பாவிடம் மன்னிப்பு கேளு” என்று அவனை உலுக்கினாள்.சரவணன் பக்கம் திரும்பிய முருகன், “சரவணா, அப்பாவை அப்படி எல்லாம் எடுத்தெறிஞ்சு பேசக் கூடாதுடா… இவ்வளவு நாள் அப்பாதான் கஷ்டப்பட்டு நம்மை படிக்க வெச்சாரு. அந்த நன்றியை என்னிக்கும் நாம மறக்கக்கூடாது. அப்படி நம் தேவை முடிஞ்சவுடன் பெற்றோர்களை தூக்கி எறிஞ்சா நாம் படிச்சதுக்கு என்ன அர்த்தம்? இனி மனசால கூட அப்பாவைப் பற்றி அப்படி நினைக்காதே” என்றவன், அப்பாவிடம் திரும்பினான்.
“பார்த்தீங்களாப்பா அம்மா பேசறதை… உங்களுக்கு வேலை அதிகம், அதனால அந்த டென்ஷனை அம்மாவிடம் காமிக்கறீங்கன்னு வைச்சுக்கிட்டா, அம்மா மட்டும் வெட்டியாவா இருக்காங்க? நம்மை பார்த்து பார்த்து கவனிச்சுக்கிறாங்க. மாடுகளை பராமரிச்சு, பாலை சொசைட்டில கொடுத்து காசாக்கறாங்க. தோட்டத்துல விளையற காய், பூ, பழம், தேங்காய் இதெல்லாத்தையும் காசாக்கி, குடும்பத்துக்கு வைச்சுக்கிறாங்க. நீங்க கஷ்டப்பட்டு படிக்க வைச்சாலும் குறிப்பிட்ட அளவு பணம் குடுக்கிறதோட உங்க கடமை முடிஞ்சதா நினைக்கிறீங்க… அம்மா எங்கள் ஆசைகளை முடிஞ்சளவு நிறைவேத்தறாங்க.
நாங்க மற்றவங்க மாதிரி, செல்ஃபோன், பைக், உடைகள்னு ஏதாவது கேட்கிறோமா? நான்+2வில் நம் மாவட்டத்துலேயே முதலாவதா வந்தப்ப, ஒரு வார்த்தை பாராட்டினீங்களா? நல்ல மதிப்பெண் வாங்கினதுனால எனக்கு உபகார சம்பளத்துடன் இஞ்சினீயரிங் சீட் கிடைச்சுது. பரீட்சை முடிவு வர வரை என்ன சொல்லிக்கிட்டு இருந்தீங்க? ‘படிச்சது போதும், எங்கயாவது ஒரு வேலைய தேடிக்கோன்னு’ ஒரு நாளாவது எங்களிடம் அன்பா பேசி இருப்பீங்களா? வெளியில் கூட்டி போயிருக்கீங்களா? என்னை காலேஜ்ல சேர்க்க கூட அம்மாதானே வந்தாங்க! அவங்க டென்ஷனை யாரிடம் காமிப்பாங்க? இவ்வளவு ஏன்? உங்க சொந்தக்காரங்க, அம்மா பக்கத்து உறவுகாரங்க அத்தனை பேரையும் அரவணைச்சு இந்த குடும்பம் உங்க கோபத்தால சின்னாபின்னம் ஆகாம கட்டி காப்பாத்தறது அம்மாதானே?
திருமணத்திற்கு முன்பே உங்களுக்கு அம்மாவின் படிப்பு தெரியுமில்லையாப்பா? அப்பவே அது உங்களுக்கு ஒத்து வரலைன்னா, கல்யாணமே பண்ணியிருக்க வேண்டாமே? அதை விட்டுட்டு, இப்படி எப்போதும் அம்மாவை டார்ச்சர் பண்றது என்ன நியாயம்ப்பா? உங்க வேலையாலதான் உங்களுக்கு மன உளைச்சல்னா, நீங்க உழைச்சது போதும். வேலையை விடுங்கப்பா. நான் குடும்பத்தையும், உங்களையும் என் கண்ணின் மணி போல் பார்த்துக்கிறேன்.
சென்னையில் நண்பர்கள் சேர்ந்து வீடு பார்த்துப்போம். நீங்கள் எனக்காக அலைய வேண்டாம். நீங்க எங்களை வெறுத்தாலும் நாங்க உங்களை மதிக்கிறோம்ப்பா…” நெகிழ்ந்த குரலில் முருகன் பேச, முன்பொரு நாள், பிரணவத்தின் பொருளை தந்தைக்கு உபதேசித்த முருகனை போல் இன்று தனக்கு “தகப்பன் சாமி”யான தன் மகன் முருகனை பிரமிப்புடன் பார்த்தவாறு சிலையாக அமர்ந்தான் இன்பன்.
தொகுப்பு: வி.ஜி. ஜெயஸ்ரீ