துமகூரு: துமகூரு குப்பி கடபா கிராமத்தை சேர்ந்தவர் ரேணுகய்யா (65). இவரது மகன் ரமேஷ் (31). இருவரும் பாக்கு வியாபாரம் செய்து வந்தனர். இந்நிலையில், பாக்கு விற்றதில் கிடைத்த 1,500 ரூபாய் ரமேஷிடம் இருந்தது. அதனை நேற்று முன்தினம் இரவு ரேணுகய்யா கேட்டார். மகன், கொடுக்க மறுத்தார். தகராறு ஏற்பட்டது. குடிபோதையில் இருந்த ரமேஷ், ரேணுகய்யாவை கத்தியாலும், அரிவாளாலும் சரமாரியாக வெட்டினார். இதில் ரத்த வெள்ளத்தில் அலறி துடித்த அவர், சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். தகவலறிந்து குப்பி போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்தனர். இறந்த ரேணுகய்யாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். போலீசார் வழக்கு பதிந்து தலைமறைவான ரமேஷை நேற்று மதியம் கைது செய்தனர்.