வணிக மதிப்பீட்டின் படி ஆண்டுகள் பெருக, பெருக பொருளாதாரரீதியாக மிகையான லாபம் தரும் விஷயங்களாக இரண்டை குறிப்பிடலாம். ஒன்று நிலம், மற்றொன்று தங்கம். தங்கத்தின் விலை மதிப்பு உயர்வதை மனதில் வைத்துத்தான் பழங்காலங்களில் பெண்ணுக்கு நகை போட்டு மணம் முடித்து வைப்பதை வழக்கமாக கொண்டிருந்தனர். புகுந்த வீட்டிற்கு செல்லும் பெண், அங்கு பொருளாதார ரீதியிலான பிரச்னைகளை சந்திக்கும்போது, அவசரத்தில் கை கொடுக்கும் என்று எண்ணித்தான் நகைளை போட்டு அனுப்பி வைக்கின்றனர். அந்த வகையில் நகை என்பது மருத்துவச் செலவு, படிப்பு, விவசாயம், எதிர்பாராச் செலவுகள், வீட்டு விசேஷம், தொழில் உட்பட பல அவசர தேவைகளுக்கு பெரிதும் உதவும். வங்கிகளில் அடகு வைத்து கிடைக்கும் பணத்தை வைத்து, அவசர செலவுகளை சரிக்கட்டுவர்.
ஏழைகளின் அவசர பணத்தேவைக்கு உதவும் நகைகளை அடகு வைப்பதற்கு, கழுத்தை நெரிக்கும் கடும் விதிகளை ரிசர்வ் வங்கி தற்போது வகுத்துள்ளது. அவற்றையும், அதனால் ஏற்படும் விளைவுகளையும் பார்ப்போமா? முதல்கட்டமாக, தனது நகையைத்தான் ஒருவர் அடகு வைக்கிறார் என்பதற்கான ஆவணச்சான்றிதழ், நகை வாங்கிய ரசீது கட்டாயம் வேண்டும் என்கிறது புதிய விதி. வம்சாவளியாக குடும்ப நகைகளை வைத்திருக்கும் ஒருவர், திடீரென அந்த நகைகளுக்கு ஆவணம், விற்பனை ரசீதுக்கு எங்கே செல்வார்? பழங்காலங்களில் பொற்கொல்லர்களில் கூட நகை செய்து அணிவோர் உண்டு. துண்டுச்சீட்டில் நகை விலையை எழுதிக் கொடுப்பார்கள். அந்த நகைகளை தற்போதைய தேவைக்கு அடகு வைக்கும்போது சான்றிதழுக்கு எங்கே செல்வது?
நகையின் தூய்மையை வங்கிகள் அல்லது நிதி நிறுவனங்கள் பரிசோதனை செய்து சான்றினை வழங்க வேண்டும் என்கிறது அடுத்த விதி. இதை வைத்துத்தான் கழிவுகள் போக நகை மதிப்பிடப்படும். ஒரு வேளை நகை தரமிழந்ததாக அறிவித்தால் நகைக்கடனை பெற முடியாது. அல்லது கடன் தொகை குறையும். அதுபோல நகைப்பட்டியலில் உள்ளவை மற்றும் வங்கிகள், நிதி நிறுவனங்களின் தங்க நாணயங்களே ஏற்றுக் கொள்ளப்படும். மற்றபடி நீங்கள் குவித்ேத வைத்திருந்தாலும் தங்க நாணயத்தின் ‘நாணயம்’ மதிப்பிடப்பட்டே அடமானத்துக்கு உகந்ததா என கூறப்படும். மேலும், நகைகளின் மீது 75 சதவீதம் மட்டுமே கடன் வழங்கப்படும் என்பது உள்பட கடும் விதிகளை விதித்துள்ளது ரிசர்வ் வங்கி. இப்போது நகைகளை வைத்து பெறும் விவசாயக்கடன்களுக்கு மதிப்பீட்டின்படி 100 சதவீதம் வரை கடன் பெறலாம். இனி அவ்வாறு பெற முடியாது.
இது நகைகளை வைத்து சாகுபடி செய்து வரும் விவசாயிகளுக்கு பேரிடியாக அமையும். மேலும், மக்கள் வைத்திருக்கும் நகைகளை ஜிஎஸ்டி வரம்பிற்குள் கொண்டு வருவதற்கான மறைமுக முயற்சியாகவும் பார்க்கப்படுகிறது. மேலும், நகை அடகு கெடுபிடி அதிகரிக்கும்போது, தனியார் நகை அடகுக்காரர்கள் வைத்ததே சட்டமாகி விடும். அடமான கடன் கிடைப்பதே குதிரைக்கொம்பாக இருக்கும்போது, கிடைத்ததை பெற்றுக் கொள்வோம் என்ற நிலை ஏற்படும். இதனால் ஏழை மக்கள் கடும் கடன் நெருக்கடிக்கு ஆளாகுவர். ரிசர்வ் வங்கியின் புதிய விதிகள் ஏழை மற்றும் நடுத்தர மக்களின் நகைகள் மீதான அவசர கால நம்பிக்கையை உருக்குலைக்கும் வகையில் உள்ளது. எனவே, இவர்களை பாதிக்கும் இந்த புதிய விதிமுறைகளில் திருத்தங்களை கொண்டு வர வேண்டுமென்ற கோரிக்கை வலுத்துள்ளது.