சென்னை: காலவரையற்ற உண்ணாவிரதத்தை வசீகரன் கைவிட உரிமையுடன் கேட்கிறேன் என்றும், அரவிந்த் கெஜ்ரிவால் விடுதலைக்கான களத்தில் மதிமுக உறுதியாக உடன் நிற்கும் என்றும் துரை வைகோ கூறியுள்ளார். மதிமுக முதன்மை செயலாளர் துரை வைகோ நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலை, ஒன்றிய அரசு பழிவாங்கும் நடவடிக்கையாக கைது செய்து சிறையில் அடைத்துள்ளது.
அந்தக் கைதை கண்டித்தும், அவரை விடுதலை செய்யக் கோரியும் கடந்த ஆகஸ்ட் 16ம் தேதி காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தை தொடங்கி இன்று 5வது நாளாக உண்ணாவிரதத்தை மேற்கொண்டு வரும் ஆம் ஆத்மி கட்சியின் தமிழகத் தலைவர் வசீகரனை நேரில் சந்தித்தேன். ஒன்றிய அரசின் சர்வாதிகாரப் போக்கிற்கு எதிரான உங்கள் போராட்டத்தில் நாங்களும் உடன் நிற்போம். அரவிந்த் கெஜ்ரிவாலின் முக்கியத் தளபதிகளில் ஒருவராக இருக்கின்ற நீங்கள் உங்கள் உடல் நலம் கருதியும், ஆம் ஆத்மி கட்சியின் நலன் கருதியும் இந்தக் காலவரையறையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தை கைவிட வேண்டும் என்று அவரிடம் உரிமையுடன் கேட்டுக் கொண்டேன்.
மனம் கவர்ந்த தலைவர்களில் ஒருவராகத் திகழும் அரவிந்த் கெஜ்ரிவால், இந்திய அரசியலில் குறுகிய காலத்தில் உயர்ந்திருக்கிறார். அவருடைய வளர்ச்சியை விரும்பாத ஒன்றிய பாஜ அரசு அவரையும், ஆம் ஆத்மி கட்சியையும் முடக்கும் நோக்கத்தோடு பழிவாங்கல் நடவடிக்கையை மேற்கொண்டு இருக்கிறது. அவருடைய விடுதலைக்காக, சர்வாதிகாரத்தை எதிர்க்கும் ஜனநாயக சக்திகள் ஒருங்கிணைந்து குரல் கொடுக்க வேண்டும். கெஜ்ரிவால் விடுதலைக்கான களத்தில் தலைவர் வைகோவும், மதிமுகவும் உறுதியாக உடன் நிற்கும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.