நமது பழங்கால விவசாயமே பாரம்பரிய விதை நெல்லை இயற்கை முறையில் விவசாயம் செய்வதுதான். அப்போதெல்லாம் களப்பு உரங்கள், பூச்சிக்கொல்லி என்ற பேச்சுக்கே இடமில்லை. அந்தளவிற்கு மண் பொன்னாக எது போட்டாலும் விளையும் பூமியாக இருந்தது. அப்படி மண்ணெல்லாம் நெல்லாக விளைந்த பாரம்பரிய அரிசிகளில் ஒன்றுதான் சொர்ணமசூரி என்ற விதைநெல். திருச்சி மற்றும் அதனை சுற்றியுள்ளப் பகுதிகளில் சொர்ணமசூரி பாரம்பரிய நெல் ரகம் பெரிய அளவில் பயிரிடப்பட்டது. இந்த நெல் பொன்னிறத்தில் இருந்ததால் இதனை சொர்ணமசூரி என்று நம் முன்னோர்கள் அழைத்தனர். தங்கத்திற்கு மறுபெயர் சொர்ணம். தங்கம் போல மிளிரக்கூடிய இந்த வகை நெல் சன்ன ரகத்தை சேர்ந்தது. கடந்த 50 வருடங்களில் தமிழகத்தில் பரவலாகச் சாகுபடி செய்யப்படும் இந்த நெல் ரகத்தை 120 லிருந்து 130 நாட்களுக்குள் அறுவடை செய்யலாம். நடவு நிலத்தில் அடியுரமாக ஏக்கருக்கு 200 கிலோ ஊட்டமேற்றிய தொழு உரம், 200 லிட்டர் ஜீவாமிர்தம், 2 கிலோ சூடோமோனாஸ் போன்றவற்றை பாசனநீர் வழி கொடுக்கலாம். நிலத்தில் லேசான இறுக்கம் வந்த பின்னர் தண்ணீர் பாய்ச்சுவதால், நாற்றின் வேர்பிடிப்புதிறன் சிறப்பாக இருக்கும். நடவிலிருந்து 3ம் நாள் உயிர்தண்ணீர் விட வேண்டும். 10 வது நாளில் மீன்அமிலம் 750மி.லி கொடுக்க வேண்டும்.18வது நாளில் மீன்அமிலம் ஒரு ஏக்கருக்கு 750மி.லி தர வேண்டும்.
30 வது நாளில் ஜீவாமிர்தம் ஏக்கருக்கு 200 லிட்டர் கலந்து தரைவழியில் கொடுக்க வேண்டும். இதேபோல் 10 நாட்களுக்கு ஒருமுறை மீன்அமிலம், ஜீவாமிர்தம் என்று பிரித்து கொடுக்க வேண்டும். நாற்றுகளை நடவு செய்த 75 வது நாளில் அக்னி அஸ்திரத்தை ஸ்பிரே செய்ய வேண்டும். 85வது நாளில் தேமோர் கரைசல் அல்லது பஞ்சகவ்யா தெளிக்கலாம். பயிர்களில் நெல்மணிகள் வரத்தொடங்கும் போது பூச்சிகள் தொந்தரவு அதிகம் இருக்கும். இதனை கட்டுப்படுத்த 90 வது நாள் வசம்பு கரைசல் ஒரு லிட்டரை தண்ணீரில் கலந்து தெளிக்க வேண்டும். இதிலிருந்து ஒரு மாதத்தில் நெற்பயிர்களை அறுவடை செய்யலாம். ஏக்கருக்கு சுமார் இருபத்தி எட்டு மூட்டை (75 கிலோ மூட்டையில்) வரையில் மகசூல் கிடைக்கக்கூடிய இவ்வகை நெல், வெள்ளை நிற அரிசி உடையதாகும்.“ஆற்றுப் பாசனம் மற்றும் கிணற்றுப் பாசனப் பகுதிகளுக்கு ஏற்ற ரகம் இது. நேரடி விதைப்புக்கும், நடவுக்கும் ஏற்றது. இயற்கைப் பேரிடர்களுக்கு ஓரளவு தாக்குப்பிடிக்கக் கூடிய இந்நெல் ரகம் ரசாயன உரங்கள் தேவையின்றி, செழித்து வளரக்கூடியது”இப்பயிரில் அதிக சொரசொரப்புத் (சொனை) தன்மை இயற்கையாகவே அமைந்திருப்பதால், பூச்சித் தாக்குதல் இருப்பதில்லை. இந்த நெல் ரகம் சன்னமாகவும் வெந்த அரிசி கண்ணைப் பறிக்கும் வெண்ணிறத்திலும் இருப்பதோடு சுவையிலும் அற்புதமாக இருப்பதால் இதனை சீரகச் சம்பாவுக்கு அடுத்தபடி பிரியாணிக்கு அரிசியாகவும் பயன்படுத்துகிறார்கள். மேலும் இதனுடைய பழைய சாதமும், நீராகாரமும் மிகுந்த சுவையாகவும், மூன்று நாட் களானாலும் கெட்டுப்போகாமலும் நல்ல மனமுடனும் இருக்கக்கூடியது.
சொர்ணமசூரி நெல் ரகத்தில் பல நன்மைகள் உள்ளது. நல்ல நோய் எதிர்ப்புச் சக்திகொண்ட இந்த நெல் அரிசிக் கஞ்சியில், பித்தம், வாயு போன்ற உபாதைகளுக்குத் தீர்வு உள்ளதாகக் கூறப்படுகிறது. மேலும் இந்த அரிசியைத் தொடர்ந்து உணவாக உட்கொள்வதன் மூலம், பெரும்பாலான நோயாளிகளுக்கு நோய் எதிர்ப்புச் சக்தி அதிகரிக்கும் எனவும் கருதப்படுகிறது. உடனடியாக உடலில் ஆற்றலாக மாறுவதால் இந்த அரிசியை வளரும் பருவத்தினர் அதிகம் உண்ணலாம். உடல் மெலிந்த குழந்தைகளுக்கு சொர்ணமசூரி அரிசியை கொடுத்தால் அவர்களின் எடை கூடும்.
மாடுகளை தாக்கும் இரத்தக் கழிச்சல் நோய்…
இந்நோய் மிகச்சிறிய ஒரு செல் உயிரிகளால் தாக்கப்படுகிறது. இது ஒரு கன்றிலிருந்து 2 வருட வயது வரை உள்ள கன்றை அதிகம் தாக்குகிறது. மற்ற மாடுகளும் பெரிய மேய்ச்சல் நிலங்களில் மேயும் போது பாதிக்கப்படலாம். வயிற்றுப் போக்கு, வறண்ட இருமல், பசியின்மை, எடை குறைதல் போன்றவை இந்நோயின் அறிகுறிகள். மாடு தன் வால் மூலம் பின்புறத்தை அடிக்கடி அடித்துக்கொள்ளும். இது உடலின் எபிதீலியல் செல்களை அழித்துவிடுகிறது. பல உயிரிகள் வயிற்றில் பெருகிவிடுகின்றன. நிமோனியாக் காய்ச்சல் ஏற்பட்டு பாதிக்கப்பட்ட கால்நடை இறந்து விடலாம். மேய்ச்சல் நிலங்களில் ஈரம் அதிகமாக இருந்தால் இந்நோய் எளிதில் பரவும். எனவே மேய்ச்சல் நிலங்களை எப்போதும் உலர்ந்த நிலையில் வைத்துக் கொள்ள வேண்டும். தண்ணீர்த் தொட்டி தரையிலிருந்து சற்று உயரத்தில் இருக்கவேண்டும். சதைப்பற்றுள்ள பயிர்களை ஓரங்களில் வளர்க்கலாம். காக்சிடியோஸ்டேட் என்ற மருந்தைத் தீவனத்தில் கலந்து கொடுக்கலாம். நல்ல தீவனம் உண்ணும் கால்நடைகளை இந்நோய் அதிகம் தாக்குவதில்லை.