வேலூர் மாவட்டம் ஒடுகத்தூர் அடுத்த பீஞ்சமந்தை, பலாம்பட்டு, ஜார்தான்கொல்லை ஆகிய 3 மலை ஊராட்சிகளில் சுமார் 84 குக்கிராமங்கள் அமைந்துள்ளன. இங்கு வாழும் மலைவாழ் மக்களின் பிரதான தொழில் விவசாயம் மட்டும்தான். பல தலைமுறைகளாக விவசாயத்தில் ஈடுபட்டு வரும் இவர்கள் எந்தப் பருவத்தில் என்ன பயிர் செய்தால் நமக்கு லாபம் கிடைக்கும் என்பதைத் துல்லியமாக கணித்து அதன்படி பயிர் செய்கிறார்கள். தற்போது கோடைகாலம் என்பதால் இந்தப் பருவத்தில் உடல் சூட்டைத் தணித்து குளிர்ச்சியைக் கொடுக்கும் வெள்ளரி சாகுபடியில் ஈடுபட்டு வருகிறார்கள் இந்தப் பகுதியின் பழங்குடியினர். சாலையோர வியாபாரம், பஸ் நிலைய வியாபாரம், கடைகளில் வியாபாரம் என இந்தக் காலத்தில் பல்வேறு வகைகளில் சந்தை வாய்ப்பு மிகுந்திருப்பதால் இங்குள்ள மக்கள் குடும்பம் குடும்பமாகவே வெள்ளரி சாகுபடியில் ஈடுபட்டு வருகிறார்கள். கதிரவனின் வெப்பக்கரங்கள் நீள ஆரம்பித்த ஒரு காலை வேளையில் பீஞ்சமந்தை ஊராட்சிக்கு உட்பட்ட தொங்குமலை கிராமத்தில் வெள்ளரி சாகுபடியில் ஈடுபட்டு வரும் சீனிவாசன், சுந்தரேசன் சகோதரர்களைச் சந்தித்துப் பேசினோம்.
“அணைக்கட்டு தாலுகாவிற்கு உட்பட்ட பீஞ்சமந்தை, ஜார்தான்கொல்லை, பலாம்பட்டு ஆகிய 3 மலைக் கிராமங் களில் வாழும் மலைவாழ் மக்களின் வாழ்வாதரத்தை இன்றைக்கும் தாங்கி நிற்பது விவசாயம்தான். அதிலும் மலைவாழ் மக்களுக்கு ஓரளவிற்கு லாபம் பெற்றுத் தருவதில் வெள்ளரி சாகுபடி முக்கியப் பங்கு வகிக்கிறது. 3 மாதப் பயிரான வெள்ளரியை ஆண்டுதோறும் ஜனவரி மாதத்தில் விதைக்க ஆரம்பிப்போம். அதற்கு முன் நிலத்தை நன்கு உழுது விட்டு இயற்கை உரங்கள் போடுவோம். ஒரு ஏக்கர் நிலத்தில் விதைக்க சுமார் 10 ஆயிரத்திலிருந்து 12 ஆயிரம் வரை விதைகள் தேவைப்படும். விதைகளைத் தனியார் கம்பெனியில் இருந்து வாங்குவோம். விதை கொடுக்கும் நிறுவனமே எங்களுக்கு உரம், பூச்சி மருந்துகளை வழங்கும்.எங்கள் பகுதியில் கிணற்றுப் பாசனத்தை மட்டுமே நம்பி பயிர் செய்கிறோம். வெள்ளரியை விதைத்த பிறகு ஒருநாள் விட்டு ஒருநாள் தொடர்ச்சியாக தண்ணீர் பாய்ச்சுவோம். சரியாக 15 நாட்களில் கொடி படர்ந்து பூக்கள் பூக்க ஆரம்பித்துவிடும். பிறகு 30 நாட்களில் வெள்ளரிப் பிஞ்சுகள் நன்கு காய்த்து அறுவடைக்கு தயாராகிவிடும். அதனை ஒருநாள் விட்டு ஒருநாள் அறுவடை செய்வோம். இதில் மகசூல் அதிகமாக கிடைக்க வாரம் 2 முறை பொட்டாசியம், பாஸ்பரஸ், வேப்பம்புண்ணாக்கு போன்ற உரங்களைக் கலந்து பயிர்களுக்குக் கொடுப்போம்.
30 நாட்களில் இருந்தே அறுவடையைத் துவங்கலாம். அறுவடை செய்யும் வெள்ளரிப் பிஞ்சுகளை 4 வகைகளில் தரம் பிரிப்போம். முதல்தர வெள்ளரிப் பிஞ்சுகளை 1 கிலோ ரூ.45க்கும், 2ம் தர வெள்ளரிப் பிஞ்சுகளை ரூ. 25 முதல் 28க்கும், 3ம் தர வெள்ளரியை ரூ.12 முதல் ரூ.15க்கும், 4ம் தரத்தை ரூ.3 முதல் ரூ.5க்கும் விற்பனை செய்வோம். மலைக்கிராமம் முழுவதும் நாள் ஒன்றுக்கு 10 முதல் 15 டன் வரை வெள்ளரிக்காய்கள் அறுவடை செய்யப்பட்டு விற்பனைக்கு அனுப்பப்படுகிறது. இங்குள்ள மொத்த வியாபாரிகள் வெள்ளரிக் காய்களை வாங்கி பல ஊர்களுக்கு அனுப்பி வைக்கிறார்கள். வெளிநாடுகளுக்கும் கூட எங்கள் ஊர் வெள்ளரி ஏற்றுமதி செய்யப்படுகிறது. வெள்ளரி வயலில் எல்லா வேலையையும் எங்கள் குடும்பத்தினரே பார்த்துக்கொள்கிறோம். இந்த சீசனில் வெள்ளரிக்கு நல்ல கிராக்கி இருப்பதால் அனைத்துச் செலவுகளும் போக ரூ.2 லட்சம் முதல் ரூ.3 லட்சம் வரை லாபம் கிடைக்கிறது. வெள்ளரி சாகுபடியில் ஒரு முக்கியமான சவால் மழைதான். நல்ல விளைச்சல் நேரத்தில் திடீரென மழை பெய்தால் அனைத்தும் வீணாகி விடும். மழைக்காலத்தில் வெள்ளரி விளைவதிலும் சிக்கல் ஏற்படும். எனவே இதை சரியான பருவத்தில் விதைத்து மகசூல் எடுக்க வேண்டும்’’
என்கிறார்கள்.
தொடர்புக்கு:
சுந்தரேசன்:
91762 70546.
வெள்ளரிக்காய்களில் 95 சதவீதம் நீர்ச்சத்து மிகுந்திருக்கிறது. மேலும் பல மருத்துவக்குணங்களும் இதில் நிரம்பி உள்ளன. சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை வெள்ளரிக்காய்களை விரும்பி சாப்பிடுவதால் இதற்கு சந்தை வாய்ப்புநன்றாகவே இருக்கிறது.
பீஞ்சமந்தை, பலாம்பட்டு, ஜார்தான்கொல்லை ஆகிய கிராமங்களில் பல குடும்பங்கள் வெள்ளரி சாகுபடியில் ஈடுபடுகின்றன. தற்போது சீசன் காலம் என்பதால் ஆண்கள், பெண்கள் என அனைத்து தரப்பினரும் வெள்ளரி சாகுபடியில் பிசியாக இருக்கிறார்கள்.