கூட்டுமுறை விவசாயம் நமக்கு புதிதில்லை. ஒரு வயலில் நண்பர்களுடன் சேர்ந்து அல்லது குடும்பமாக சேர்ந்து கூட்டு முறையில் விவசாயம் பார்த்து வருவார்கள். ஆனால், ஒரு ஊராட்சியே சேர்ந்து கூட்டு முறையில் விவசாயம் செய்வது புதிதுதான். கோவை மாவட்டம் சோமனூர் அடுத்த கிட்டாம்பாளையம் ஊராட்சிதான் இந்த சாதனையை செய்திருக்கிறது. இந்த ஊராட்சியில் சுமார் 6 ஆயிரம் பேர் வசிக்கிறார்கள். இவர்களின் முக்கிய தொழில் விவசாயம்தான். இப்பகுதியில் 119.7 எக்டர் பரப்பளவில் தென்னை, 61 எக்டரில் மஞ்சள், 12.8 எக்டரில் வாழை போன்ற பயிர்கள் சாகுபடி செய்யப்படுகிறது. ஊராட்சியின் ஒவ்வொரு வீடும் விவசாயி வீடுதான். இருந்தபோதும் அனைத்து மக்களும் ஒருங்கிணைந்து ஒரே நிலத்தில் வெள்ளாமை பார்க்கிறார்கள். இதுகுறித்து அறிய கிட்டாம்பாளையத்திற்கு சென்றோம். ஊராட்சி மன்ற தலைவர் விஎம்சி சந்திரசேகரைச் சந்தித்தோம். புன்னகையுடன் வரவேற்ற அவர், இந்த ஊராட்சி வெள்ளாமை குறித்து பகிர்ந்துகொண்டார்.
“ நான் ஊராட்சி தலைவராக பொறுப்பில் இருக்கிற வருடங்களில் எங்கள் ஊர் மக்களுக்கு பயன்படும் வகையில் ஏதாவது செய்யவேண்டுமென நினைத்தேன். அப்படி யோசித்துதான் ஊரில் உள்ள அனைவரையும் இணைத்து விவசாயம் செய்து வருகிறேன். முதலில் எங்கள் ஊரின் சிறப்பைப் பற்றிச் சொல்ல வேண்டும். எங்கள் ஊரில் பறவைகள் அதிகளவில் காணப்படும். இங்குள்ள மரங்களில் பகல் நேரத்தில் வவ்வால்களும், மாலை நேரத்தில் அதிகளவிலான வெவ்வேறு பறவைகளும் வந்து செல்லும். பகல் நேரத்தில் காணப்படும் ஆயிரக்கணக்கான வவ்வால்கள் மாலையில் இரை தேடி சென்று விடும். நாளுக்கு நாள் பறவைகளின் வரத்து அதிகமானதால், பறவைகளின் நலனுக்காக ஊராட்சி சார்பில் 6 ஆயிரம் மரக்கன்றுகளை நட்டிருக்கிறோம். இவற்றில் பெரும்பான்மையான மரங்கள் நாவல் மரங்கள்தான். இது பறவைகளின் உணவுக்குப் பயனுள்ளதாக இருக்கும் என நினைத்து நடவு செய்தோம்.
இதன்பிறகுதான் புதிதாக ஏதாவது செய்ய வேண்டும் என நினைத்தோம். அப்போதுதான் ஊராட்சிக்கு சொந்தமான இடத்தில் ஊர் மக்களை வைத்து விவசாயம் செய்ய முடிவு எடுத்தோம். அதன் மூலம் கிடைக்கும் விவசாய விளைபொருட்களை ஊர் மக்களுக்கு மலிவு விலையில் அளிக்கலாம் எனவும் திட்டமிட்டோம். இதற்கு ஊர்மக்களும் ஒத்துழைப்பு தந்தனர். இதனால் கிட்டாம்பாளையம் ஊராட்சிக்கு சொந்தமான 3 ஏக்கர் நிலத்தில் விவசாயம் செய்ய விரும்பினோம். அதற்காக தரிசாய் கிடந்த நிலத்தை சுத்தம் செய்யத் தொடங்கினோம். நிலம் முழுவதும் கல்லும், குப்பையுமாக கிடந்தது. அந்த நிலத்தை விவசாய நிலமாக மாற்ற மண்ணை சீர் செய்து, செப்பனிட்டு விவசாயத்திற்கு தகுந்தபடி மாற்றினோம். அதன்பிறகு ஊராட்சி சார்பில் மண்புழு உரம் தயாரிக்கப்பட்டு, அந்த மண்புழு உரத்தை இந்த 3 ஏக்கரில் கொட்டி மீண்டும் உழுதோம். மண்ணில் மண்புழு உரம் மேலும், கீழுமாக செல்லும்படி நன்றாக உழுது வந்தோம். அதன்பிறகு விவசாயம் செய்யத் தொடங்கினோம்.
முதற்கட்டமாக சுத்தம் செய்த நிலத்தில் 1.25 ஏக்கர் பரப்பில் சின்ன வெங்காயமும், அதற்குள் ஊடுபயிராக பச்சை மிளகாயும் பயிரிட்டோம். இந்த 1.25 ஏக்கருக்கும் விதைப்புக்கான சின்ன வெங்காயம் 350 கிலோ வரை தேவைப்பட்டது. அந்த வெங்காயத்தை விவசாயிகளிடம் இருந்தே வாங்கி விதைக்க ஆரம்பித்தோம். சின்ன வெங்காயம் 2 மாதப்பயிர் என்பதால் இப்போது மகசூல் கொடுத்து வருகிறது. சின்ன வெங்காயத்தைப் பொறுத்தவரை புதிய மண்ணில் நன்றாக வளரும். நீரும், உரமும் சரியான நேரத்தில் கொடுத்ததால் சின்ன வெங்காயம் நிலத்தில் நல்ல முறையில் விளைந்திருக்கிறது. 350 கிலோ விதையில் 3500 கிலோ வரை மகசூல் கிடைத்திருக்கிறது. அதாவது விதைப்பில் இருந்த வெங்காயத்துடன் சேர்த்து 10 மடங்கு அதிகமாக விளைந்திருக்கிறது. இந்த வெங்காயத்திற்குள் ஊடுபயிராக பச்சை மிளகாயும் விதைத்திருக்கிறோம். இப்போது அதுவும் அறுவடைக்கு தயாராக இருக்கிறது. அதுபோக, மீதி இருக்கிற நிலத்தில் கடலையும், உளுந்தும் பயிரிட்டு இருக்கிறோம். அதுவுமே கூட அடுத்தடுத்த மாதங்களில் விளைச்சல் தர இருக்கிறது. இங்கு நடக்கிற விவசாயம் எங்கள் ஊராட்சி மக்களின் கூட்டு முயற்சியில்தான் நடைபெற்று வருகிறது. சரியான நேரத்தில் தண்ணீர் கொடுப்பதில் இருந்து, மருந்து தெளிப்பது வரை அனைத்துமே அவர்கள்தான். இந்தப் பணியில் ஈடுபட்டு வரும் யாருமே பணத்திற்காக வேலை செய்யாமல் தங்களின் சொந்த நிலத்தைப் போல் நினைத்து பணியாற்றுகிறார்கள். 100 நாள் வேலை முடிந்த பிறகு கிடைக்கும் நேரத்தைக்கூட இங்குதான் செலவிடுகின்றனர். அந்தளவிற்கு ஒற்றுமையாகவும், கூட்டாகவும் சேர்ந்து விவசாயம் செய்கிறார்கள். இதைப் பார்த்து பல்வேறு தரப்பில் இருந்து பாராட்டுகள் குவிந்து வருகிறது.
இந்தக் கூட்டு முயற்சியில் மிகவும் முக்கியமானவர் துரை என்கிற நபர்தான். அவரை எங்கள் பகுதியில் பசுமை துரை என்றுதான் அழைப்பார்கள். அந்தளவிற்கு விவசாயத்தின் மீது ஆர்வம் உடையவர். இன்று வரை ஊராட்சி வயலில் எல்லா பணிகளையும் செய்து வருபவர் அவர்தான். சின்ன வெங்காயத்திற்கு வாரத்திற்கு 2 முறை பாசனம் செய்வோம். இதற்கு தேவையான தண்ணீரை ஊராட்சிக்கு சொந்தமான போர்வெல்லில் இருந்துதான் எடுக்கிறோம். இந்த தண்ணீர் பகலில் மக்களுக்கு பயன்படும் என்பதால் இரவில் மட்டும் பாசனம் செய்கிறோம். இரவில் விழித்திருந்து வயலுக்கு தண்ணீர் கொடுப்பதும் இந்த பசுமை துரைதான். அந்தளவிற்கு விவசாயத்தின் மீது அக்கறை உள்ளவர்.
அறுவடையில் கிடைத்த சின்ன வெங்காயத்தை கிட்டாம்பாளையம் ஊராட்சியைச் சேர்ந்த கிட்டாம்பாளையம், குளத்துப்பாளையம், வினோபா நகர் பொதுமக்களுக்கு வீதி வீதியாக சென்று மலிவு விலையில் விற்பனை செய்கிறோம். குறைந்த விலைக்கு தரமான வெங்காயம் கிடைப்பதால் பொதுமக்கள் மத்தியில் இதற்கு நல்ல வரவேற்பு இருக்கிறது. இதனால் அறுவடை செய்யும் இடத்திற்கே வந்து பலர் சின்ன வெங்காயம் வாங்கி செல்கிறார்கள். இந்த விலைகுறைப்பு பொதுமக்களுக்கு பயனுள்ளதாக இருக்கிறது. ஊராட்சி மூலம் உற்பத்தி செய்து குறைந்த விலையில் சின்ன வெங்காயம் விற்பனை செய்வது பொதுமக்கள் மத்தியில் நல்ல பெயரைக் கொடுத்திருக்கிறது. மேலும், இதன்மூலமாக கிடைக்கும் வருமானம் ஊராட்சி நிர்வாகத்திற்கு அடிப்படை பணிகளை செயல்படுத்த உதவிகரமாக இருக்கிறது. இதைதொடர்ந்து பச்சை மிளகாய், நிலக்கடலை ஆகியவை விளைச்சல் வந்தபிறகு அவற்றையும் ஊர் மக்களுக்கு மலிவு விலையில் விற்பனை செய்ய திட்டமிட்டு வருகிறோம்.
இந்த மொத்த விவசாயத்திற்கும் நிலம் தயாரிப்பில் இருந்து உரம், மருந்து என அனைத்திற்கும் ரூ.65 ஆயிரம் வரை செலவாகி இருக்கிறது. இதனை எனது சொந்த செலவில்தான் செய்தேன். ஊர்மக்கள் ஒன்றாக சேர்ந்து ஒரு விசயத்தை செய்யும்போது அதற்காக செலவிடும்போது எவ்வளவு வேண்டுமானாலும் கொடுக்கலாம். அதே நேரத்தில் இந்த மகசூலின் மூலம் கிடைக்கும் வருவாயை ஊராட்சியின் நலத்திட்டங்களுக்கே பயன்படுத்த திட்டமிட்டு இருக்கிறோம். இதையடுத்து, வருடம் முழுவதும் பலன் தரும் வகையில் எலுமிச்சை நடவு செய்ய இருக்கிறோம். இங்குள்ள நாட்டு எலுமிச்சை காய்கள் வருடத்திற்கு ஒருமுறை தான் காய்க்கும் என்பதால், ஆந்திராவில் இருந்து ‘பாலாஜி’ என்ற நவீன ரக நாற்றுகளை பயிரிட முடிவெடுத்து இருக்கிறோம். இதற்காக சுமார் 400 நாற்றுகள் வாங்கி இருக்கிறோம். 5 மீட்டருக்கு ஒரு செடி என்ற அடிப்படையில் விரைவில் நடவு செய்ய உள்ளோம். இந்த ரக செடிகள் வருடம் முழுவதும் காய்க்கும் தன்மை கொண்டது. இதற்கிடையில் ஊடுபயிராக தர்பூசணி நடவு செய்ய திட்டமிட்டு வருகிறோம். தொடர்ந்து விவசாயத்திற்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையிலான நடவடிக்கைகளில் பொதுமக்களுடன் இணைந்து செயல்பட இருக்கிறோம்’’ என மகிழ்ச்சியோடு பேசி
முடித்தார்.
தொடர்புக்கு:
சந்திரசேகர்- 98422 55685
மக்களுக்கு மலிவு விலை வெங்காயம்
இங்கு பயிரிடப்பட்டுள்ள சின்ன வெங்காயம் அறுவடை செய்யப்பட்டு, ஊராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு மலிவு விலையில் வேன் மூலம் வீடுகளுக்கு கொண்டு சென்று விற்பனை செய்யப்படுகிறது. கடைகளில் ஒரு கிலோ ரூ.60க்கு விற்பனை செய்யப்படுகிற சின்ன வெங்காயத்தை எங்கள் ஊராட்சிக்கு உட்பட்ட பொதுமக்களுக்கு ஒரு கிலோ ரூ.40க்கும், 2.5 கிலோ ரூ.100க்கும் விற்பனை செய்கிறோம். கடந்த மூன்று நாட்களில் சுமார் ஒரு டன் அளவிலான சின்ன வெங்காயம் விற்பனையாகி இருக்கிறது. தொடர்ந்து ஆர்டர்கள் வந்து கொண்டிருக்கிறது. மேலும் 20 கிலோ வாங்கும் நபர்களின் வீடுகளுக்கே கொண்டு சென்று சப்ளை செய்கிறோம். இந்த வெங்காயத்தை மொத்த வியாபாரிகள் 48 ரூபாய்க்கு கேட்டும் அவர்களுக்கு கொடுக்கவில்லை. மலிவான விலையில் நேரடியாக மக்களுக்கு சென்றடைய வேண்டும் என்ற நோக்கத்திலேயே இதனை செய்து வருகிறோம் என்கின்றனர் கிட்டாம்பாளையம்வாசிகள்.
ரசாயன உரம்
இப்போது ரசாயன முறையில் விவசாயம் செய்தாலும், அடுத்த முறை இயற்கை முறையில் விவசாயம் செய்வோம் என்கிறார்கள் கிட்டாம்பாளையம் மக்கள். “முதல்முறையாக கூட்டுமுயற்சியில் விவசாயம் செய்து வருகிறோம். இந்த விவசாயத்தை இயற்கை முறையில் செய்ய வேண்டும் என்றுதான் ஆசை இருந்தது. ஆனால், இயற்கை முறை விவசாயம் செய்ய மண் நன்றாக விவசாயத்திற்கு பழக்கப்பட்டிருக்க வேண்டும். எடுத்த எடுப்பில் இயற்கை விவசாயம் செய்தால் விளைச்சல் குறைவாக வந்துவிடும். அப்படி குறைவான விளைச்சலைப் பார்த்து ஊர்மக்கள் தொய்வடையக் கூடாது என்பதற்காக இந்தமுறை ரசாயன உரம் பயன்படுத்திதான் விளைச்சல் எடுத்திருக்கிறோம். இந்த விவசாயம் தொடர் செயல்பாடாக நடக்கும் பட்சத்தில் அடுத்தமுறை இயற்கை முறையில் விவசாயம் செய்வோம்’’ என்கிறார்கள்.