திருச்சி முக்கொம்பு செல்லும் சாலையில் அமைந்திருக்கிறது எட்டரை எனும் எழில்மிகு கிராமம். காவிரி ஆறு பாயும் இந்தச் சிற்றூரைச் சுற்றியுள்ள வயல்வெளிகள் எப்போதும் பசுமை போர்த்தி நிற்கின்றன. வாழை, நெல் உள்ளிட்ட பயிர்கள் இப்பகுதியை வளமாகவே வைத்திருக்கின்றன. இந்தப் பகுதிக்கு இன்னொரு ஸ்பெஷலும் இருக்கிறது. மலர் விவசாயம்தான் அது. எட்டரை பகுதியில் இருந்து இடதுபுறம் செல்லும் சாலையில் பயணித்தால், சாலையின் இருபுறமும் மல்லி, முல்லை, ரோஜா என வகை வகையான மலர்த்தோட்டங்கள் வரிசை கட்டி நிற்கின்றன. குறிப்பாக போசம்பட்டி என்ற கிராமத்தில் பெரும்பாலான வயல்கள் மலர்த்தோட்டங்களாகவே காட்சியளிக்கின்றன. ரோஜா, மல்லி தோட்டங்களுக்கு இடையே இந்த ஊரில் மாசிப்பச்சை செடிகளும் மணம் பரப்புகின்றன.மாலைகளுக்கு நடுவே பச்சை நிறத்திற்காக வைத்து கட்டப்படும் ஒரு அழகிய இலைதான் மாசிப்பச்சை. இதை சில பகுதிகளில் மாசி பத்திரி என்றும் அழைக்கிறார்கள். ரோஜா, சம்பங்கி மாலைகளுக்கு இடையே இந்த மாசிப்பச்சையை வைத்து கட்டினால் மாலைக்கு மேலும் மவுசு கூடும்.
போசம்பட்டி கிராமத்தில் மாசிப்பச்சை சாகுபடியில் நல்ல அனுபவம் கொண்ட விவசாயியைத் தேடியபோது ராஜேந்திரன் பெரியண்ணன் என்ற விவசாயியைச் சந்திக்க முடிந்தது. ரோஜாத் தோட்டத்திற்கும், மாசிப்பச்சை தோட்டத்திற்கும் இடையே மாறி மாறி சென்று பராமரிப்புப்பணிகளைச் செய்தவாறே நம்மிடம் பேச ஆரம்பித்தார். “இரண்டரை ஏக்கர் நிலம் இருக்கிறது எங்களிடம். அரை ஏக்கரில் பன்னீர் ரோஸ் பயிரிட்டிருக்கிறேன். அரை ஏக்கரில் குண்டு மல்லியும், அரை ஏக்கரில் மாசிப்பச்சையும் வைத்திருக்கிறேன். மீதமுள்ள இடங்களில் நெல், பொறியல் தட்டை உள்ளிட்ட பயிர்களை விளைவிக்கிறேன். ரோஜா, செவ்வந்திமாலைகளுக்கு இடையே மாசிப்பச்சையை வைத்து கட்டினால் மாலை பார்ப்பதற்கு அழகானதாக இருக்கும்.
மாசிப்பச்சையை சாகுபடி செய்ய முதலில் நிலத்தை நன்றாக இரண்டு முறை உழவு செய்வோம். பின்பு 9 கலப்பை கொண்டு 2 சால் ஓட்டுவோம். மணல் சாரி என்றால் 2 ஏர் போதும். கட்டியான நிலம் என்றால் 4 உழவு ஓட்டலாம். கடைசி உழவின்போது 6 டிப்பர் தொழுவுரத்தை நிலத்தில் கொட்டுவோம். அதன்பிறகு ரொட்டோவேட்டர் வைத்து ஓட்டி, மண்வெட்டி வைத்து நிலத்தை சமப்படுத்துவோம். நிலத்தில் தண்ணீர் தேங்காதவாறு பார்த்துக்கொள்ள வேண்டும். வேர் ஓடும் வரை தண்ணீர் தேங்கக்கூடாது. நிலத்தை சமப்படுத்திய பிறகு தண்ணீர் பாய்ச்சி ஒரு அங்குல இடைவெளிகளில் மாசிப்பச்சை செடிகளை நடுவோம்.
இந்தப் பகுதியில் செவல் மண் நிறைந்திருப்பதால் நடவு செய்த பிறகு ஒருநாள் விட்டு மீண்டும் பாசனம் செய்வோம். அதன்பிறகு 2 நாள் விட்டு பாசனம் செய்வோம். 8வது நாளில் செடிகள் நன்றாக தழைந்து வந்திருக்கும். அதில் இருந்து வாரம் ஒருமுறை பாசனம் செய்வோம். 8வது நாளில் கீரோகிராம் (16 லிட்டர் டேங்குக்கு 20 மிலி), சைட்டோசைம் (16 லிட்டர் டேங்குக்கு 50 மிலி) மருந்துகளைக் கலந்து ஸ்பிரே செய்வோம். அரை ஏக்கரில் தெளிக்க 15 டேங்க் வரை ஆகும். 10வது நாளில் 50 கிலோ டிஏபி உரத்தை இடுவோம். களை வரும்போது கைக்களையாக அகற்றுவோம். அவ்வளவுதான் இதில் பராமரிப்பு வேலை. வேறு எதுவும் பெரிய அளவில் இருக்காது.
சரியாக 20 அல்லது 25வது நாளில் இருந்து மாசிப்பச்சையை அறுவடை செய்ய ஆரம்பிக்கலாம். அதாவது தரையில் இருந்து ஒரு அங்குலம் விட்டு விட்டு கீரை அறுப்பது போல அறுப்போம். அதை ஒரு கைப்பிடி அளவுக்கு கட்டாக கட்டி விற்பனைக்கு அனுப்புவோம். ஒரு கட்டு 300 முதல் 400 கிராம் வரை எடை இருக்க வேண்டும். மாசிப்பச்சை அறுவடையைப் பெரும்பாலும் மாலை நேரங்களில்தான் செய்வோம். அப்போதுதான் அறுவடை செய்து கட்டாக கட்டி மறுநாள் காலையில் விற்பனைக்குஎடுத்துச் செல்ல முடியும். நாங்கள் திருச்சி காந்தி மார்க்கெட் மற்றும் ரங்கம் மார்க்கெட்டுகளுக்கு எடுத்துச் சென்று விற்பனை செய்வோம். வெளியூர்களில் இருந்து மாசிப்பச்சையை வாங்கிச் செல்வதற்காக வியாபாரிகள். திருச்சியில் உள்ள கமிஷன் ஏஜெண்டுகள் எங்களிடம் இருந்து வாங்கி வியாபாரிகளுக்கு விற்பனை செய்வார்கள். சில ஊர்களுக்கு பார்சல் அனுப்பி விடுவார்கள். மாலை கட்டும் வேலை காலையிலேயே இருக்கும் என்பதால் அதிகாலை 4.30, 5 மணிக்கெல்லாம் மார்க்கெட்டில் நாம் இருக்க வேண்டும். அங்கு ஒரு கட்டு ரூ.2 முதல் 10 வரை விலை போகும். சராசரியாக ரூ.6 கிடைக்கும்.
மாசிப்பச்சையை தினமும் அறுவடை செய்து விற்பனைக்கு எடுத்துச்செல்வோம். ஒரு நாளைக்கு ஒரு சென்ட் நிலத்தில் அறுவடை செய்தாலே போதும். 300 கட்டுகள் வரை கிடைக்கும். அடுத்த நாளில் அடுத்த ஒரு சென்டில் அறுவடை எடுக்கலாம். இதுபோல் தொடர்ச்சியாக அறுவடை எடுக்கலாம். ஒரு நாளைக்கு குறைந்தது 100 கட்டுகள் வரை அறுவடை செய்வோம். அதை ரூ.6 என்ற விலையில் விற்கும்போது தினமும் ரூ.600 வருமானமாக கிடைக்கும். நாங்கள் குண்டுமல்லி, ரோஸ் உள்ளிட்ட மலர்களுடன் இதையும் எடுத்துச்சென்று விற்பனை செய்வோம். அதில் இந்த வருமானம் எங்களுக்கு உதிரி வருமானம்தான். மாதத்திற்கு ரூ.18 ஆயிரம் பார்க்கலாம். இதில் பராமரிப்பு, கமிஷன், வாகன செலவு என ரூ.5 ஆயிரம் போக 13 ஆயிரம் லாபமாக கிடைக்கும்’’என்கிறார்.
தொடர்புக்கு:
ராஜேந்திரன் பெரியண்ணன்:
78128 27873.