வழக்கமாக மே மாதம் முழுவதும் கோடை வெயில் வாட்டி எடுக்கும். ஜூன் தொடங்கியும் வெயிலின் கொடுமை தொடர்ந்தபடி இருக்கும். சில நாட்கள் கடந்த பிறகே வருண பகவான் கருணை காட்டுவார். ஆனால் இந்த ஆண்டு இந்த நிலை தலைகீழாக மாறிவிட்டது. பருவமழை முன்கூட்டியே தொடங்கிவிட்டது. வழக்கம்போல ஜூன் மாதத்தில் இருந்து விவசாயப் பணிகளைத் தொடங்கலாம் என நினைத்திருந்த விவசாயிகளுக்கு முன்கூட்டியே பணிகளைத் தொடங்கலாம் என சிக்னல் கிடைத்திருக்கிறது. எதிர்பார்க்காத நேரத்தில் வாராது வந்த மாமணியைப் போல் வந்த இந்தப் பருவமழையைப் பயன்படுத்தி என்னென்ன செய்யலாம்? என யோசிப் பவர்களுக்காக ஒரு சின்ன டேட்டா.
இந்திய விவசாயத்தில் இந்தப் பருவம் ஒரு முக்கியமான பருவம். அதாவது காரீப் பருவம் என்று சொல்லப்படுகிற மே மாதம் தொடங்கி ஜனவரி வரையிலான சாகுபடிப் பருவம். இதில் குறிப்பாக ஜூன் மாதத்தில் தொடங்கி அக்டோபர் வரையிலான சாகுபடி சிறப்பாகவே இருக்கும். அதாவது தென்மேற்குப் பருவமழை தொடங்கும் காலத்தில் சாகுபடியைத் தொடங்கலாம். அதேபோல பருவமழையின் கடைசி மாதங்களான அக்டோபர்-நவம்பர் சீசனில் நாம் அறுவடையை மேற்கொள்ளலாம்.
எந்த சீசனில் என்ன நடக்கும்?
ஜூன் – ஜூலை மாதங்களில் பெய்யும் முதல் மழைக்குப் பிறகு விதைப்பு தொடங்கும். செப்டம்பர்-அக்டோபரில் அறுவடை செய்யப்படும். இந்த இடைப்பட்ட காலங்களில் பயிர் வளர்ந்து சிறப்பான விளைச்சலைக் கொடுக்க சுமார் ஒரு டன் தண்ணீரும், வெப்பமான காலநிலையும் தேவை. இந்த சமயத்தில் அரிசி, பருத்தி, பருப்பு வகைகள், சோளம், நிலக்கடலை, கரும்பு, மஞ்சள் போன்ற பயிர்கள் சிறப்பாக வளரும். இந்தக் காலகட்டத்தில் சாகுபடி செய்யப்படும் பயிர்களுக்குப் போதுமான அளவு தண்ணீர் வழங்கப்படுவதை உறுதி செய்வது மிகவும் அவசியம். தீவிர மழைப்பொழிவு பயிர் வளர்ச்சியைத் தடுத்து விடும் அபாயமும் உண்டு. அதிலும் சில இடங்களிலும் விழும் ஆலங்கட்டி மழை குறிப்பிடத்தக்க விவசாய சேதத்தை ஏற்படுத்தும். வலுவாக விழும் ஆலங்கட்டி மழையால், மழைக்கால பயிர்கள் கடுமையான சேதத்தை எதிர்கொள்ள வேண்டியிருக்கும். பொருத்தமற்ற வானிலையும், பருவமழையும் பயிர்களின் வளர்ச்சியில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். அதற்கேற்றவாறு நாம் பயிர்களைச் சாகுபடி செய்ய வேண்டும்.