புதுடெல்லி: விவசாயிகள் போராட்டத்தை இழிவுபடுத்தும் வகையில் பேசிய பாஜ எம்பியும் நடிகையுமான கங்கனா ரனாவத்துக்கு அக்கட்சி கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இமாச்சல் பிரதேசத்தின் மண்டி தொகுதி எம்பியும் பாலிவுட் நடிகையுமான கங்கனா ரனாவத் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றின் வீடியோவை தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டார். அதில் அவர், ‘‘விவசாயிகள் போராட்டம் நடந்த போது, நாட்டின் தலைமை மட்டும் வலுவாக இல்லாமல் இருந்திருந்தால், வங்கதேசத்தில் ஏற்பட்ட சூழல் இந்தியாவில் வெடித்திருக்கும். வேளாண் சட்டங்களை எதிர்த்து டெல்லியில் விவசாயிகள் போராட்டம் நடத்திய போது அதில் பல குற்றங்கள் நடந்தன. பலர் கொலை செய்யப்பட்டு, உடல்கள் தூக்கில் தொங்கவிடப்பட்டன. பல பெண்கள் பலாத்காரம் செய்யப்பட்டனர். இந்த போராட்டத்தின் பின்னணியில் சீனா, அமெரிக்காவின் சதி உள்ளது’’ என கூறி உள்ளார்.
இந்த வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி பெரும் சர்ச்சையை கிளப்பியது. இந்நிலையில், கங்கனாவின் கருத்துக்கும் கட்சிக்கும் எந்த சம்மந்தமும் இல்லை என்று பாஜ நேற்று விளக்க அறிக்கை வெளியிட்டது. அக்கட்சியின் அறிக்கையில், ‘விவசாயிகள் போராட்டம் குறித்த பாஜ எம்பி கங்கனாவின் கருத்து கட்சியின் கருத்தல்ல. அக்கருத்துடன் பாஜ உடன்படவில்லை. கட்சியின் கொள்கை சார்ந்த விஷயங்களில் கருத்து தெரிவிக்க கங்கனாவுக்கு எந்த அங்கீகாரமும் கட்சி தரவில்லை. எனவே எதிர்காலத்தில் இதுபோன்ற எந்த கருத்தையும் வெளியிடக் கூடாது என எச்சரித்து உள்ளது. பாஜவை பொறுத்த வரையில் சமூக நல்லிணக்கத்தை பின்பற்றுவதில் உறுதியாக உள்ளது’ என கூறப்பட்டுள்ளது. இதற்கு முன், போராட்டம் நடத்திய விவசாயிகளை தீவிரவாதிகள் என கங்கனா குறிப்பிட்டுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த சிஐஎஸ்எப் பெண் அதிகாரி ஒருவர் சண்டிகர் விமான நிலையத்தில் கங்கனாவின் கன்னத்தில் அறைந்த விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தியது.
* அரியானா தேர்தலால் பின்வாங்குகிறது பாஜ
காங்கிரஸ் சமூக ஊடக தலைவரும் செய்தித் தொடர்பாளருமான சுப்ரியா ஷ்ரினேட் கூறுகையில், ‘‘அரியானா சட்டப்பேரவை தேர்தல் நெருங்கி விட்டது. எப்படியும் இம்முறை பாஜ ஆட்சியை இழக்கப் போவது உறுதி. இப்படிப்பட்ட சூழலில் தேர்தலை கருத்தில் கொண்டு தான் கங்கனாவின் கருத்துடன் உடன்படவில்லை என பாஜ பின்வாங்குகிறது. இது பாஜவின் கருத்து இல்லை என்றால், கங்கனாவை கட்சியில் இருந்து நீக்க வேண்டும். மேலும், நாட்டின் உறுதியற்ற நிலையை உருவாக்க அமெரிக்காவும் சீனாவும் சதி செய்வதாக எம்பி கங்கனா கூறியது குறித்தும் ஒன்றிய பாஜ அரசு தெளிவுபடுத்த வேண்டும்’’ என்றார்.
* விவசாயிகள் கண்டனம்
அகில இந்திய கிசான் சபா விவசாயிகள் சங்கம் வெளியிட்ட அறிக்கையில், ‘பாஜ எம்பி கங்னாவின் கருத்து கடும் கண்டனத்திற்குரியது. இது குறித்து பிரதமர் மோடி கட்டாயம் மன்னிப்பு கேட்க வேண்டும். இந்த விவகாரத்தை உச்ச நீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரித்து தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என வலியுறுத்தி உள்ளது.