பொள்ளாச்சி: பொள்ளாச்சி சுற்றுவட்டாரத்தில், தென்மேற்கு பருவமழை எதிர்பார்த்த அளவில் இல்லாமல் பொய்த்து போயுள்ளது. இதனால் சொட்டுநீர் பாசனம் அமைக்கும் பணியில் பயிரிட விவசாயிகள் தயாராகி வருகின்றனர். கோவை மாவட்டம், பொள்ளாச்சி சுற்றுவட்டார கிராமங்களில் காய்கறி சாகுபடி அதிகளவில் நடக்கிறது. பருவமழை காலங்களிலும், கோடை மழை காலங்களிலும், விவசாயிகள் தங்கள் நிலத்தை உழுது காய்கறி பயிரிட்டு குறிப்பிட்ட காலகட்டத்தில் அறுவடை மேற்கொள்கின்றனர். இருப்பினும், மழை இல்லாத காலங்களில், விவசாயிகள் தங்கள் விளை நிலங்களில் காய்கறிகள் பயிரிடுவதை தொடர முடியாத நிலை உருவாகிறது. நடப்பாண்டில் ஏப்ரல் மற்றும் மே மாதத்தில் சிலநாட்கள் மட்டுமே கோடை மழை பெய்தது. ஜூன் முதல் வாரத்தில் இருந்து தென்மேற்கு பருவ மழை பெய்யும் என்று விவசாயிகள் நம்பினர்.
ஆனால் அந்த மழை சுமார் ஒரு மாதம் கால தாமதமாகி, ஜூலை மாதம் துவக்கத்தில் இருந்தே பெய்ய ஆரம்பித்தது. ஆனால், ஒவ்வொரு ஆண்டும் சில மாதங்கள் தொடர்ந்து பெய்யும் தென் மேற்கு பருவமழையானது, இந்த ஆண்டில் சில வாரங்கள் மட்டுமே தொடர்ந்தது. கடந்த ஒரு மாதமாக மீண்டும் வெயிலின் தாக்கமே காணப்பட்டது. இந்த நிலையே தற்போதும் நீடிக்கிறது. கடந்த ஆண்டு இதே நேரத்தில், அடுத்தடுத்து பெய்த பருவமழையால், விவசாய நிலங்களில் ஈரப்பதம் அதிகரித்தது. இதனால் அனைத்து வகை காய்கறிகள் பயிரிடுவதற்கு எளிதாக இருந்தது. ஆனால் இந்த ஆண்டில் தென்மேற்கு பருவமழை போதிய அளவு இல்லாததால், மீண்டும் வறட்சியை நோக்கி செல்வதுபோல் உள்ளது. இதனாலே, விவசாயிகள் பலர் தங்கள் விளைநிலங்களை உழுது, சொட்டு நீர் மூலம், காய்கறி மற்றும் மானாவாரி பயிர்களை பயிரிடுகின்றனர்.
இருப்பினும், விவசாயிகள் காய்கறி பயிரிடுவதற்கு வசதியாக, வேளாண்மை தோட்டக்கலைத்துறை சார்பில் மானியத்தில் சொட்டு நீர் பாசன வசதி ஏற்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளது. அதன்படி நுண்ணூட்ட பாசன திட்டத்தில், சிறு, குறு விவசாயிகளுக்கு தோட்டக்கலை பயிர்கள் வாழை, கோ-கோ, மா மற்றும் மா நடவு மற்றும் காய்கறி சாகுபடி செய்ய மானியம் வழங்கப்படுகிறது. சொட்டு நீர் பாசனத்தில் மானியம் பெற விரும்பும் விவசாயிகள், உரிய ஆவணங்களை, அந்தந்த வட்டார தோட்டக்கலைத்துறை அலுவலகத்தில் பதிவு செய்ய வேண்டும் எனவும் வேளாண் அதிகாரிகள் தெரிவித்தனர்.