சூலூர்: கோவை மாவட்டம் சூலூரில் இந்திய விமானப்படை தளம் அமைந்துள்ளது. சூலூர் காங்கேயம் பாளையம் பகுதியில் அமைந்துள்ள விமானப்படை தளத்தைச் சுற்றிலும் பல ஏக்கரில் விளை நிலங்கள் உள்ளன. இதில் தென்னை மரங்கள் உள்ளிட்ட பயிர்கள் வளர்க்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் சூலூர் காடம்பாடி பகுதியில் விமான நிலையத்திற்கு வரும் விமானங்கள் தரையிறங்கும் பகுதிகளில் அதிக உயரம் கொண்ட தென்னை மரங்கள் வளர்ந்து உள்ளது. இதனால் விமானம் தரை இறங்க இடையூறாக இருப்பதாக விமான படைத்தளத்தின் சார்பாக தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்திருந்தனர்.
அதன் பேரில் காடம்பாடி பகுதியிலுள்ள கோரத்தோட்டம் என்ற பகுதியில் விவசாயிக்கு ஒருவருக்கு சொந்தமான 10 தென்னை மரங்களை வெட்ட முடிவு செய்து வருவாய்த்துறை சார்பாக நோட்டீஸ் வழங்கப்பட்டிருந்தது. அதைத்தொடர்ந்து மரங்களை வெட்ட இழப்பீடு தர வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்து மரங்களை வெட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். இது தொடர்பாக சூலூர் வட்டாட்சியர் தனசேகரன் மற்றும் போலீசார் முன்னிலையில் நேற்று விவசாயிகளுடன் பேச்சுவார்த்தை நடைபெற்றது.
இதில் விவசாயிகளின் தரப்பில் ஒரு தென்னை மரத்திற்கு ஒரு லட்சம் ரூபாய் இழப்பீடாக வழங்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டது. தொடர் பேச்சுவார்த்தையில் ஒரு தென்னை மரத்திற்கு 89 ஆயிரம் ரூபாய் தருவதாக முடிவு செய்து ஆறு மாத காலங்களுக்குள் தென்னை மரங்களுக்கான இழப்பீட்டுத் தொகையை வழங்குவது என வட்டாட்சியர் உறுதி அளித்ததின் பேரில் விவசாயிகள் தென்னை மரங்களை வெட்டுவதற்கு ஒப்புக் கொண்டனர். அதன் பேரில் விமான படைத்தளத்தில் விமானம் இறங்குவதற்கு இடையூறாக உள்ள 10 தென்னை மரங்கள் உடனடியாக அகற்றப்பட உள்ளன.