சென்னை: தமிழ்நாட்டில் இந்தாண்டு 9,21,332 விவசாயிகளுக்கு ரூ.7,600 கோடி பயிர்க் கடன் வழங்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டுடன் ஒப்பிடும்போது ரூ.848 கோடி கூடுதலாக கடன் வழங்கப்பட்டுள்ளதாக கூட்டுறவுத்துறை தெரிவித்துள்ளது. கூட்டுறவு வங்கிகள் மூலம் தமிழ்நாட்டில் ரூ.16,500 கோடி பயிர்க் கடன் வழங்க திட்டமிடப்பட்டு, இதுவரை 9,21,332 விவசாயிகளுக்கு ரூ.7,600 கோடி அளவிற்கு பயிர்க் கடன் வழங்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டில் இதே காலத்தில் வழங்கியதைக் காட்டிலும் கூடுதலாக ரூ.848 கோடி அளவிற்கு பயிர்க் கடன் வழங்கப்பட்டுள்ளது. பயிர்க் கடனை துரிதமாக வழங்கி, குறியீட்டினை எய்திட அறிவுறுத்தப்பட்டது.
இவ்வாறு பயிர்க் கடன் பெற்றுள்ள விவசாயிகள் உரிய காலக் கெடுவிற்குள் கடனை திருப்பிச் செலுத்தும் வகையில், 7 வட்டி ஊக்கத் தொகையை முழுவதுமாக தமிழ்நாடு அரசே ஏற்றுக் கொண்டு விவசாயிகளுக்கு வழங்கி வருகிறது. வேளாண் பெருமக்களுக்கு அனைத்து வகையான சேவைகளை அளித்திடும் வகையில், தொடக்க வேளாண்மைக் கூட்டுறவு கடன் சங்கங்களை பல்நோக்கு சேவை மையங்களாக மாற்றும் திட்டத்தின்கீழ் பவர்டில்லர், டிராக்டர் மற்றும் விவசாய உள்ளிட்ட உபகரணங்கள் வாங்குவதற்கும், சேமிப்புக் கிடங்குகள் கட்டுவதற்கும் என மொத்தம் 5,018 திட்டங்களுக்கு சுமார் ரூ.460.64 கோடி விடுவிக்கப்பட்டுள்ளது.
கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை செயலாளர் கோபால், தமிழ்நாடு மாநிலத் தலைமைக் கூட்டுறவு வங்கியின் தலைமையகத்திற்கு கூட்டுறவுச் சங்கங்களின் பதிவாளர் சுப்பையன் ஆய்வு மேற்கொண்டனர். பின்னர் வங்கி உயர் அலுவலர்களுக்கு பல்வேறு அறிவுரைகள் வழங்கினர். தேசிய ஊனமுற்றோர் நிதி மற்றும் மேம்பாட்டுக் கழகத்தின் தமிழ்நாடு மாநிலத்தின் முகமை அமைப்பாக 2002ம் ஆண்டிலிருந்து செயல்பட்டு, மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிகள் மாற்றுத் திறனாளிகளுக்கு வழங்கிய பல்வேறு வகைக் கடன்களுக்காக மறுநிதியுதவி வழங்கி வருகிறது.
இத்திட்டத்தினை சிறந்த முறையில் செயல்படுத்தியமைக்காக 2005-06ம் ஆண்டில் தேசிய விருதும், 2006-07, 2008-09, 2013-14 மற்றும் 2018-19ம் ஆண்டுகளுக்கான குடியரசு தலைவரால் வழங்கப்பட்ட சிறந்த முகமை அமைப்புக்கான தேசிய விருதினையும் தலைமை வங்கி பெற்றுள்ளது. தலைமை வங்கி மாநில அரசின் பல்வேறு நலத்திட்டங்களை சிறப்பாகச் செயல்படுத்தி வருகிறது. தமிழ்நாடு அரசால் அறிவிக்கப்பட்ட கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தின்கீழ் தலைமை வங்கி மற்றும் மத்திய கூட்டுறவு வங்கிகளில் மொத்தம் 8,07,000 மகளிருக்கு மாதந்தோறும் ரூ.1,000 வீதம் வழங்கி வருகிறது.
பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், பட்டியலினத்தவர், சிறுபான்மையோர் ஆகியோர்களுக்கும், மாற்றுத் திறனாளி, மகளிர், சிறுவணிகர், பணிபுரியும் மகளிர் ஆகியோர்களுக்கான கடன் திட்டங்கள், வீடு கட்டக் கடன், அடமானக் கடன்கள் மற்றும் நுகர்வோர் கடன்கள் மட்டுமல்லாது நகைக் கடன்களை தலைமை வங்கி வழங்குவதுடன், தமிழகத்தின் அனைத்துக் கூட்டுறவு நிறுவனங்கள் மூலம் கடன் வழங்கிட நிதியுதவி செய்து வருகிறது. தலைமை வங்கியின் வழிகாட்டுதலின் மூலமும், நிதியுதவியின் மூலமும் தமிழகத்தில் உள்ள அனைத்து 23 மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிகளும் லாபத்தில் இயங்கி வருகிறது.
இந்நிலையில் தமிழ்நாடு மாநிலத் தலைமைக் கூட்டுறவு வங்கியின் தலைமையகத்தில் கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை செயலாளர் கோபால், கூட்டுறவுச் சங்கங்களின் பதிவாளர் சுப்பையன் ஆகியோர் ஆய்வு மேற்கொண்டனர். பின்னர் வங்கி உயர் அலுவலர்களுக்கு பல்வேறு அறிவுரைகள் வழங்கினர். இந்த ஆய்வின்போது சிறப்பு பணி அலுவலர் சிவன்அருள், தமிழ்நாடு மாநிலத் தலைமைக் கூட்டுறவு வங்கியின் மேலாண்மை இயக்குநர் லோகநாதன், பொது மேலாளர் காவேரி மற்றும் வங்கியின் அனைத்து உயர் அதிகாரிகளும் உடனிருந்தனர்.