செங்கல்பட்டு: செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் விவசாயிகள் நலன் காக்கும் நாள் கூட்டம் மாவட்ட வருவாய் அலுவலர் சுபாநந்தினி தலைமையில் நேற்று முன்தினம் நடைபெற்றது. இதில், செங்கல்பட்டு மாவட்ட விவசாயிகள் ஏராளமானோர் கலந்து கொண்டு, சாகுபடிக்கு தேவையான அளவு விதைகள், உரங்கள், பூச்சி மருந்துகள் கிடைக்கவில்லை வேளாண்மை விரிவாக்க மையங்களில் போதுமான இறுப்பு இல்லை. இதற்கு உடனடியாக சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவேண்டும்.
வேளாண்மை வாடகை இயந்திரங்கள் அனைத்து விவசாயிகளுக்கும் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். விளை நிலங்களை அழிக்கும் காட்டுப்பன்றிகள் ஒழிக்க பன்றி விரட்டி மருந்துகளை அனைத்து விவசாயிகளுக்கும் எளிதில் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பேசினர். பலர் கூட்டத்தில் கோரிக்கை மனு அளித்தனர். இதில், மாவட்ட வன அலுவலர் ரவிமீனா ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் இந்து பாலா, வேளாண்மை இணை இயக்குநர் அசோக், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) (பொ) தேன்மொழி, கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் தமிழ்செல்வி, மதுராந்தகம் கூட்டுறவு சர்க்கரை ஆலை மேலாண்மை இயக்குநர் ஜவஹர் பிரசாத் ராஜ், வேளாண் விற்பனை மற்றும் வணிக துறை துணை இயக்குநர் ரவிக்குமார், புள்ளியியல் துறை உதவி இயக்குநர் ஜெயந்தி, கூடுதல் காவல் கண்காணிப்பாளர் வேல்முருகன், வேளாண்மை பொறியியல் துறை உதவி செயற்பொறியாளர் தமிழ்ச்செல்வன், விவசாயிகள் மற்றும் அரசு அலுவலர்கள் பங்கேற்றனர்.