தமிழக வேளாண் துறை சார்பில் உழவர்களுக்காக பல்வேறு நலத்திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அதன்படி தற்போது வேளாண் பணிகளுக்காக ட்ரோன் வாங்க மானியம் வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.“சென்னை நீங்கலாக, அனைத்து மாவட்டங்களுக்கு மானிய விலையில் வேளாண் இயந்திரங்கள் வழங்குதல், வாடகைக்கு இயந்திரங்கள் வழங்கும் மையங்கள் அமைத்தல் போன்ற பணிகளுக்காக முதல் கட்டமாக ரூ.50 கோடி செலவில் செயல்படுத்தப்பட்டது. தற்போது இரண்டாம் கட்டமாக ரூ.70 கோடி விடுவிக்கப்பட்டுள்ளது.பயிர்களுக்கு பூச்சி மருந்து தெளித்தல், பூச்சி, நோய் கண்காணித்தல் போன்ற நவீன வேளாண் கருவிகள் மானியத்தில் வழங்கப்படுகின்றன. நடப்பாண்டில் பயிர்களுக்கு பூச்சி மருந்து தெளித்தல் உள்ளிட்ட பணிகளுக்காக ட்ரோன்கள் வாங்க விரும்பும் சிறு, குறு, ஆதிதிராவிடர், பெண் விவசாயிகளுக்கு 50 சதவீத மானியம் அல்லது அதிகபட்ச மானியத்தொகையாக 5 லட்சம் ரூபாய் வழங்கப்படும். இதர விவசாயிகளுக்கு 40 சதவீத மானியம் அல்லது அதிகபட்ச மானியத்தொகையாக 4 லட்சம் ரூபாய் வழங்கப்படுகிறது.
வேளாண் பட்டதாரிகள் ட்ரோன் வாங்க அதன் அடிப்படை விலையில் 50 சதவீதம் அல்லது 5 லட்சம் ரூபாய் ஆகியவற்றில் எது குறைவோ அத்தொகை மானியமாக வழங்கப்படுகிறது. தமிழகத்தில் இரண்டு ட்ரோன் நிறுவனங்களின் இரண்டு மாடல்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. அவற்றில் விருப்பம் உள்ளவற்றை விவசாயிகள் தேர்ந்தெடுத்துக்கொள்ளலாம். இதை வாங்க விரும்பும் விவசாயிகள் < https://mts.aed.tn.gov.in/evaadagai > இணையதளத்தில் பதிவு செய்து மானியத்தில் பெற்று பயன்பெறலாம்’’ என உழவர் நலத்துறை அமைச்சர் எம்ஆர்கே பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
தற்போதைய யுகம் மெஷினரி யுகமாகிவிட்டது. அனைத்து பணிகளுக்கும் கருவிகள் வந்துவிட்டன. உழவு முதல் விதைப்பு, களையெடுப்பு, பராமரிப்பு, அறுவடை என அனைத்து பணிகளுக்கும் இயந்திரம் வந்துவிட்டன. இதனால் பணிகளும் எளிதாகிவிட்டன. விவசாய வேலைக்கு ஆட்கள் பற்றாக்குறை நிலவி வரும் நிலையில், கருவிகளே அனைத்து பணிகளுக்கும் கைகொடுத்து வருகின்றன. இந்நிலையில் தற்போது ட்ரோன் மூலம் வயல்களுக்கு பூச்சி மருந்து தெளிக்கும் பணிக்கு அதிகளவில் ட்ரோன்கள் பயன்படுத்தப்படுகின்றன. ட்ரோன்கள் நிலத்தின் மேல் பறந்து விரைவாகவும், நேர்த்தியாகவும் பூச்சி மருந்துகளைத் தெளித்து விடுகின்றன. இத்தகைய ட்ரோன்களை வாங்க மானியம் அறிவித்திருக்கிறது தமிழக அரசு. இதைப் பயன்படுத்தி விவசாயிகள்பயன்பெறலாம்.