மும்பை : மராட்டிய மாநிலத்தில் மூன்றே மாதங்களில் 767 விவசாயிகள் தற்கொலை செய்தது அதிர்ச்சி அளிப்பதாக மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி வேதனை தெரிவித்துள்ளார். மகாராஷ்டிராவில் இந்த ஆண்டு ஜனவரி முதல் மார்ச் வரை 767 விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டதாக அமைச்சர் மகரந்த் பாட்டீல் தெரிவித்துள்ளார். மகாராஷ்டிர சட்டமன்றத்தில் விவசாயிகள் தற்கொலை புள்ளிவிவரங்கள் குறித்த கேள்விக்கு மாநில நிவாரணம் மற்றும் மறுவாழ்வு துறை அமைச்சர் மகரந்த் பாட்டீல் அளித்த பதில் மூலம் இந்த அதிர்ச்சி புள்ளிவிவரங்கள் தெரியவந்துள்ளன.
இதனை மேற்கோள்காட்டி மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி வெளியிட்டுள்ள பதிவில், “யோசித்துப் பாருங்கள்.. வெறும் 3 மாதங்களில், மகாராஷ்டிராவில் 767 விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டனர்.இது வெறும் புள்ளிவிவரமா?, இல்லை. இவை 767 வீடுகள் அழிக்கப்பட்டதை குறிக்கிறது. 767 குடும்பங்களால் இனி ஒருபோதும் மீள முடியாது.விவசாயிகள் தற்கொலையை தடுக்காமல் மராட்டிய பாஜக அரசு வேடிக்கை பார்த்து கொண்டு இருக்கிறது. மராட்டியத்தில் விவசாயிகள் நாள்தோறும் கடனில் மூழ்கிக் கொண்டிருக்கின்றனர்.
விதைகள், உரங்கள், டீசல் ஆகியவற்றின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. ஆனால் விளைபொருளின் ஆதரவு விலைக்கு உத்தரவாதம் இல்லை. விவசாயிகள் கடன்களை தள்ளுபடி செய்ய கோரினால் அவர்கள் கோரிக்கை புறக்கணிக்கப்படுகிறது.மாறாக பெரும் பணக்காரர்களின் கடன்கள் மட்டும் எளிதாக மோடிஅரசால் தள்ளுபடி செய்யப்படுகின்றன. விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்குவதாக மோடி அரசு உறுதி அளித்திருந்தது. ஆனால், நாட்டுக்கே உணவு அளிக்கும் விவசாயிகள் இன்று அரைவயிற்றுக் கஞ்சிக்காக கஷ்டப்படுகின்றனர்,”இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.